திங்கள், 19 நவம்பர், 2018

உணவும் அளவும்

சருக்கரை நோயில் ஒருகால் எடுத்துவிட்டால்
இருக்கவும் நடக்கவும்  அடைவது துன்பமதே.
உருக்கென ஊட்டமாய் வளர்ந்த உடம்பெனினும்
பருக்கை மிகுதியால் பாழ்படக் கெடும்பலர்காண்.

உண்பதும் கணித்தினி அளவுடன்  செய்திடுவாய்
பண்புடன் உணவினை அமைத்துப் பாரினில்வாழ்;
கண்படும் உண்பொருள் அனைத்தும் விழைந்திடிலோ
விண்படும் நோய்களும் விரைந்து வந்திடுமே.


உருக்கு :  இரும்பு.

பருக்கை மிகுதியால் பாழ் :   இது இரத்தத்தில் இனிப்பு
கூடுவதால் ஏற்படும் நலமின்மை;

பலர் கெடும் காண் -   பலர் இன்னும் கெட்டு பொது உடல்
நலக் கேட்டை அடைதல்  காண்க .

அதாவது கெடுதல் ஒன்று இன்னொன்றுக்கு வழி செய்தல்.

இனிப்புநீரும் காலும்.

இனிப்புநீர் நோயாளிகளுக்குக் கால்தான் மிக முக்கியமானது என்று கூறுவதிலும் உண்மை இருக்கிறது.

அம்மையார் ஒருவருக்கு காலில் சேற்றுப்புண் வந்துவிட்டது.  இவ்வகையான புண் வந்து அப்புறம் அது தானே ஆறிப்போய் நன்றாக இருந்தவர்களும் பலராவர்.

ஆனால் இந்த அம்மையாருக்கு வந்தது கொஞ்சம் 'பிடிவாதமாய்'  ஆறாப்புண்ணாக இருந்துவந்தாலும்  பலவகைக் களிம்புகள் தைலங்களைத் தேய்த்துக்கொண்டு அம்மையார் கவனிக்காமல் இருந்துவிட்டார்.  யாரும் கேட்டால் கடவுள் கவனித்துக்கொள்வார் என்று சொல்வார்.

நாளடைவில் காலில் நோய்நுண்மிகள் நச்சுத்தன்மையைக் கக்குவனவாக மாறிவிட்டன. ஒற்றைக் கால் வலிமை இழந்ததுடன் மருத்துவர்கள் அதனை அறுவை செய்து எடுத்தாலே பிழைக்கமுடியும் என்று சொல்லிவிட்டனர்.

கால் போனபின் சக்கர நாற்காலியில் கட்டுண்டவராக இருந்தவர் பலமுறை மருத்துவமனையில் தங்கியும் சிகிச்சை பெற்றார். ஐந்தாண்டுகள் இவரை மருத்துவர்கள் காப்பாற்றினர். இனிப்பு நீர் நோய் கூடிவிட்டது.  இந்நிலையில் இருநாட்களுக்கு முன் அவர் உயிரிழந்தார்.

அவ்வம்மையாரின் ஆத்ம சாந்திக்கு வேண்டிக்கொள்கிறோம்.

 இதுபோலத்  துயர் உறுவோர் பலர் என்பதை அறிவோம். இனிப்பு நீர் இருந்தால் கால்களை நல்லபடியாகக் கவனித்துக்கொள்ளுங்கள். ஏதேனும் காயமோ புண்ணோ ஏற்பட்டால் அதற்கு முதன்மை கொடுத்து உரிய மருத்துவ உதவியைத்  தாமதம் இன்றி நாடுங்கள்.


வெள்ளி, 16 நவம்பர், 2018

மந்தி பெயர் அமைவு

மந்தி என்பது ஒரு விலங்கின் பெயர்.

விலங்கு என்ற சொல் மனிதரிலிருந்து வேறாக விலக்கப்பட்ட ( உயிரிகள் ) என்று பொருள்தருஞ்  சொல்.  வில -  விலக்கு;   வில -  விலங்கு. மூலச்சொல் வில் என்பதுதான். அதை முன் விளக்கியுள்ளேம். பழைய இடுகை காண்க.

மக என்ற பிறப்புக் குறிக்கும் சொல் ம்ருக என்று அயல்திரிபு அடைந்தது. அதிலிருந்து மிருகம் என்ற சொல் அமைவானது.   மகம் >   மிருகம்.  மகமென்பது ஒரு நக்கத்திரத்தின் ( நட்சத்திரத்தின் ) பெயராய் அமைந்த அல்லது உருவான உடு என்னும் பொருளைப் போதருவிக்கின்றது.  இன்பம் என்பது எப்போதும் இருப்பதன்று.  அப்போதைக்கப்போது உண்டாகி மறைவதாம்.  இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும்.  ஆதாலின் அவ்வப்போது வாழ்க்கையில் உண்டாவது என்ற சொல்லமைப்புப் பொருளில் மகம் என்பது இன்பத்தையும் குறிப்பது.

பிற அணியில் உள்ளவை பிறாணி;  பிறாணி > பிராணி. இது வேறு இடுகையில் விளக்கப்பட்டுள்ளது.  பிராணி > பிராணன். (  உயிர் ).  மக்கள் அணி அல்லாத பிற அணியின பிராணி எனப்பட்டன.  ற > ர திரிபு.

மந்தி என்ற சொல்லுக்கு வருவோம். இது:

மன் + தி = மந்தி என அமைந்தது.

எழுத்துப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு.

முன் > முந்தி;  பின் > பிந்தி,   தொல்>தொன்>தொந்தரவு;  மன்+திறம் = மந்திரம்.  இது ற>ர திரிபு.  திரம் என்பது ஒரு விகுதி.  திறம் என்பதிலிருந்து வந்தது ஆகும்.

மனிதன்.  மாந்தன் என்ற அவ்வடிச்  சொல்லினின்றே மந்தி என்பதும் தோன்றியுள்ளது.

மந்தி :   எனவே மனிதன் போன்ற விலங்கு என்பது பொருள்.

மன் > மன்+  இது + அன் = மனிதன்
மன் > மான் > மான் + து + அன் = மாந்தன்.
மன் > மன்+தி > மந்தி.
மன் > மான் + இடன் >  மானிடன்.

இது,  து,  இடம் என்பன சொல்லிடைநிலைகள்.

மன்னுதல்:  நிலைபெறுதல்.  மனிதன் தன்னை நிலைபெற்ற உயிராகக் கருதிக்கொண்டான்.  அதுவே அவன் அமைத்த சொல்லிலும் காணப்படுகிறது.
மந்தி என்ற சொல்லில் அவன் அவ்விலங்கின் மனிதப்போன்மையை ஒப்புக்கொள்கிறான்.  மன் என்பது முன்> முன்னுதல் என்பதன் திரிபு என்பார்
பிற ஆய்வாளர். முன்னுதலாவது சிந்தித்தல்.

திருத்தம் பின்.