கேரள மொழியில் "கீழே" என்பதை "தாழ" என்றுதான் சொல்வார்கள். தாழ்தல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இதுவும் பொருத்தமானதே ஆகும். தமிழிலும் கதவின் கீழ்ப்பக்கத்தில் இடப்பட்டு அது திறப்பதைக் கட்டுப்படுத்தும் கோலுக்கு " தாழ்க்கோல்" என்று சொல்வதுண்டு.
தாழ்க்கோல் என்பது பேச்சில் தாக்கோல் என்றும் திரிந்து வழங்கும். இதற்கு மற்ற பெயர்கள்: தாப்பாள், தாழ்ப்பாள் என்பன. சிலர் தாப்பா என்றும் சொல்வதுண்டு.
தாழ்ப்பாள் என்பது:
தாழ் > தாழ்ப்பு > தாழ்ப்பு+ ஆள் > தாழ்ப்பாள்.
முற்காலங்களில் தாழ்ப்பாள் என்பது மரத்தினால் அல்லது கட்டையினால் ஆனதாக இருந்தது. இன்றும் சில பழங்குடிகள் வாழும் சிற்றூர்களில் மரத்தினால் ஆன தாழ்ப்பாள் இடப்படுவதுண்டு.
தாழ இடப்படும் கோல்போல் இன்னும் பாதுகாப்பாக மேற்பக்கத்திலும் கதவில் ஒரு கோல் இடப்படுவதுண்டு. இதற்கும் "தாழ்ப்பாள்" என்றுதான் பெயர். இதற்கு மேற்பாள் என்று பெயர் ஏற்படவில்லை. இதற்கு ஒரு புதுப்பெயர் தேவையற்றது என்று மக்கள் கருதிவிட்டனர். தாழ் என்ற சொல்லில் உள்ள இடக்குறிப்பைக் கருத்தில் கொள்ளாமல் தாழ் இருந்தாலும் மேலே இருந்தாலும் தாழ்க்கோல் என்று குறித்தால் போதுமானது என்று முடிவு செய்தனர், அச்சொல்லினைப் பயன்படுத்துவோர்.
இப்படி மொழியில் பயன்படுத்துவதை இலக்கணம் தவறு என்று ஒதுக்குவதில்லை. அந்தப் பொருளைக் குறிக்க ஒரு சொல் வேண்டும். அது தாழ்க்கோல் என்று இருந்தால் என்ன? டுங்டோங்க் என்று சீனச்சொல்போல் இருந்தால் என்ன? இன்றிலிருந்து நான் டுங்டோங்க் என்று சொல்லும்போதெல்லாம் நீ தாழ்க்கோலைக் குறிக்கிறேன் என்று தெரிந்துகொள். அதற்கு வேறு பொருளில்லை என்று வரையறுத்துவிட்டால் அதுவும் கடைப்பிடிக்கப்படுமானால் அது அதற்குப் பெயர். அவ்வளவுதானே. ஒரு மொழியின் நோக்கம் என்பது நன்றாகவே நிறைவேறிவிட்டது அன்றோ? டுங்டோங்கை விடச் சிறந்த சொல் உலகில் வேறில்லை. இப்படி ஒவ்வொரு சொல்லும் எதைக் குறிக்கிறது என்று வரையறுக்கப்பட்டதுதான் மொழி எனப்படுகிறது. பேசுவோரிடையே ஒவ்வொரு மொழியிலும் ஓர் வரைவறவுள்ள ஒப்பந்தம் இருக்கிறது, அது எழுத்திலில்லா ஒப்பந்தம். அதைக் கடைப்பிடிக்கின்றனர். அதனாலும் மொழி வாழ்கிறது.
தாழ் என்ற சொல் தாழ்விடம் குறிக்காமல் மேலிடத்தையும் உளப்படுத்துமாயின் அச்சொல் தன் வரையறையை மீறிப் பொருள் விரிந்தது என்பதை இலக்கணம் ஒப்புக் கொள்கிறது. ஒரு காரணத்தால் அப்பெயரில் "தாழ்" போய்ப் புகுந்தது. அப்போது அதற்குக் கீழ் என்று பொருளாய் இருந்தது, அப்புறம் அது மேலையும் குறிக்குமானால் அந்நிலையில் அது காரண இடுகுறி ஆகிவிடுகிறது. அறவே காரணம் அறியமுடியாத பெயர்களும் மொழியில் உள்ளன. அவை வெறும் இடுகுறிகள் எனப்படுகின்றன.
சொல்லாய்வின் மூலம் முன்னர் காரணம் அறியப்படாத பல சொற்களின் பொருளை நாம் இன்று கண்டு மகிழ்கிறோம். இப்படி அறிவதன்மூலம் ஒரு பொருள் உண்மையில் எதைக் குறிப்பிடுகிறது என்று நமக்கு ஏற்படும் மாறாட்டத்தை மாற்றிக்கொண்டு சொல்லினைத் தக்கவாறு வாக்கியங்களில் பயன்படுத்தச் செய்கிறோம். நம் எழுத்துத்திறன் மேம்படுகிறது. கருத்தறிவிக்கும் நம் மொழியின் நோக்கமும் செவ்வனே நிறைவடைகின்றது. இனி வரும் புதிய பொருள்களுக்கும் எப்படிப் பெயரிடலாம், பெயரிடுவதில் என்னென்ன உத்திகளையும் தந்திரங்களையும் கையாளலாம் , எப்படி இனிய சொற்களைப் படைத்து இன்புறுத்தலாம் எனப் பல்திறன் அடைகின்றோம்.
