மனிதன்
நகரவாழ்நன் ஆதலின்முன்னர்
அவர் சிற்றூர்களில் வாழ்ந்தான்;
ஊர்களில் ஒன்றாக
வாழுமுன்னர் அவன் வனவாழ்வில்
தினந்துன்புற்றான்.
வனத்தில் வாழ்ந்தாலும்
கருத்தறிவிப்புக் கலையாகிய
மொழியை பயன்படுத்திக்கொள்ளும்
திறமுடையனாய் இருந்தான்.
இப்படி வனவாணராய்
இருந்த காலத்திலே தான்
பெரும்புலமை வான்மிகி முதலானோர்
இராமகாவியம் இயற்றினர்.
அப்படியானால்
வனத்தில்
வாழ்ந்தாலும் மொழிப் பயன்பாட்டில்
சிறந்துவிளங்கினர்.
ஆனால்
அதற்கும் வெகுகாலத்துக்கு
முன்பு மனிதன் குகைமாந்தனாய்
இருந்தான்;
அதற்குமுன் ஒரு நிலைத்த
இடமின்றி அலைந்தான்.
மனிதன்
குகைமாந்தனாய் இருக்கையில்
அல்லது அதற்குமுன்பே
தமிழ்இருந்தது. தமிழ்
என்ற பெயரில்லாவிட்டாலும்
மொழி இருந்தது.
அக்காலங்களில்
இருந்த சில சொற்கள் இன்னும்
நம்மிடை உள்ளன.
அ என்ற
சுட்டுச்சொல் ஓரெழுத்துடையது.
அது அப்போதிருந்தது.
அ என்பது
அங்கு. கு என்பதோ
இன்னொரு சொல். அது
சேரிடத்தைக் குறிப்பது.
அதுவும் ஓரெழுத்து
ஒருசொல். ஆகவே
" அங்கே
போய்விட்டான்" என்று
சொல்பவன், "அ கு"
என்றுமட்டும் சொன்னான்.
மொழியே அவ்வளவிலே
இருந்தது.
வீடு
கட்டிக்கொள்ள அறிந்த காலத்தில்,
வீட்டை "அ
கு அம்" என்றான்.
" அங்கு போய் இருக்கலாம்"
அல்லது அது இருக்குமிடம்
என்பது
தோன்ற : "அ கு அம்"
என்றான். இன்று
அதை விரித்துச்
சொல்வதானால்
" அவண் சென்று
அமைக!" என்று
சொல்லவேண்டும். நம்
தொல்பழங்காலத்து மொழி மறைந்து
விட்டதோ எனின், மறைந்தவை
போக மிச்சமுள்ளவற்றை இன்னும்
அடையாளம்
கண்டுகொள்ளும்படி உள்ளது
என்றே சொல்லவேண்டும்.
அதற்காக
நாம் ஆனந்த நடனம் ஆடவேண்டுமே!
கு என்பது
திரிந்து "கி"
என்று வழங்குகிறது,
இராமனுக்கு என்பது
"ராமனிகீ"
என்று திரிகிறது.
கு போன்ற சொற்கள்
அழியா வரம்
பெற்றவை
ஆகும். தமிழில்
உருபாக நிலைத்துள்ளது.
தேய்ந்துவிட்ட
சொற்களை வீசிவிடாமல்
உருபுகளாக்கிப் பாதுகாத்துள்ளனர்
உருபுகள் வந்தவழி இதுவே.
அகம் மிகப்
பழங்காலச் சொல். ஒப்பு
நோக்க வீடு என்பது அதன்பின்
உருவானது
ஆகும். வினைகளிலிருந்து
தொழிற்பெயர்கள் திரிந்து
தோன்றியது
ஒரு வளர்ச்சி. அது
அகம் தோன்றிய காலத்தின்பின்
தோன்றியிருத்தல்
வேண்டும்.