ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

அங்ககத்தி என்னும் மரியாதைப் பண்புநலம்

 இந்த மரியாதைப் பண்புக்கு உண்டான பெயரை இன்று அறிகிறோம்.

அணுக்கமாக வந்து பழகுவோரை உரிய பணிவன்புடன் நாம் போற்றிக்கொள்ளவேண்டும்.  எந்த நேரத்தில் எவனால் அல்லது எவளால் நமக்கு ஒரு காரியம்  ஆகவேண்டிய சூழ்நிலை வருமென்பதை உலகில் கணித்து வைத்துக்கொண்டு நடந்துவிடுதல் என்பது இயலாத வேலை.  சிறுதுரும்பும் ஒரு பல்குத்த உதவும் என்பது  உண்மையான  ஒரு பழமொழி.

அணுகி  அகமும் புறமும் மகிழ நிற்பவரை  ''அணுகும் அகத்தினர்''  என்ற தொடரால் அறிந்து கொண்டது பண்டைத் தமிழரின் பேராண்மையைத் தெளியக் காட்டுகிறது 

அணுகு + அகத்து + இ  >  அணுககத்தி >  (அண்கு + அகத்து + இ > அண்+ ககத்தி + அங்ககத்தி   என்ற சொல் அமைந்தது  மகிழத்தக்கது.

ணகர ஒற்று  ங்கென்று வந்தது  அறிந்துகொள்க.  இதுபோலும் சொற்களை முன் பழைய இடுகைகளில் காட்டியுள்ளோம்.

உறுப்புகள் அணுக்கமாக உள்ள பைக்குள் இருப்பதே அங்கம் என்பதும் ஆகும்.  அணுகு+ அம் > அங்கு+ அம் >  அங்கம்  ஆகும்.  தமிழ்ச்சொல்.  அணுகில் உகரம் ஒழிய,  அண் கு அம் >  அண்கம் >  அங்கம்  ஆகும்.  இது வருமொழி நிலைமொழிப் புணர்ச்சி அன்று.  சொல்லாக்கப் புணர்ச்சி  இலக்கண நூல்களில் சொல்லப்படவில்லை.

நீங்கள் (நிங்கள் > நிங்ஙள்)   என்னாமல் தாங்கள்  தங்கள் என்பன இப்பணிவண்பு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது 

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

ஸ்தாபித்தல் என்ற சொல்லமைப்பு.

 இச்சொல்லை அறிந்துகொள்வோம். 

ஸ்தாபித்தல் என்ற சொல்லை தற்காலத்தில் அவ்வளவாக நாம் உரைநடையில் எதிர்கொள்வதில்லை.. அதற்குப் பதிலாகவோ அன்றித் தனித்தமிழிலோ நிறுவுதல் என்ற சொல் நன்கு வழங்குகிறது. வேறு வகைகளில் சொல்வதற்குப் பல வழிகள் உரைநடையில் உள்ளன.

தாபித்தல் அல்லது தாவித்தல் என்று வருவதில்லை.

ஸ்தாபித்தல் என்றால் தளம் அமைத்து எழுப்புதல் என்று சொல்ல,  அது சரியாகவிருக்கும். 

தளம் >  தளப்பித்தல் > தாள்பித்தல் >  தாட்பித்தல் >  தாபித்தல்  >  ஸ்தாபித்தல் என்று வந்ததே இச்சொல்.

ஓர் அமைப்பின்  தாள்  அல்லது அடிப்பகுதியாய் இருப்பதே தளமாகும்..

தாள் > தாள்+ அம் > தளம்.  

இதில் அம் விகுதி வந்து சேர,  தாள் என்பது தளம் என்று குறுகி அமைந்தது.

சாவு+ அம் >  சவம் என்றமைந்தது போலுமே இது. இதுவே போல் தோண்டப்பட்டது போன்றிருக்கும்  குழாய்,  தொண்டை என்று குறுகி  அமைந்ததும் காண்பீராக.

வாண்டையார் என்ற பட்டப்பெயர்  வள் என்ற அடியிற் றோன்றி,  -----

வள் > வாள்>  வாண்டை >  வாண்டையார்  ( வளமுடையார்)  என்ற பொருளில் வரும் என்பதும் அறிக.  

நீள்தலும் சுருங்குதலும் தமிழியல்பு,  சொற்களில்.   வருக,  வாங்க என்ற சொற்களில் வரும் சுருக்கம்  நீட்சிகளை அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

பகிரங்கம் என்ற சொல்.

பகிரங்கம் என்ற சொல் அறிந்தின்புறுவோம்.

