புதன், 30 ஜூலை, 2014

வம்மிசம்

வரு(தல்) என்ற சொல் வினைமுற்று விகுதிகள் பெற்று வருங்கால் பல்வேறு விதமாகத் திரிதல் காணலாம்.  இவற்றை ஆய்வு செய்யுங்கள்:

வருகிறான், வருகிறது  (இன்ன பிற).     வரு என்பது பகுதி;
வந்தான்,  வந்தது  (இ - பி )                           வ என்று திரிந்தது.
வருவான்,  வரும்.                                           வரு திரியவில்லை.
வாராய்                                                                வார் என்று திரிந்தது.
வா    (   விளி /   அழைப்பு) )                           வார்   - வா எனக்  கடைக் குறைந்தது

வரு >  வார் > வா >  வ.

வருதல் என்ற  சொல்   வம் என்றும் திரியும்.
 வருமின் -  வம்மின்.=   (வருக என்பது போல).

ஒருவரை ஒரு குடிப் பிறப்பில் வந்தவர்,  குடி வழி வந்தவர் என்று  "வந்து" (வருதல்) என்ற சொல்லைப் பயன்படுத்திப் பேசுவதுண்டு.

வரு >  வந்தான்.
வரு >  வம்மின்.
வரு > வ .

வரு +மிசை >  வம்மிசை >  வம்மிசை +  அம்  =  வம்மிசம்.
வம்மிசம்  >  வம்சம் .

வம்மிசம் என்றால் வந்த குடிவழி என்பது பொருள். இதில் "வந்த"  (வருதல்) என்பதே முன்மைக் கருத்தாகும்.  இது ஒரு பேச்சு வழக்குச் சொல்.  "அவன் வம்மிசம் கருவற்றுப் போய்விடும்" என்று சினத்தில் வைதல் கேட்டிருக்கலாம்.  வழிவந்தவர் என்பதுமுண்டு.

மிசை என்பது மேல் எனும் பொருளது.   பிறப்புகளால்   வரும் வழி மேலும் வளர்கிறது என்பதே "மிசை"  குறிக்கும்.

வம்மிசம் என்பது இந்தோ ஐரோப்பியத்தில் உள்ளதா?

சங்கத மொழி :  
வம்சதரன் -   m. maintainer of a family; descendant.  தரன்:  தருவோன்  (தரு+ அன் = தரன்)
வம்சிய  -  a. belonging to the main beam or to the family  m. cross-beam, member of a family, ancestor or descendant

நாட்டுப்புற மொழியில் விளங்கும் இதுபோலும் சொற்களை உள்வாங்கிப்  பாதுகாத்து வைத்திருப்பதற்குச் சமஸ்கிருதப் புலவர்களை நாம் பாராட்டுவோம். 

இனி  மலாய்  மொழியைச் சற்று  காண்போம்.   
"புத்திரி   வங்ச"    (மலாய்)     :    வம்ச   புத்திரி  (சமஸ்கிருதம்)     [குலமகள்   இளவரசி  ] "dynasty princess"
வம்ச  (Skrt)  >  bangsa  (Malay)  race,  people related by common descent.
Bangsa Bangsa Bersatu --   United Nations.
Bangsawan  --   nobility, opera.


செவ்வாய், 29 ஜூலை, 2014

குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு,,,,,,,,,,,,,,,,,,,,

இது முன் இடுகையின் தொடர்ச்சி .

முன் இடுகை:    http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_99.html

மன்னிய பெரும்புகழ் = மாறாத (நிலைத்த)  விரிந்த புகழும்
 மறுவில் வாய்மொழி =  குற்றங் குறை இல்லாத சொல்லாடலும்  ;

இன்னிசை முரசின் =  இனிமையான  இசைக்குத் ;தாளக்கருவி வாசிக்கும் குழுவினரையும் உடைய ;
உதியஞ் சேரற்கு -  உதியன் சேரலென்ற மன்னற்கு,
வெளியன் வேண்மாள்=    வெளியன் என்னும் குறு நில மன்னனின் மகள் ;
நல்லினி ஈன்ற மகன் =  நல்லினி பெற்ற ஆண்பிள்ளை;

அமைவரல் அருவி =   அழகாக ஓடிவந்து விழும் அருவிகளை உடைய ;
இமையம் விற்பொறித்து = இமையம் வரை படை நடத்தி தன்  அரசு (கொடிச்)  சின்னமாகிய வில்லைப் பதித்து;

இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க  =  அலை ஒலி எழும் கடலால் சூழப்பெற்ற தமிழகம் புகழப் பெறுமாறு ;
தன்கோல் நிறீஇ =  தன்  செங்கோலை  நிறுவி;

