புதன், 27 பிப்ரவரி, 2019

மூத்தோர்பால் அன்பு



தாத்தாவின் தாடிமீசை எப்படி ---அவர்
தருகின்ற அன்பினால் நான் இப்படி!
மூத்தோரும் இளையோரும் இப்படிச் ---சேர்வோம்
மூதறி வாளர்தம்  சொற்படி.


சனி, 23 பிப்ரவரி, 2019

தனம் தானியம் தனவந்தன்



இன்று தனம் தானியம் என்பன பற்றிக் கொஞ்சம் அிவோம்.

ஒரு தகப்பன் தன் இரு மக்களுக்குத் தன்‌ சொத்துக்களைப் பாகப் பிரிவினை செய்கிறான். பிரிந்த ஒவ்வொரு   பகுதியும்ஃ
ஒவ்வொரு மகனும் தனது என்று சொல்லக்கூடியது ஆகும். ஒருவனுக்குப் புதையல் கிட்டுகிறது, அது அவன் தனது என்று சொல்லிக்கொள்ளக் கூடிய செல்வமாகும். எம்மனிதற்கும்  தனதாக வந்து சேர்ந்த செல்வமே தனம் ஆகும், அடுத்தவன் வைத்திருக்கும் செல்வம் அடுத்தவனின் தனம்.

ஒரு குகையிலோ அல்லது காட்டிலோ மனிதர்கள் கூட்டமாக வைகிய ஞான்று அவர்கள் பயன்பாட்டுக்குரிய பல பொருள்கள் பொதுவுடைமையாய் இருந்தன. மனிதர்கள் பிரிந்து வாழத் தலைப்பட்ட போது  செல்வங்கள் சிலவற்றைச் சிலர் தனது - தமது என்றனர்.
து என்பது இலக்கணப்படி ஒருமைப் பொருள் தருவதால் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களை  தன, தம என்று அகர விகுதி இட்டுத்தான் சொல்வது இலக்கணப்படி சரியாக இருக்கும். தன் பொருட்களைப் பன்மையில் எடுத்துக்கூறவே தன என்ற சொல் பிறந்ததுதனியுரிமை க் கோட்பாடு தோன்றவே இதை விதியாகக் கொண்டு பிறழ்வோரைத் திருடர் என்று சொல்லவேண்டி  ஏற்பட்டது.
திருடு என்ற சொல் திரிபு என்ற சொல்லுடன் தொடர்பு உள்ளது சொற்பிறப்பு முறையிலேதிர் > திரி > திரிபுதிர் > திரு > திருடு, இது இயல்பினின்றும் பிறழ்வு என்னும் கருத்து.

தனம் என்பது இன்று பணம் நகைகள் என்று விரிந்தாலும் பண்டைக் காலத்தில பண்டமாற்று என்பதே வழக்கமாக இருந்ததால் தனம் - பொருள்களின் தொகுதி என்றே கொள்ளுதல் வேண்டும்.

தன் > தன (பொருட்தொகுதி ) பன்மை வடிவம்.
தன > தனம்.

தனது மாடு. ( மாடு - ஒருமை; தனது - ஒருமை )
தன மாடுகள் ( இரண்டு சொற்களும் பன்மை ).
தன் மாடு,மாடுகள் ( இரண்டிலும் பொருந்தும் ).

இவ்வாறு தனம் என்ற சொல்லின் தமிழ் மூலமறிக.

ஆனால் தானம் என்பது தா என்பதனடிப் பிறந்த சொல். தா என்பது கொடு என்பதுபோலும் வினைச்சொல். ஒப்புடையோன்பால் ஏவலாகும்.

தனம் என்பது தன் என்பதனடிப் பிறக்க, தானியம் என்பது தான் என்பதனடித் தோன்றியது ஆகும். இறையாகச் செலுத்தியது போக ,தான் வைத்துக்கொள்ளும் கூலமே தானியம் ஆகும். இது முன் விளக்கம் பெற்றுள்ளது. முன் இடுகைகள் காண்க.

