புதன், 4 ஜூலை, 2012

அமுதப் பெருநலம் அடையத் தகும்படி....








-
வெயிலும் நிழலும் ஒளியும் இருளும் இன்பமும்
துன்பமும் மண்மிசை இயல்பொருளே;

குயிலும் மயிலும் கூகையும் காக்கையும் கொக்கும்
குறைநிறை அடைதற் குரிபொருளே;

வயலில் பயிரும் வெயிலில் கருகி மழையில்
அழுகி அழிவது தெரிவதனால்,

இயவுள் இயற்றிய கரும வினையென இவற்றை
மனிதனும் நினைப்பதன் பயனறிவோம்.


நடப்பவை யாவும் நடக்கவி வைதாம் நாதனின்
செயலென நடங்துகொண்டால்,

அடைப்பதும் வேண்டுமோ துன்பம் இருள்புகு வாயிலை,
அறிந்திவை கூறிட வேண்டியவாம்'

துடைப்பது கண்ணீர்! அதற்கொரு மேலவன் துணியொடு
நிற்பவன் என்று துணிந்துணர்ந்தால்

மடைப்பளி நின்றிடும் மலைப்புறு வேதனை மாநில
மக்களும் கொண்டிட நடைபெறுமோ?


காரைக் காலவர் கண்டு மகிழ்ந்துயர் வேறக்
குறித்திடும் அம்மையின் வரல்நெறியில்

ஓரைந் தொடுக்கிய சாரத் தொடுதிகழ் வாழ்வைத்
தரித்தவர் யாரும் திறல்பெறுவார்.

தீரத் தெளிந்தவர் தேடும் அனைத்திலும் கூறப்
படுமறம் பொருளொடும் இன்பமிவை

ஆரத் தழுவிய அமுதப் பெருநலம் அடையத்
தகும்படி அணிசெயும் உலகமைப்போம்.





மதிகாண நிதிவேண்டும்


திருவுண்டு எனும்போதும் மதிகாண நிதிவேண்டும்
திருவென் றிருந்தாலே போதும் --- அதில்
திருத்தமே வேண்டாமெப் போதும்!


,

நந்தனாருக்கும் திருபாணாழ்வாருக்கும் கவிதீட்டிய சுதாமருக்குப் பாடியது



நந்தனையே சிவனேற்று நன்மை செய்தார்'-- அது
நாட்டினுக்கே இறையன்பின் தன்மை காட்ட!
விந்தையிதே பாணருக்கும் அந்தமில்லார் -- பத்தன்
வேண்டியதை அருள்செய்தார் மென்மை கூட்ட.

அந்தமில்லார் = சிவனார். பத்தன் = பக்தன்.



எனது கவிகள் சுதாமர் தாத்தாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. பலவற்றை மேற்கோளாகக் காட்டி அவர் என்னுடன் கவிதைகளால் "உரையாடினார்" எனில் மிகையன்று. தாத்தாவே கொஞ்ச நாள் தோழியாகிவிட்டார்.



திருமதியா என்றார்க்கு, மதிகாண நிதிவேண்டும் என்று பதில் இறுத்தது அவருக்குப் பிடித்திருந்தது,

மறைத்திறம் வழுவிடா மானிட மலை

நந்தனோ டெந்தபன் னாயன்மார் வந்துமே
ஒத்தியல் கின்றதாம் மொத்தநற் கருத்திது
மந்தனும் சொந்தவை குந்தமென் கைகளில்
நந்துமோர் நன்னிலை என்றதை ஏற்பனே.


வாழவே பிறந்தவர் வளநலம் கொண்டவர்
சூழுதுன் பனைத்துமே சூழ்ந்துணர்ந் தழிப்பவர்
ஏழ்பிற விகள்வரும் இடர்களைந் தொன்றுடன்
ஆழ்கடல் நீந்தியே அப்பால் களிப்பவர்.


பிறவியின் பயனைஇப் பிறவியி லடைபவர்
துறவியே ஆயினும் இல்லுளார் ஆயினும்
இறையொடு மொன்றியே நிறைகொள நின்றுள
மறைத்திறம் வழுவிடா மானிட மலையவர்.