இப்போது குது என்னும் அடிச்சொல்லைப் பற்றிச் சிந்திப்போம்.
குது என்பதன் அடிப்படைப் பொருள், தொடுதல் என்னும் கருத்தே ஆகும்.
தொடுதலிற் பலவகை.சற்று கடுமையாகச் சென்று தொடுதல், மென்மையாகத் தொடுதல் என்று சொற்களை ஆய்ந்து அறிந்துகொள்ளலாம்.
குது என்ற சொல், இடைவிரிந்து குத்து என்று ஆகும். கூரான பொருளால் குத்துதல்,கூரற்ற பொருளால் குத்துதல் என்று வேற்றுமையுண்டு.
குது > குத்து.
தகர ஒற்று வல்லினம். குத்துதல் என்பது வன்மையாகத் தொடுதலாகும்.
அதுவே மென்மையுடன் நிகழுமாயின், அதற்கேற்ப வல்லினத் தகர ஒற்று மெல்லினமாகி விடும்.
குது > குந்து என்று ந் வந்து மென்மையானது.
குந்தும் போது உடற் பின்பாகம் தரை தொடுகிறது. என்றாலும் இது வன்மையாக நிகழ்வதன்று என்பது சொல்லவேண்டுவதில்லை.
உட்காருங்கால் தரையிற் படும் உடற்பின்பாகம் குறிக்கும் சொல், வல்லின ஒற்றின்றி, மெல்லின ஒற்றுமின்றி ஒரு சொல் பெற்றது.
குது > குதம். (குது + அம்).
குதம் என்பது செயல் ஒன்றும் குறிக்காத உடற்பகுதி. எனவே அது
வலிக்கவோ மெலிக்கவோ செய்யாமல், அடிச்சொல்லிலிருந்தே அமையலாயிற்று.
இனிச் சாய்வு ஏதுமின்றி தரைதொட்டு நிற்கும் செயலுக்குச் செங்குத்து என்ற சொல் பயன்பட்டது. செம்மை முன்னொட்டு சாய்வின்மை குறிக்கின்றது.
குது > குத்து > செங்குத்து. (செம் + குத்து). முழுச்சொற்களாய்ப் புணர்பெறுதலையே இலக்கணியர் போற்றினராதலின், செம் என்பதனோடு மை விகுதி சேர்க்கப்பட்டு, செம்மை + குத்து எனவந்து, பின் மை கெடுத்து, செங்குத்தாக்கினர்.
செங்குத்தாக நீட்சியுள்ள ஒன்றை (தடியை)ப் பிடித்துக்கொண்டு அணிவகுத்துச் செல்வது படைமறவரிடத்து நடைபெறுமொரு நிகழ்வு.
இது காண அழகாய் இருக்கும். அதற்கேற்ப, செங்குத்து என்பதிலுள்ள
வல்லினத் தகர ஒற்று, நகர ஒற்றாக ( ந் ) மாறி அமைந்தது; ஆக
செங்குத்து > செங்குந்து > செங்குந்தம் என்றாகும்.
இதைப் பிடித்துக்கொண்டு, முதல் வரிசையிற் சென்ற படைஞர், செங்குந்த முதலியார் எனப்பட்டனர்.
வாழ்க்கையும் ஓர் இயங்கு திறமுடைய ஓர் இயந்திரமே ஆகும், இக்கருத்து சரியோ தவறோ == அது நின்றுவிடின், அது நிலைகுத்தி விட்டதென்பர். நிலை குத்துதல் என்பதில் குத்து என்பதைக் கவனிக்கவேண்டும். குத்தி நிற்பது, ஓடாமல் நிற்பது. வாழ்க்கை ஓடுகிறது; ஓடாதபோது நிலை குத்தி நிற்கின்றது. அது ஓரிடத்தில் உட்கார்ந்து போய்விட்டதெனலாம். ஆதாவது குந்திவிட்டது. குந்துதல் தொடர்பில் அமைந்ததே:
குந்துதல் : குந்து > குந்தகம் ஆகும்.
