புதன், 6 ஜூன், 2018

பணம்பெற்று நடந்த ஆர்ப்பட்டம்

ஓரிடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த தொன்று:
போராட்டம் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்  என்றார்:

ஆக்கியதோ  ஓஓஓ ஆஆஆ என் கின்ற  ஒலிகள்
ஊக்கமுடன் அனைவருமே ஒன்றெனவே நின்றார்.

பார்க்கின்ற  பொழுதினிலே பகலோனின் ஒளிபோல்
வேர்க்கடியில் பணம்பெற்று விளைத்ததென்று கண்டார்.

வீட்டுக்குப் போவென்று வெள்ளையப்பன் தன்னைப்
பாட்டுக்குத் தந்தார்ஆர்ப் பாட்டத்தை வென்றார்.


பணம் பெற்றுக்கொண்டு நடத்திய ஆர்ப்பாட்டம்;
பணம் பெற்றுக்கொண்டே கலைந்தது, 
அதுதான் மக்களாண்மை!


(மக்களாண்மை -  ஜனநாயகம்.)

திங்கள், 4 ஜூன், 2018

பால் ஊற்றிப் போராட்டம்.

உண்பதற் குரியவை  பால்காய் கறிகள்
ஊற்றியும் வீசியும்  வீண்செய லாமோ?
பண்படும் அறிவினர் கண்கெடப் பலரும்
பார்த்திடச் செய்தனர் பாழ்படு செயலே.

கட்சி  காரர்கள்  உச்சியின் அடியில்
கருத்துகள் நல்லன உருத்துவ ராதோ?
இச்சைப் படுவன எதனையும் இயற்றி
இறக்கம் கண்டிடக் கிடைக்குமப்  பலனே.


உச்சி :  மண்டை உச்சி.
அடியில்: உச்சியின் அடி:  மூளைப்பகுதி.
உருத்து =  தோன்றி

பொறாமை வண்டு,

அடுத்தகத்துக்  குடியிருக்கும் மாந்த குமாரி
அழகியஎம் மலர்களையே தொட்டாய் கேட்டுக்
கொடுத்ததுபோல் தடவிவிடும் பாங்கு கண்டு
குமுறுதெங்கள் மென்மனங்கள்  கொத்து வேன்நான்!

என்றபடி என்னருகில வந்த வண்டே
என் கையில் கொட்டியதே!  புண்ணு மாச்சே.
இன்றதுவும் பெரியபுண்ணாய் என் தே கத்தில்
இருக்கிறதெ...வலிகொஞ்சம் இ ருக்கு தம்மா.

மலருக்கு மலர்தாவும் சிறிய வண்டே
மனிதர்வந்து மலர்தொடவும்  மறுப்ப தென்னே?
சிலமனிதர்க் கிருக்குமொரு குறுக்குப் புத்தி
சேராத உனக்கிருத்தல் தேரச் செல்வாய்.


அடிக்குறிப்புகள்:

மாந்த குமாரி   =  மனித குமாரி.
சேராத =  மனித இனத்திற் சேராத.

சொல்லாய்வுக் குறிப்புகள்:

தேகம் :  தேய் >  தேய் + கு+ அம் = தேய்கம்
தேய்கம் > தேகம்.    தேய்தல் அல்லது அழிதலை
உடையதாகிய உடல். இது காரணப் பெயர்.

மன் > மன்+தன் = மாந்தன்:  இங்கு முதனிலை
நீண்டு சொல் அமைந்தது.  தன்: து+அன்.
மன்+ இது+ அன் = மனிதன்.
இதில் முதனிலை நீளவில்லை.  இது என்ற
முழுச் சுட்டுச் சொல்லும் இடைநிலையாகப்
பயன்பட்டுள்ளது.   மன் என்பது அடிச்சொல்.