புதன், 21 மார்ச், 2018

பதியும் தம்பதியும்

பதி என்ற ஏவல் வினை ஒன்றை இன்னொன்றில்
உள்ளிடுதலைக் குறிக்கும்.  புகுத்தல், நுழைத்தல்
முதலிய வினைகளில் மென்மை இல்லாமை
உணரப்படும்.  ஆனால் பதியும்போது கால்  சேற்றில்
மெதுவாக அழுந்துதல்போல் ஒன்றில் மற்றொன்று
இணையும்.

பதி என்பது கணவனையும் குறிக்கும். இது இப்பொருள்
பெற்றதற்கு நாம் மனிதவளர்ச்சி  நூலைக்கண்டு
விளக்குதல் வேண்டும்.  இந்தியாவில் பல குழுவினரிடை
குடும்பத்தில் பெண்ணே தலைமை தாங்கினாள்.
திருமணம் நிகழ்ந்தபின் ஆண்மகனே தன் பிறந்த
வீட்டை விட்டுப் பெண்ணின் வீட்டில் சென்று தங்கி
வாழ்ந்தான்.  ஆகவே அவன் பெண்ணின் உறையுளில்
சென்று பதிந்தான்;  வீடுவாசல் முதலிய சொத்துக்கள்
பெண்வழியே பிள்ளைகட்குச் சென்றன. இங்ஙனம்
தன்னைப் பதிந்துகொண்டதால் அவன் பதியானான்.

வீட்டுக்குப் பெண்ணே தலைவி. கணவன் பதிவு
பெறுபவன்.  இந்தப் பொருளைப் பார்த்தால் அவன்
சென்றேறிதான். ஆனால் பிற்காலத்தில் பதியென்னும்
சொல் தலைவன் என்ற பொருளைப் பெற்றது குமுக
மாற்றத்தினைக் காட்டுகிறது.

தம்பதி என்ற சொல்லோ இன்னும் இனிய பொருளை
நமக்குத் தெரிவிக்கிறது.  தம் என்பது இருவர் இணைவைக்
குறிக்கும் பன்மைச் சொல்.  தன் என்பதன் பன்மை.
தம்பதி என்போர் ஒருவருள் இன்னொருவர் பதிவாகு-
கின்றனர். இது மனப்பதிவு அல்லது ஒருவர் வாழ்வில்
இன்னொருவர் சென்றிணைந்தததைக் காட்ட
வல்லது.  பதி என்ற முதனிலைத் தொழிற்பெயர்
கள் விகுதியோ அர் விகுதியோ பெற்று கணவன்
மனைவி இருவரையும் குறிக்கும். அதாவது:
தம்பதியர் அல்லது தம்பதிகள் என்று.  அருமையான
வாழ்க்கை இணைப்பை இச்சொல் காட்டவல்லது.

மனைவி கணவன் வீட்டில் சென்று வைகும்
மணமுறையில் அவளும் பதிவாகிறாள் என்றாலும்
அவளைப் பெரும்பாலும் பதி என்பதில்லை; இது
ஆணாத்திக்க நிலையைக் காட்டுவதாகும். இருவரும்
பதிகளே ஆயினும் ஆணே குமுகத்தில் பதி எனப்
படுகிறான்.

தமிழ்வழியாக விளக்குகையில்தான் இச்சொல்லின்
உண்மைப்பொருள் சிறக்கத் தோன்றுகிறது.

இவை தமிழ்ச்சொற்களே.

------------------------------------------------------
அடிக்குறிப்பு:

தளபதி :  இச்சொல்லில் "பதி" என்பதன் பொருள்:

இங்கு காணலாம் (சொடுக்கவும்)

http://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_85.html 

வேதன், வேதனை, வேகம் (அடிச்சொல்: வே)



வேதனை என்ற சொல்லைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.  மனிதன் தீயைக் கண்டு அஞ்சியதும் உண்டு. பின் அறிவுபெற்று அதையே தன் கருவிகளில் ஒன்றாய்ப் பயன்படுத்திக் கொண்டதும் உண்டு. பிறப்பஞ்சில் இவையாவும் நாமறியாமலே நடந்துள்ளன. பிறப்பஞ்சு என்றால் உலகம். நிலம், தீ, நீர், வளி (காற்று), விசும்பு( ஆகாயம்) என்ற ஐந்து பிறப்புக்கள் கலந்ததே ஆகும். அப்படிச் சொல்கிறது தொல்காப்பியம்.

அதைக்குறிக்க எழுந்த சொல்லே பிறப்பஞ்சு> பிரபஞ்சம்.

நெருப்பை அறிந்த காலத்திலிருந்து  வேதனை, வேகம், வேது, வேதை, வேகுதல்,  வேதல் எல்லாம் வேதனின் அருளால் உண்டாகிவிட்டன. (பதங்கள் )

புண்பட்ட இடத்தில் எரிகிறது என்`கிறான் ஒருவன். என்ன நெருப்பா பற்றி எரிகிறது?  இல்லை சும்மா ஓர் எரிச்சல் உண்டாகிறது.  தோலில் அந்த உணர்ச்சி தோன்றுகிறது.  எரிச்சலா?  என்ன கோபமா? இல்லை, எரிவு!