தன   வந்தன்

ஒருவனுக்குத் தனம் கிட்டிவிடுமாயின் அவன் " தனம் வந்தவன்" ஆகிறான். இந்தப் பேச்சு வழக்கு வாக்கியமே " தனவந்தன் " என்று ஒரு சொன்னீர்மைப் பட்டுச் சுருங்கிற்று. தனம் வந்த அவன்> தனம் வந்த அன் > தனவந்தன். இதில் வந்துள்ள மாற்றங்களை அறிந்துகொள்க.

இவற்றுள் அயன்மை யாதுமில்லை.





வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

தான்வந்தர முனிவர்

இன்று தான்வந்தரம் என்ற சொல்லைப் பார்ப்போம்,

தான்வந்தரம் தைலம் என்று ஒரு தேய்த்துக்கொள்ளும் எண்ணெய் உள்ளது.  இது நாட்டுவைத்தியம் செய்வோரிடையிலும் செய்துகொள்வோரிடையிலும் மிக்கப் புகழ் எய்திய ஓர் எண்ணெய் ஆகும். தலைக்குத் தான்வந்தரம் தைலமும் உடம்புக்குச் சீரபலாத் தைலமும் தேய்த்துக் குளித்தால் சில உபாதைகள் நீங்குவதாகக் கூறுவர்.  நரம்புத் தளர்ச்சியை விலக்குவன இவை என்பர்.  தான்வந்தர முக்கூட்டு என்றொரு தைலமும் கேரளத்தாரால் பயன்படுத்தப்படுகிறது. இவை யாம் சில ஆண்டுகட்கு முன் கேள்விப்பட்டவை ஆதலால் சரியாக ஒப்பிக்கிறேமா என்று ஐயப்பாடு உள்ளது,  நீங்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள்.

தான்வந்திரி ( தான்வந்தரி ) என்பது ஒரு முனிவரின்  பெயராம். இவர்தாம் தம் நூலில் இத்தைலம் ( தான்வந்தரம்)  பற்றிக் கூறியுள்ளார் என்ப.

தான்வந்தரி ஒரு பெரிய மருத்துவ நூலார்.  இவர்பற்றிச் செய்திகள் இப்போது கிட்டிட வில்லை.

எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை. தானே வந்த அரிய முனிவர் என்ற பொருள்படும் இவர் பெயர் ஒரு காரணப்பெயரே ஆகும்.

தான் :  தானேயாக.
வந்து :  தோன்றிய
அரு :   அரிய
இ:  விகுதி.

தானே வந்து மக்களிடம் தோன்றிய அரிய முனிவர்
தான்வந்தர முனிவர்

அரு> அரி என்பதற்குப் பதில் தான்+வந்து + இரி என்பதே சொல்லின் வடிவமாகவும் இருத்தல் கூடும்.  இரு என்ற வினை இரி  என்று கேரள நாட்டில் வழங்கும்.அவ்வாறாயின்  அரிய முனிவரென்பதற்குப் பதிலாக வந்து இருந்த முனிவர் என்று பொருள்கொள்ளுதல் வேண்டும்.  இதில் சிறப்பில்லை. அரிய முனிவர் என்பதே அவர்க்குப் பெருமை சேர்ப்பது. செயற்கு அரிய செய்த அருமுனி அவரென்பதனால் என்று கொள்க.  மேலும் இஃது அவர்க்கு வழங்கிய சிறப்புப் பெயர்.  அவர்தம் இயற்பெயர் எமக்குக் கிட்டவில்லை,  செயற்கரிய செய்த பெரியவரே இவர்.

நோய் தீர்க்கத் தைலம் தந்த இம்முனிவரைப் பாராட்டுவோமாக.

இவர்பற்றிய அரிய செய்திகள் உங்கட்குக் கிட்டுமாயின்  அல்லது  நீங்கள் அறிந்திருப்பின் இங்குப் பின்னூட்டமிட்டுப் பகிர்ந்து கொள்ள வருக.