இருவர் (அல்லது அதனின் மேற்பட்ட எண்ணிக்கையுடையோரோ) சேர்ந்து நிகழ்த்தும் ஒரு செயல்பாட்டில், கருத்துகளும் நடைமுறைகளும், செய்ம்முறைகளும் அங்குமிங்கும் வழவழ என்றில்லாமல் வரையறவு உடையனவாய் இருத்தல் வேண்டும். அதுவும் வணிகம், வியாபாரம், நிதி நிறுவாகம் முதலியவற்றில் இன்றியமையாதது. ஒப்பந்தங்கள் ஏற்பட்டபின், இந்த நெகிழ்வு நிலை ஓடிக்கொண்டிராமல் குத்தி நிற்கும்.
குத்து > குத்து + அகம் + ஐ = குத்து+ அக + ஐ = குத்தகை.
குத்தி நிற்கும் வரையறைக்குள் நெகிழ்வு நிலை அகப்பட்டுக் கொண்டதென்பது பொருள். சில்லறையாக இல்லாமல், கொத்தாக (மொத்தமாக)ப் பிடிக்கும் வணிகத்தில் கொத்து > கொத்தகை > குத்தகை என்றும் காணலாம் ஆகையினால் இச்சொல் ஒரு இருபிறப்பி எனலாம்.
குது என்பது தொடுதற் கருத்தாதலின், பிறனுடலை வன்மையாகத் தொடும் ஒரு விளையாட்டுக்குக் குத்துவிளையாட்டு என்றனர். அதுபின் குத்திவிளையாட்டு , குஸ்தி விளையாட்டு என்று திரிந்தது.
குத்து >குத்தி > குஸ்தி.
கால்களால் வன்மையாகத் தரையைத் தொடுதல், குதித்தல் ஆகும்,
குது > குதி > குதித்தல்.
குதித்தாடுதல், கூத்து:
குது > குத்து > கூத்து. தரையில் கால்கள் சற்று வனமையாய்க் குத்துவதுமாம்.
குத்து : > குத்தாட்டம்.
கூத்து என்பது குத்துதல் என்பதன் முதனிலை நீண்ட தொழிற்பெயர் என்பதைக் கண்டுகொள்ளலாம்.
நிற்றல், நடத்தல், ஆடுதல், ஓடுதல், ஓடுதலும் நிற்றலும் மாறிமாறி வருதல், என இன்ன பிறவும் நடனத்தின் பல்வேறு உறுப்புகள்.
நில் > நிறு > நிரு > நிருத்தம். றகரம் ரகரமாகவும் திரியும்.
நட > நடம் > நடன் > நடனம், இவற்றில் விகுதிகளை ஒன்றாய்க் கட்டி, நட + அனம் நடனம் எனினும் அதுவேயாம்.
நிற்றல், நடத்தல், ஆடுதல், ஓடுதல், ஓடுதலும் நிற்றலும் மாறிமாறி வருதல், என இன்ன பிறவும் நடனத்தின் பல்வேறு உறுப்புகள்.
நில் > நிறு > நிரு > நிருத்தம். றகரம் ரகரமாகவும் திரியும்.
நட > நடம் > நடன் > நடனம், இவற்றில் விகுதிகளை ஒன்றாய்க் கட்டி, நட + அனம் நடனம் எனினும் அதுவேயாம்.
நடு> நடுதல்,
நடு > நட > நடத்தல்: கால்களைத் தரையில் நட்டு, நட்டு முன்செல்லுதல். நட > நடனம்.
குத்து > கூத்து : கால்களைக் குத்திக் குத்தி யாடுதல்.
இவையெல்லாம் நடனம் இன்றைய உன்னத நிலையை எய்துமுன்
பழங்காலத்தில் அமைந்த சொற்கள்.
இவற்றை அமைத்த மக்களைப் பாராட்டவேண்டும். இற்றை நிலையில் இப்படி அமைக்க இற்றை மக்களும் புலவர்களும் திணறியிருப்பார்கள்.
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[