ஞாயிறு, 20 மே, 2018

ஊழல் வேண்டுமோ? தூய்மை வேண்டுமோ?


(கலிவெண்பா )

ஊழலை முன்வைத்து  வாழ்வ  தெலியது
பாழுடை வீடெனில் கொள்வது துள்ளலே!

ஓட்டைகள்  போட்டுமே  மாட்டுவ தின்றியோர்
கோட்டையில்  போல குதூகலம் கூட்டுதல்..

நாட்டிலும் ஆதிறம் நாடிடு  மாந்தர்கை
யூட்டி னில்  ஓங்குதல் எங்கும்கண்  கூடு்ணர்!

 சட்டப்  படிவழிக்  கிட்டா  உரிமமே
கொட்டிக் கொடுத்தால் வசதியே கிட்டுதல்.

ஊழல்  வளாகத்தும் நன்மை உளதெனில்
வாழும் நலம்பெற வாய்ப்புறா  ஊழல்.

திறமொன் றிலாதார் பெறுவர்  முனைவர்
திறமுடை யோர்கீழ் இருப்பவர் காண்கவே..

ஊட்டினைப் பெற்றோரும் ஓட்டுவர் காலமே
காட்டில்  விலங்கென நாட்டிடும்  ஆட்சியே.

ஊழலைப் போற்றுவோர் பாதி உலகினில்
வாழ்முறை போற்றுவோர் பாதி உளரிவண்,

ஊழலும் ஆங்காங்கு வெல்லுமே ஓங்கிட
யாழிசை மீட்டுவர்  மூளை இலாதவர்.

ஈற்றினில் வீழ்ச்சியோ காற்றில் நெருப்புபோல்
கூற்றினை  ஆக்கும் குறிதவ றாதே.

கறுப்ப்புப் பணத்தை வெறுப்பவர் உண்டு;
கறுப்புப் பணத்தொடு  வாழ்பவர் உண்டுகாண்

ஊழல் இலாமை  உயர்பவர்  ஆயினோ
ஆழ்ந்தநற் சிந்தையர் போற்றுக  அஃதினை;

வெற்றி  கருப்புப்  பணத்தவர் பெற்றிடில்
சற்றும் அதனை   ஒழிகவே  .ஒற்றுதல்

உண்மை உலகினில் வெல்க  அதுகொண்டு
வண்மை பெறுமே உலகு.


Will edit and make some changes later.You may
enjoy this poem for now and you may
give your critical appraisal.




 
 



சனி, 19 மே, 2018

ளகர லகர ஒற்றுக்கள் விடுபடல்.

ஆள் என்ற சொல்லை நாம் இங்கு சிலமுறை ஆய்வு செய்துள்ளோம்.  இன்று அதை வேறு கோணத்தில் ஆய்கிறோம்.

கண்டாள். வந்தாள்,  சென்றாள் என்று வருவன அனைத்தையும் வாழ்மொழியாய் உதிர்க்கும்போது  கண்டா.  வந்தா,  சென்றா என்று பலர் பேசுகின்றனர். அவ  ஆடுவா,   ஆனா நல்லா இல்ல என்கின்றனர்.

இதில் நாம் காண்பது யாதெனில்  இறுதியில் வரும் ளகர ஒற்றினைப் பலரும் உச்சரிப்பதில்லை. இப்படிப் பேசுதல் தமிழருக்கு இயல்பாகும்,  வேறு மொழிகளைப் பேசும்போது இறுதியில் வரும் ரகர ஒற்றினை விட்டுப் பேசுதல் என்பது சீனர்களிடையே இயல்பாக உள்ளது.

இப்படி இறுதி ஒற்றினை விட்டுப் பேசினாலும்  (   எ-டு:  அவள்  - அவ),  ஆள் என்ற சொல்லைத் தனியாக உச்சரிக்கும்போது  ஆள் என்பதை ஓர் உகரம் சேர்த்து ஆளு என்று நீட்டிக்கொள்வது பழக்கம். ஆக ளு என்பதில் இறுதி உகரம் சாரியையாக நிற்கிறது.

ஆள் என்பது பெண்பால் விகுதியாய் வருவது ஒருகாலத்தில் பெண்கள் குடும்பங்களில் மேலாண்மை செலுத்தியதைக் காட்டுவது என்பதை யாம் முன்பே கூறியுள்ளோம்.

