வியாழன், 13 டிசம்பர், 2018

வினையிலிருந்து இன்னொரு வினைச்சொல் உருவாக்கம்

தமிழ்மொழி தனக்கு வேண்டிய சொற்களைத் தானே படைத்துக்கொண்டது. இதனை சொல்லித் தெரிந்துகொண்டதில்லை.  ஆய்வே ஆசிரியன். இப்போது இதனைச் சில சொற்களைக் கொண்டு நிலைநாட்டுவோம்.  பிறரும் கூறியிருத்தல் கூடும். சொல்லாய்ந்த யாவருடைய நூல்களும் நமக்குக் கிடைக்கவில்லை; சிலவே கிட்டின.  ஆகவே எங்காவது யாம் படிக்காத நூலொன்றில் கூறப்பட்டிருக்கலாம். எமக்கும் படித்தவை சில இப்போது நினைவிலில்லை.

ஒரு பொருள் இன்னொரு பொருளை அடுத்துச் செல்கிறது.

அடு >  அடுத்தல். (வினைச்சொல்).

அடுத்த பொருள் நின்ற பொருளைப் போய் அடைக்கிறது.

அடு >  அடு+ ஐ >  அடை

அடை > அடைத்தல்.   அடைதலுமாம்.

இவ்வாறு வினையினின்று இன்னொரு வினைச்சொல் தோன்றுகிறது.

சில பொருள்கள் தண்ணீரை இழுத்துக்கொள்கின்றன.  துணி காகிதம் முதலியன அத்தகையவை.  ஈர்த்தல் என்பது இழுத்துக்கொள்ளுதல் என்று பொருள்படும்.  இழுக்கப்பட்டு உள்ளிருக்கும் நீர்ப்பதம் ஈரம் எனப்படும்.  இது
ஈர்+ அம் என்று பகுதி விகுதிகள் புணர்த்த சொல்லாகும்.

ஈர் ( வினை ) > ஈரித்தல்.  (  நீரால் ஈரம் கொள்ளுதல் ). (  இன்னொரு வினைச்சொல்).

வேண்டின் ஈர்ப்பித்தல் என்றொரு சொல்லையும் உண்டாக்கலாம்.  இது இழுக்கச் செய்தல் என்று பொருள்படும். பிறவினை என்பர்.  ஈர் என்பது தன்வினை.

அறிந்து மகிழ்வீர்.

எழுத்துப்பிழைகள் திருத்தம் பின்.

புதன், 12 டிசம்பர், 2018

அரசன் என்ற சொல்

அரசன்  என்ற சொல்லினைப் பற்றிச் சிந்திப்போம்.  இன்று பல நாடுகளிலும் அரசன் என்ற சொல் பெரிதும்  வழங்கவில்லை என்றாலும் அரசு என்பது வழங்கி வருகிறது.  ஒரு நூறு  ஆண்டுகளின் முன்  அரசு என்பது பெரிதும் வழங்கவில்லை என்று தோன்றினாலும் அதற்கான ஆதாரங்கள் எமக்கு கிடைத்தில.  பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளை நோக்கினால் "அரசாங்கம் "  என்ற சொல் வழக்கில் இருந்தது தெரிகிறது.  "அரசாங்கத்துக்  கோழிமுட்டை அம்மிக் கல்லை உடைக்கும் " என்பது தமிழ்ப் பழமொழிகளில் ஒன்றாகும்.

அரசு அல்லது அரசாங்கம் என்பதென்ன?  அதன் வரையறவு என்ன? என்பதை பல அறிஞர்கள் ஆய்ந்துள்ளனர்.  இவர்களில் லெனின் முதல் செயின்ட் தாமஸ் அக்குவினாஸ் வரை அறியப் படுகின்றனர். பிறப்பினால் பட்டம் சூட்டிக் கொண்டு நாட்டை ஆள்பவன் அரசன் என்று நாம் குறித்துக் கொள்ளலாம். நம் பயன்பாட்டுக்கு இது போதுமானது ஆகும்.

அரசன் இன்றியோ இருந்தோ  ஆட்சிக் குழுவினால் ஆளுதல் நடைபெறுமாயின்  அது அரசு என்னலாம் .

அரசு என்ற சொல்லுக்கு வருவோம்.