நல்ல பெயரானால் மக்கள் விரும்பும் மனிதராக வாழலாம் என்பதைத் தலைவர்கள் பலர் கண்டு பயன்படுத்திக்கொண்டுள்ளனர். காந்தி என்ற பெயர் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகிறது.
பாணன் என்பது ஒரு குலத்தொழிலரின் பெயர். பெயரில் குலம் பற்றி ஒன்றுமில்லை. பாண் என்றால் பாட்டு. பாடுகிறவன் பாணன். அவ்வளவுதான். ஆனால் இவர்கள் ஒரு குழுவினராக வாழ்ந்து குமுகத்தில் தொழில் நடத்தினர். அதனால் ஏற்புடைமை பெற்றனர். ஒரு பாணர் வடமொழிக்கு இலக்கணம் எழுதப் புகுந்தார். தம் இயற்பெயரால் தமக்குமட்டும் பெருமை தேடிக்கொள்ளாமல் தம் கூட்டத்தினருக்கும் பெருமை தோன்றும்படி விளங்க எண்ணினார். ஆகவே தம் குலப்பெருமை மேலோங்குமாறு பாண்+இன்+இ = பாணினி என்று வைத்துக்கொண்டு, பாணினியின் இலக்கணம் என்று தம் இலக்கண நூலை
வெளியிட்டார். எழுதியோன் பாணர் குலத்தினன் என்பது இதன் திரண்ட பொருள். இவ்வியல் இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றது. இதேபோல் வால்மிகியாரும் தம் இனப்பெயராலே தம்மைக் குறித்துக்கொண்டு இராமயணக் காவியத்தை இயற்றினார். மீனவப் புலவனான வேதவியாசனும் தம் மீனவக் குலப்பெயர் விளங்க மகா பாரதம் என்று தம் நூலுக்குப் பெயரிட்டார். பரதவர் எனின் மீனவர் என்பது. பரந்தது விரிந்தது அகன்றது என்றால் அது கடல். பர > பரதவர் என்றால் கடலில் தொழிலுடையோர். அவர்கள் பின் ஆட்சியாளர்கள் ஆயினர்.பாண்டிய மன்னருக்கும் கொடியில் மீன் இடப்பட்டுள்ளதையும் கருதவேண்டும். பண்டை இருந்தோர் பாண்டவர் எனப்பட்டனர். இப் பண்டை நிகழ்வுகளிலிருந்து நமக்குப் "பாரதம்" என்ற நாட்டின் பெயரும் கிட்டியது. ஆனால் காலக்கழிவினால் பரதவர், பரவை, என்பதில் உள்ள மீன் தொடர்பு இன்று மறைந்துவிட்டது. மனித நாகரிகம் என்பது பெரிதும் கடலையும் ஆறுகளையும் வனங்களையும் சார்ந்து எழுந்ததாகும். இதனைத் தமிழ்ச்சொற்கள் இன்றும் காட்டுகின்றன. சொற்களை ஆய்ந்து நாம் வரலாற்றையும் சிறிது கண்டுணர லாகும்.
ஆரியர் என்போர் இந்தியாவிற்குள் வந்தனர் என்ற கதையும் சொற்களை ஆய்ந்ததன் பயனாய்க் கூறிய தெரிவியலே ஆகும்.
இனித் தாழ்ப்பாளுக்கு வருவோம். தாழ இருக்கும் கோல்தான் கதவை ஆள்கின்றது, அடைத்தல் திறத்தல் தடுத்தல் விடுதல் எல்லாம் அதன் ஆட்சிச் செய்கைகள். அச்சொல்லின் ஆள் என்பது நன்றாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது, பழைய பாட்டுப்பெட்டிகளில் இருந்த சுருள்விரி எந்திரம் தகுந்தமுறையில் சுற்றுகின்ற இயக்கத்தை ஏற்படுத்த "கவர்னர்" என்றோர் கட்டுப்பாட்டுக் கருவையை வைத்திருந்தனர். இன்றும் வேறு இயந்திரங்களிலும் மட்டுறுத்தும் உறுப்புக்ள் உள்ளன.
தாழ்ப்பாள் என்பது தாப்பாள் ஆனது திரிபு. ழகர ஒற்று மறைந்தது. இதேபோலத் தாழ்வரம் ( தரையில் முளைத்து வருபவை) ழகர ஒற்று இழந்து தாவரம் என்றாகும். இனி, வகரம் பகரமாகுமென்பதால் தாவரம் என்பது தாபரமும் ஆகும்.
தாபரம் என்பதற்குத் தாழப் பரவும் செடிகொடிகள் என்று பொருள். பர என்பது பரமாகும். பரத்தல் : பர+ அம் = பரம். தாழ்+ பர + அம் = தாபரம். (ழ்)
தாழ அணியப்படுவது தாழ்வணி: இது தாவணி ஆனது. ழகர ஒற்று வீழ்ந்தது. தாழ்மதித்தல் தாமத்தல் ஆனது. தாழ ( நீருடன்) மருவி நிற்பது தாமரை என்றனர். தா+மரு+ஐ.
அறிந்து மகிழ்வோம்.
பிழைத்திருத்தம் பின் கவனிக்கப்படும்.