வெள்ளி, 12 ஜூலை, 2019

தவளையும் தவணையும்

உலக வழக்கில் தவளைக்கும் தவணைக்கும் ஒரு தொடர்பும் இல்லைதான்.

தவளை என்பது தாவித் தாவி நகர்கின்ற அல்லது செல்கின்ற ஓர் உயிரி ஆகும்.  இவ்வுயிரியின் தாவுகின்ற செயலாலே அதற்குப் பெயரும் ஏற்பட்டது. இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.  நாவு தொங்குவதனால் நா >  நாய் என்று பெயரமைந்தது போலவே தாவுதலால் தவளைக்குப் பெயர் வந்தது. இது ஒரு காரண இடுகுறிப் பெயரே.  தாவும் வேறு எதற்கும் இப்பெயர் பொருந்துமாறு இல்லை.  தாவிச் செல்லும்  பைம்மா என்னும் கங்கருவுக்கு இப்பெயர் வழக்கில் வருவதில்லை.

தாவு + அளை =  தவளை.

இங்கு தாவு  அ என்பன தவ என்று திரிந்தமையின் நெடில் குறிலாய்த் திரிந்தது. இதுபோலும் நெடில் குறிலான இன்னொரு சொல்:  தோண்டு > தொண்டை.  தோண்டியதுபோல நீண்டு செல்லும் உணவு மற்றும் மூச்சுக் குழல்.

அளைதல் என்பது கலத்தலும் தழுவுதலும் குறிக்கும் சொல்.  குதித்துப் பின் தரைதழுவி மீண்டும் குதித்து நகர்தலை உடையது தவளை.

இச்சொல் பின் பிறமொழியாளராலும் ஏற்கப்பட்டுப் புழங்கப்பட்டது.

தவணை என்பது ஒரு செயலை ஒரே அடியாய்ச் செய்துமுடிக்காமல் விட்டுவிட்டுத் தொடர்தல். இன்று ஒரு பகுதி பணம் செலுத்திவிட்டு, அப்புறம் தாவி அடுத்த மாதம் ஒரு தேதியில் அப்பணத்தைச் செலுத்தி மீண்டும் தாவி இன்னொரு மாதத்திற்குச் செல்வதாதல் தாவித் தாவிக் காலத்தை அணைத்துச் செல்லும் முறையாகும்.

தாவு + அணை = தவணை ஆயிற்று.

முன் தந்த சொல்லில் போலவே இங்கும் தாவு  என்ற சொல்லின் முதலெழுத்துக் குறுகிச் சொல் அமைந்தது.

இனித் தவம் என்ற சொல்லுடன் உறவு உண்டோ என்று சிந்தித்துத் தெரிவியுங்கள்.

தவளைக்கும் தவணைக்கும் தாவலில் தொடர்பு உண்டு அன்றோ?

பிழை புகின் பின் திருத்தம்.

வெள்ளி, 5 ஜூலை, 2019

பாசுரம்

பாசுரம் என்ற சொல்லை முன் யாம் விளக்கியதுண்டு எனினும் இது வேறு ஒரு வலைப்பூவிலிருந்து போந்தது என்பது நினைவில் உள்ளது. 

பாசுரம் என்னும் சொல் பற்றிய சிந்தனையை ஈண்டு பதிவு செய்வாம்.

பா என்பது பாட்டு என்று பொருள்படும் தமிழ்ச்சொல் தான்.

சுரத்தல் என்பது வெளிப்படுதல் என்று பொருள்படும்.  அதாவது ஒரு பெரும் பற்றாளரின் வாய்மொழி மூலமாகவோ அவர்தம் எழுத்துக்களின்  மூலமாகவே இறைப்பற்று மேலவாக எழுதரும் பாடல்களே பாசுரம் எனத்தக்கவை.

பா+  சுர +  அம் =  பாசுரம்.

இதில் ஓர் அகரம் வீழ்ந்தது  .  சுர என்பதன் ஈற்றில் அகரம்;  அம் என்பதன் தொடக்கத்தில்  ஓர் அகரம்.   ஓன்று மறைதல் வேண்டும்.  இல்லையேல் ஒரு வகர உடம்படு மெய் தோன்றும்.

மறம் > மற + அர் >  மறவர்.    மற + வ் + அர். 

--  என அறிக.

தாயுமானவர்,   அருட்பிரகாச வள்ளலார் ஆகியவர்கள் பாசுரங்களின் ஊற்றுக்கள் ஆயினர்.

எழுத்துப்பிழைத் திருத்தம் பின்.

பசுவுக்கும் பழைய புதிய சொற்கள்.

பஷ்த்தவ என்பது பசுவைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல்.

ஆனால் தமிழில் பசு என்ற சொல் வழங்கிவருகிறது. இதற்கு நேரான நல்ல தமிழ் ஆ என்பது.

அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது.
ஆவிற்கு நீரென இரப்பினும் நாவிற்கு  ........

தமிழிலக்கியத்தில் வரும் இவ்வரிகளைத் தமிழறிந்தோர் மறத்தலும் ஒண்ணுமோ?

ஆவிற்கு இன்னொரு பெயர் உண்டாக வேண்டுமானால் அதை மிக்க எளிதாகவே உண்டாக்கி விடலாம்.  இதோ ஒரு புதிய சொல்:

பால் + சுரப்பது :
பா + சு    =  ப + சு   =  பசு ஆகிறது.

இதற்குப் பா என்ற நெடிலைக் குறிலாக்கிவிடுதலும்,  சுரத்தலுக்கு   ஒரு சு என்ற குறியை மட்டும் இட்டுக்கொள்வதும் போதும். ஒரு புதிய சொல் கிட்டிவிடுகிறது.

சொல்லொன்று புதிது கிட்டினால் சோறு கொஞ்சம் குழம்புடன் கிட்டினது போலுமே யாம்.

ஒரு சொல் வேண்டுமானால் அதைப் படைக்க, ஒரு குறிலை நெடிலாக்கலாம்;  நெடிலைக் குறிலாக்கலாம். ஒரு முழுச்சொல்லை தலையையும் வாலையும் கிள்ளிவிட்டுக் கூடையில் போட்டுக்கொள்ளலாம்.
ஒன்றுமே இப்படி நிகழ்த்தக்கூடாதாயின் எதையும் உண்டாக்க முடியாது.

புதிய சொற்களைப் படைத்தளிக்க முயல்வோர் ஏனிந்தத் தந்திரத்தைக் கையாளவில்லை?   அறியாமைதான்.

பால் தருவது பசு /  ஆ.

பால்த் தருவ    ல் >ஶ்;    தருவ > தவ    ரு > 0
= பாஷ்த்தவ

=  பஷ்த்தவ.

ஆக, இவ்வாறு சொற்களைப் படைக்க அறிவது திறமை ஆகும். 

எழுத்துப்பிழைகள் இருப்பின் பின் திருத்துவோம்.