தகை சால் சிறப்பொடு =  தகுதியான நிறைந்த  சிறப்புடன்;

பேரிசை மரபின் = மிக்கப் புகழுடைய வம்மிசத்தில் வந்த ;

ஆரியர் வணக்கி = வட திசை ஆட்சியாளரை அடக்கி அவர்களிடம்  திறை அல்லது  ஈடாகப் பொருள்பெற்று;

பேரிசை -  கொடைகள் பல செய்து,  அது கேட்ட  அல்லது பெற்ற புலவர் பெருமக்கள் பாராட்டிப் பாட, அதன் காரணமாக வந்த பெரும்புகழ் என்க  அவ்வாரியரும் அத்தகு உயர் மரபில் வந்தோரே.  ஆகவே பேரிசை மரபு என்றார்.  "ஈதல்  இசைபட வாழ்தல்" என்பது யாவரும் ஒப்ப முடிந்த கருத்தாகும்.

நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து =  சொல் செயல் இவற்றில் நேர்மை குறைந்த கடுமையான பேச்சினை உடைய மேலை நாட்டினரைக் கட்டிவைத்து;  (கைது செய்து )

நயம் - நா நயம் செயல்  நயம் இரண்டும்;


நெய்தலைப் பெய்து =  தலையில் (சூடான) நெய்யை ஊற்றி; ( தண்டனை ஆதலால் சூடான என்பது . வருவித்துரைக்கப் பட்டது; )

(காபி (குளம்பி ) குடித்தான்  எனில் சூடானது குடித்தான் என்பதே பொருள்.அதுபோல )

கைபிற் கொளீஇ  =  கைகளைப் பின்னாகக் கட்டி;

அருவிலை நன்கலம் =  அரிய விலைமதிப்பு உடைய கப்பலை ;

வயிரமொடு கொண்டு  -  அவர்கள் ஏற்றி வைத்திருந்த வைரங்களுடன் பறிமுதல் செய்து;  வைரமொடு என்றும் வைரத்தொடு  என்றும் வரும்.

இவை சுங்க வரி கட்டாத வயிரங்கள் போலும். இத்தகு பறிமுதல் அரசின் கடமை.  சுங்கவரிக் காவலர் அரசில் திறனுடன் செயல்பட்டனர் என்பது பெறப்படும்.


பெருவிற‌ல் மூதூர்த்  தந்து  =  விறலர்  விறலியர் மிக்குடைய பழைய ஊர் ஒன்றின் மக்கட்குத் தந்து;

 பிறர்க்  குதவி =  அவ்வூராரே அல்லாமல் பிறருக்கும் நல்கி ;
அமையார்த் தேய்த்த =  பகைவரை ஒழித்த ;

அணங்குடை நோன் தாள்  =  கடப்பாடுகளை மேற்கொண்டவன் ; (வலிய கால்கள் உடையோன் பல சுமைகள் தாங்குவான்  அதுவேபோல் )

இமைய வரம்பன் நெடுஞ்சேர லாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு

வட திசைச் சென்று வெற்றியுடன் மீளுதல் அக்கால அரசர்க்கு வழக்கம் . புகழ் தரும் என்பதால்.   A real score for them.

நல்லினி என்பது   ( பெண் குழவிக்கு இட )   இனிமையான பெயர்.

திங்கள், 28 ஜூலை, 2014

வேண்மாள் நல்லினி மகன் இமயவரம்பன் & கண்ணனார்

மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி
இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்

அமைவரல் அருவி இமையம் விற்பொறித்து
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நிறீஇ தகை சால் சிறப்பொடு

பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ

அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு
பெருவிற‌ல் மூதூர்த்  தந்து  பிறர்க்  குதவி
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன் தாள்

இமைய வரம்பன் நெடுஞ்சேர லாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு.

இது பதிகம். அழகாகப் பாடப் பெற்றுள்ளது. பனிமலை வரை சென்று தன் வில் கொடி பொறித்து, ஆரியரை அடக்கித் திறை பெற்று, யவனர் கொண்டுசெல்ல  முயன்ற வயிரங்களைப் பறிமுதல் செய்து ஒரு பழைய ஊருக்குக்குக் கொடுத்து,  மற்றொருக்கும் உதவிகள் செய்து,ஏனைப் பகைவரையும் அழித்த இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பத்துப் பாடல்களால் குமட்டூர்க் கண்ணனார் பராட்டி யுள்ளார்.

அடுத்து அணுக்கமாக அறிந்துகொள்வோம்.  தொடரும்.