அரட்டு என்ற சொல்  தமிழ்ச் சொல். அது ஒலி எழுப்பி அச்சுறுத்தல்  என்ற \பொருளில்  இன்றும் வழங்குவதாகும் .  ஒரு பத்துப் பேரை வைத்து இயக்குபவன் வலிமை உடையவனாக இருக்க வேண்டும். அவன் பலமாக எதையும் அவர்கள் முன் சொல்வோனாக இருக்க வேண்டும். கத்தி அதட்டுதல்
தேவைப்படும் ஓர் அமைப்பெனல் தெளிவு.  பலர் அச்சத்தின் காரணமாகப்  கீழ்ப்படிதல் உண்மை.  அத - அர என்பன தொடர்புடைய சொற்கள்.

கட்டளை இடும் வலிமை உடையவனே அரசன்.  அவன்றன்  அதிகாரம் நிலைநாட்டப்பெற்ற பின்புதான் இயல்பாகக் கீழ்ப்படிதல் பின்பற்றுதல் முதலியவை தொடங்கும்,  நடைபெறும்.  அர என்ற அடிச்சொல் முன்மை வாய்ந்த சொல் ஆகும்.

அர > அரசு.   இதில் சு என்பது விகுதி.  இதுபோல் சு விகுதி பெற்ற சொற்கள் பல. எடுத்துக்காட்டாக ஒன்று:  பரி > பரிசு.  பரிந்து வழங்குவது பரிசு.   பரிதலுக்குப் பின் காரணங்கள் இருக்கலாம்.  அவை வேறு.

இப்போது அர என்ற அடிச்சொல்லை அறிந்துகொண்டோம்.



 

செவ்வாய், 11 டிசம்பர், 2018

பூச்சியம்

தமிழிலுள்ள எண்ணுப்பெயர்கள்  அடிப்படையாக ஒன்றுமுதல் ஒன்பது வரை. ஒன்றுமின்மையைக் குறிக்க இப்போது ஒரு சுழியம் இடப்படுகிறது.  இதற்குப் பூச்சியம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப் பூச்சியத்திற்கு வேறு பெயர்களும் உண்டு. சுன்னம், சுழி, சோகி ( சோதிடக்கலையில் ) என்பனவும் இதைக் குறிக்கவரும் என்று தெரிகிறது.

பூசுதல் என்பதொரு வினைச்சொல். இதற்குச் சித்திரமெழுதுதல் என்றொரு பொருளும் உண்டெனினும் வரியை இழுத்தல், வரி உண்டாக்கிக் கோடுகளைத் தொடர்புறுத்தல் என்றும் பொருளாகும்.

ஒரே கோட்டினைத் தொடர்புறுத்துவதாயின் அக்கோடு சுற்றிவந்து தொடங்கிய இடத்தையே தொடவேண்டும். இதுவே எளிதான தொடக்கம் தொடுதலாகும்.  இன்னும் கோழிமுட்டை என்றொரு பொருளும் உள்ளது.

இவற்றை நோக்க பூசுதல் என்ற வினைச்சொல்லிலிருந்து பூச்சியம் தோன்றியதை உணரலாம்.

பூசு > பூச்சு > பூச்சியம்.

பூசு + உ :  பூசுதலில் முன் செல்லுதல்.  இது பூச்சு என்று உருக்கொள்ளும்.

பூச்சு+  இ  :  பூச்சு இங்கே ( தொடக்கத்துக்கே) வந்துவிடுதல்.

எனவே இதிலுள்ள துண்டுச்சொற்கள்:

பூசு  ( வினைச்சொல்)

உ:   ( முன் செல்லுதல் )  சுட்டுச்சொல்.

இ  (  திரும்பி இங்கே வந்துவிடுதல் )  சுட்டுச்சொல்.

அம் என்பது அமைவு காட்டும் விகுதி.

இவை அனைத்தும் இணைக்க பூச்சியம் என்ற சொல் கிடைக்கிறது.

இது பூச்சுவேலை செய்தவர்களால் அல்லது வண்ணம் தீட்டுவோரால் அமைக்கப்பட்ட சொல் என்பதில் ஐயமில்லை.  ஆனால் நன் கு அமைக்கப்பட்டுள்ளது. சுட்டுக்களைப் பயன்படுத்தியதும் திறமை ஆகும்.a

அட்க்குறிப்பு:

பூஜை ( பூசை) என்பதிலிருந்து பூஜ்யம் வந்ததென்பது முன்னையோர் கருத்து.
பூஜை மதிப்பிற்குரியது ஆதலின் பூஜ்யமுன் மதிதக்கது என்பது அவர்கள் கருந்து. இதனினும் வரைந்து இணைத்தல் என்ற பூசுதல் என்ற சொல்லிலிருந்து வந்ததென்பது இன்னும் மிக்கப் பொருத்தமானது ஆகும். முன்னையோர் பூசுதல் என்னும் சொல்லைஆயவில்லை.