அவாள் இவாள் என்பது  அவ்  ஆள்  இவ் ஆள் என்பதன் குறுக்கம்.  சிலர் இங்கும் ளகர ஒற்றினை விட்டுவிடுவது இயல்பு.

முட்டாள் என்ற சொல்லிலும் ளகரத்தை விட்டுப் பேசுதல் இயல்பு.

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவ ராயா காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவராயா

என்று பாடலில் வரும்.

முட்டாப் பயலே மூளை இருக்கா
என்று ஏழை மேலே
துட்டுப் படைச்ச சீமான் அள்ளிக்
கொட்டுற வார்த்தை போலே

என்ற கண்ணதாசனின் வரியிலும் ளகர ஒற்று விடப்பட்டுள்ளது.

லகர ஒற்றும் இவ்வாறே விடுபட்டுப்  போவதைக் காணலாம்.

அத விட்டா வேறே  வழி என்று பேசும்போது  விட்டால் என்பது
விட்டா என்று வருகிறது.

போனால் போகட்டுமென்பது போனாப் போகட்டும் என்று வரும்,

ஆள், முட்டாள்.

முதலில் முட்டாள் என்ற சொல்லிலிருது தொடங்குவோம்.
 இரண்டு நபர்கள் 1  வாய்ச்சண்டையில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தனர், அப்போது ஒருவர் இன்னொருவரைப்
 பார்த்து  "முட்டாள்" என்றார். அதற்கு இன்னொருவர்:
"முட்டாள் என்றாலென்ன தெரியுமா.நான்  முட்டு
முடுக்குகளையாவது  ஆள்பவன்; நீ   ஒன்று
மில்லாதவன் " என்றார்.   அப்போது யாம் இவர்
சொல்வதைக் கேட்டு  வியப்பிலாழ்ந்தோம்.
சொல்லாராய்ச்சி  என்பது மக்களிடம் இயற்கையாகவே
அமைந்து   கிடக்கிறது என்பதை உணர்ந்தேம்.

இவர்கள் பேசிக்கொண்டபடி  முட்டாள்
என்ற சொல்லில் இறுதியில் நிற்பது  "ஆள்"  என்ற
சொல்தான்.  அது  சரியானால்  இந்தக்  கூட்டுச்
சொல்லில்  முன்னிருப்பது  "மூடு"   அல்லது
"முட்டு"  அல்லது  "முடு"  ஆக இருக்கவேண்டும்.

இன்னொரு சொல் இருக்கின்ற தே:   "மூடன்"   என்பது..  
 அது    கூட்டுச்சொல் அன்று. இறுதியில் இருப்பது  அன்
என்ற  ஆண்பால் விகுதி.   எனவே  முன்னிருப்பது
 "மூடு"  என்பதுதான்.

இப்போது முட்டுதல் என்பதன்  அர்த்தங்களைக்
கவனிப்போம்.

எதிர்த்தல்
குத்துதல்
குறைதல்
மோதுதல்
தடைப்படுதல்
போரிடுதல்
வழுவுதல்.

முட்டு என்பதும்  பொருந்திய பொருள் உடையதாய்
உள்ளது.  குறைதல் என்பது  அதுலுமுள்ளது.

மூடம்  என்பது     அறிவின்மை என்று பொருள்
படுவதால்  மூடன் என்பது மூடமுடையவனைக்
 குறிக்கிறது.

முடு >   முடை:   பணத்தட்டுப்பாடு குறிப்பது.
இது  குறைவுப்பொருள். முடு >    முடம்:
உடற்குறை ஆகையால்  இதுவும்  குறைவுப்
பொருள்.

முடு,   முட்டு,   மூடு யாவும்  குறைவுப் பொருள்
உள்ள அடிச்சொற்கள் ஆதலால்   மனிதனுக்குள்ள
 ஏதேனும்   ஒரு குறையை உணர்த்தும்.

ஆனால்  முட்டாள் என்பதில்  உள்ள  ஆள் என்பது
ஆட்சிசெய்வோன்  என்று
பொருள்படாமல் நபர்   என்றே பொருள்படும்.

அடிச்சொல்:

முடு.

திரிபுகள்:

முடு > முட்டு>   முட்டாள்.
முடு > மூடு>  மூடம்>  மூடன்.





---------------------------------------------------
அடிக்குறிப்புகள்:

1.  நபர்:  ந(ண்)பர்.  இடைக்குறை     .தமிழிலிருந்து
உருது  இதை மேற்கொண்டது.