பகிரங்கம் என்னும்போது ஒருவரை ஒருவர் அணுகி  அதைப் பகிர்ந்துகொள்வர்.   அதைத்தான் பகிரங்கம் என்று சொல்கிறோம்.  பகிரங்கம் என்ற சொல் அமைந்த காலத்தில் பத்திரிகை இல்லை,   அறைதல்  என்ற  சொல்லுக்கு என்ன பொருள் என்றால்  அரசன் தகுந்த முறையில் தன் கீழதிகாரிகளிடம் சொல்லி முரசறையச் செய்து,  கூவித் தெரிவித்தல்.  இதிலிருந்து பறைதல் என்ற சொல் கிளைத்தது.  அப்படி வராமல் தகுந்த முறையிலின்றி அங்குமிங்குமாகப் பேசிப் பரவுவதுதான்   தகவு+ அல்.   தகுந்த முறையில் அல்லாதது.  தமிழரசுகள் மறைந்தபின்  ''தகவு அல்''  - தகுந்த முறையில் இல்லாதனவே பரவின.  இவ்வரசுகள் போகவே,  அறைதல் என்ற சொல் வழக்கு  இலதாகி,  தகவல் என்பதே எஞ்சி நிகழ்ந்தது.

பகிர்ந்து அண்கு  அம் >  பகிர் அண் கு அம் > பகிரங்கம்  ஆயிற்று.  அண்கு அம்> அங்கமானது.

பகிரங்கம் என்ற சொல் உண்டானபோது  அவர்களிடம் இருந்த பகிர்வு முறைகள் இன்றைய நிலையுடன் ஒப்பிடமுடியாதன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.


 

சனி, 23 ஆகஸ்ட், 2025

க> ச வருக்கம் திரிபுவகை [களி>சளி]

 இதனை இன்று   ஆய்வு செய்கிறோம்.

கேரளம் என்ற சொல்லை ஆய்ந்த தேவநேயனார்  சேரல்  என்ற சொல்லே சேரலம் என்ற திரிபு கொண்டு பின் கேரளம் என்று திரிந்தது என்று சொன்னார்.  ச என்ற எழுத்து  க என்று திரிவதானால்தான் இவ்வாறு கூறப்பட்டது. சளி என்பது  ஏறத்தாழ அரிசிக்களி போன்றே இருப்பதால்  களி > சளி என்று திரிதல் இயல்பு. இந்த மாற்றம் கள்>சள் என்று மாறி ஏற்பட்டமையின் இது பொருத்தமே. ( Medical people say that phelgm is a vegitable matter.  )அரிசித் தூள்  பன்மைத் தன்மை உள்ளமையின் கள் என்பது சள் என்று திரிந்து பொருண்மை பிறழாமல் வந்தது. பலர் இருக்கும் இடம் ''கள்> களம்''  எனப்படுவது அறிக. பரவலாகப் பறிக்கப்படுதலால்   கள்> களை என்பதும் காண்க. கள் > களர் என்பதும் அது. பலமரங்கள் (தென்னை) எடுக்கத் தருதலாலும் மற்றும் பல சொட்டுக்கள் வடிதலாலும் கள் என்ற பானம் அவ்வாறு குறிக்கப்படலாயிற்று.

தனது வலிமை பலவாறு விரிந்து ஓய்ந்துவிடுதலை  சள் > சளை > சளைத்தல் என்பதும் குறிக்கிறது. விரிவாகப் பல இடங்களிலும் உடலைத் தேய்த்துத் தடவும் விளையாட்டு :   சள் >சல்> சல்லாவம் எனவாகும். பல சிறியவான கற்கள் சல்லி என்பர்.  இவ்வாறு அறிக.

குருளுதல் > சுருளுதல் என்பதையும்  க - ச திரிபில் கவனத்தில் கொள்ளுங்கள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை

இதில் சில எழுத்துக்கள் அழிந்துவிட்டனவாகையால் இது 

மீட்டு எழுதப்பட்டது என்பதறிக.

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

ஐப்பசி மாதம் அப்பியை மற்றும் திரிபுகள்

  இப்போது ஐப்பசி என்ற மாதப்பெயரையும்  அதன் மாற்று வடிவங்களையும் ஆய்ந்து காண்போம்.

ஐப்பசி என்ற சொல்லை  ஐ+ பசி என்று பிரித்து  அதற்குப் பொருள் சொன்னால் ஒருவேளை பொருளும் ஆய்வும் தவறாக முடியலாம்,  ஏனெனில் ஐ என்பது சொல்லாக்கத்தில் ஒரு பகவு ஆயினும் பசி என்பது  சரியான பொருளைத் தரவியலாத திரிபு   ஆகும்..