அறைக்குள் காற்றாடி ஓடாததினால் ஒரே வேக்காளம். வெப்பம் மிகுதி.
வே என்பது ஓர் அடிச்சொல். அதன் பொருள் மிகுதியான சூடு ஏறிப் பொருளை மாற்றும் அளவுக்குச் செல்கிறது. சட்டியில் இட்ட காய் நெருப்பினால் உடனே (சிறிது நேரத்தில்)வெந்து மென்மை அடைந்துவிட்டது. நெருப்பைக் கண்டு பிடிக்கு முன் மனிதன் அதை வெயிலில் வேகவைத்துத்தான் உண்ணமுடியும். நெருப்பு அறிந்த பின்னர் அதைக்கொண்டு உடனே வேகிறது.  வேகம், வேகம் .... உடனே வெந்ததில் வந்த வேகம்.
இப்படித் தீயினால் வேலை வேகமாய் முடிவதை மனிதன் அறிந்து அந்த வே என்பதிலிருந்தே வேகம் என்ற சொல்லைப் படைத்துக் கொண்டான்.

தொடக்கத்தில் அவன் கண்ட வேகம் அதுதான். எறிபடை வேகமன்று. தீயினால் அறிந்த வேகம்.

இப்போது அதுதன் சொல்லமைப்புப் பொருளை இழந்து பொதுப்பொருளில் விரைவு குறிக்கிறது.

புண் எரிவு கண்டாலும் வேகிறது.  வேதனை  :  வெம்மை மிகுந்து எரிவு உண்டாகித் தாங்க முடியவில்லை.  வே+து+அன்+ = வேதனை.

அல்லது: வே+தன்+.   தன்னுள் வேகும் தன்மை. எரிதல்.

து+அன் எனினும் தன் எனினும் ஒன்றுதான். 

வே+ த் + அன் + ஐ என்று காட்டினும் அஃதே.

இவற்றுள் பெரிய விடயம் எதுவும் இல்லை.

வேதன் என்போன் கடவுள். வேதம் > வேதன் எனினும் வேகுதல் = தீ, ஆகையால் வே+ து + அன் = வேதன் எனினும் ஒன்றுதான். எப்படியும் கடவுள்தான்.

 பிழைகள் பின் சரிசெய்யப்படும்.

திங்கள், 19 மார்ச், 2018

சொல்லமைப்பில் வன்மை மென்மை திறம்.



தமிழ்ச் சொல்லமைப்புத் திறம்.

படிதல் என்ற சொல் பல பொருட்சாயல்களில் பயன்படுத்தத் தக்கதொன்றாம்.

எப்படி அடித்தாலும் இந்த மாடு படியாது என்பது பேச்சில் வரும் வாக்கியம்.  அடி என்பதற்கும் படி என்பதற்கும் ஓர் எதுகைநயம் இருப்பதால் கேட்கவும் இனிமையாக இருப்பது.

ஓர் கடுமையான ( அதாவது அடிபடுதல்  போன்ற) சூழ்நிலையில் படிதல் என்பது ஒரு நிலைகுலைவே ஆகும்.  அஃது  மனக்கனிவினால் தாழ்ந்து ஏற்றுக் கொள்ளுதலினின்று வெகுதொலைவில் இருக்கும் அல்லது நிகழும் ஒரு செயலாகும்.

படி என்பதும்  ( பொருண்மையில் வாசித்தல் என்னும் படி வேறு.) படு என்பதினின்று திரிந்தது.  ஒருவன் படிகின்ற பொழுது செயலில் தலை தரை நோக்குமளவிற்குச் சென்றுவிடுகிறான்.  மேலும் அவ்வாறே செல்வானாகில் படுத்துவிடுவான். படுத்தலாவது, உடல்முழுமையும் தரையிற் படுமாறு கிடத்தலாம்.

பணி என்ற சொல்லை இதனோடு கொண்டுபோய் ஒப்பீடு செய்யலாம்.  அது பண் என்ற சொல்லுடன் தொடர்புடையது ஆகும்.  ஒரு பெரியவர்முன் சிறு அகவையினன் ஒருவன் தாழ்ந்து நின்று ஏற்றுக்கொள்ளுதலை இது குறிக்கிறது.

இப்போது நாமெடுத்துக்கொண்ட கருத்துக்கு வருவோம்.

டகரம் வல்லெழுத்து.

வன்மை காட்டும் ஒருவன்முன் தாழ்ந்துசெல்வோன் படிகிறான்.

ணகரம் மெல்லிது.

மென்மை காட்டுவோன் முன் மனம் இசைந்து தாழ்ந்து செல்லுதலில் அவன் பணிகிறான்.

வணக்கம் குறிக்கும் சொல் பணிதல் ஆகும்.

மென்மையின் முன் தாழ்தல் பணிதலாம்.
வன்மையின்முன் தாழ்தல் படிதலாம்.

சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு சொற்கள் தமிழில் அமைகின்றன.

தனிமைச்சுவை உள்ள மொழி தமிழாகும்.
தமிழைப் பழகு;  அதுவே அழகு எனலாம்.