பசி என்பதற்கு இங்கு உடலுக்கு உணவு தேவைப்படுதல் என்ற பொருளுடைய சொல்லன்று.

ஐ என்ற முன்வரும் பகவு,  முன்  ஆசு என்பதன் திரிபு.   ஆ(சு) என்பது  ஆதல் என்ற சொல்லின் முதலெழுத்து.  சு என்பது ஒரு விகுதி.   ஆசிடையிட்ட எதுகை என்ற தொடரில்  ஆதலென்ற வினையின் முதலெழுத்து வருகிறது.  ஆசு என்றால் பற்றுக்கோடு என்ற பொருளும்  உள்ளது. பற்றுக்கோடு என்பது பேச்சுவழக்கில் ஆதரவு என்ற சொல்லால்  குறிக்கப்படும்.  ஆ என்பது பசு என்ற பொருளில் வருவதுடன்  ஆ(தல்) என்றும் வினையாகவும் உள்ளது.   ஆ என்பது  மாடு என்று பொருள்படுகையில்  ஆக்கம் தரும் விலங்கு என்று உணர வேண்டும்.  அதனால்தான் அதற்கு ஆ என்று பெயர்.  மாடு என்பதும் செல்வம் என்று பொருள்தரும்.  மாட்டை    ''ஆ''  என்றது காரணப்பெயர் என்று அறிதல் வேண்டும்.

இகம் என்பது  இ+ கு+ அம் என்பன இணைந்த சொல்லாதலாதலின் இவண் சேர்ந்து இணைந்திருப்பது என்று பொருள் காணவே,  இவ்வுலகம் என்றும் இங்கிருப்பது என்றும் பொருள்படும்.

ஐப்பசி   என்பது முன்னர் ஐப்பிகை என்று கல்வெட்டில் வந்துள்ளது. இது ஐ+ பு + இகை என்ற பகவுகளின் இணைப்பு.  பு என்பது இடைநிலை.  இகை என்பது இகம் என்பதன் திரிபுதான்.  இறுதி ஐ  விகுதி  பெற்றது.

இகு என்பது அம் விகுதிபெறாமல்  இகரவிகுதி பெற்று  இகி என்றாகிப் பின் இசி என்றாயிற்று. இது ககர சகரப் போலி.    சேரலம் >கேரளம் என்பது போல.  இது பிற மொழிகளில் வரும்.  ஆங்கிலத்திலிலும் ஐரோப்பிய மொழிகளிலும் காணலாம்.  அக்டோபர் மாதத்தில் தொடரும் பருவ காலமாகையினால் ஐப்பசி என்பதற்குத் தொடரும்  மாதம் அல்லது காலம் என்று பொருள் உரைத்தல் வேண்டும். 

ஆய்ப் பயில்வது என்ற தொடரை எடுத்துக்கொண்டால்  :  ஆய் > ஆயி>  ஆசி> இது குறுகி: அசி  >  பசி  ( ஐப்பசி)  என்று  ஐப்பசி என்பதுடன் தொடர்பு படுவதை உணரலாம். ஐப்பசி என்பது  பு+ அசி தான். பயி என்ற இரண்டெழுத்துகளும்  பயி > பசி என்றாதலைக் காணலாம்.  ஆகவே ஆய் என்பதை அய்> அயி> ஐ  என்று நிறுத்திவிட்டு,  பயி > பசி என்று காணின்,  ஐ-- பசி  என்று எளிதாக வந்திருக்கின்றது. ஐப்பசி என்பதற்குப்  பலவாறு விளையாடிக்கொண்டிருந்தாலும்  அன்பருக்கு ஆய்ப் பயில்வது என்று மட்டும் சொல்லி மற்றவற்றைத் தராவிட்டாலும் ஐப்பசி என்பதை விளக்குதல் எளிதுதான்.

தொடர்பு குறிக்கும் மாதம் ஆதலால்  அப்பி இயைப்பதான மாதம் என்றும் சொல்லிவிடலாம். எல்லாம் இதன் பால் உள என்று சொல்லுமளவுக்குப் பொருத்தமுடைய மொழி தமிழ். ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளைத் தமிழில் காட்டுவது  இந்த வசதியினால்தான்.

தமிழ் மொழி உலகத் தொடக்கமாய் இருந்ததனால் பலவும் ஒன்றாய்க் காணக்கிடைக்கின்றது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை தரப்படுகின்றது.

சனி, 16 ஆகஸ்ட், 2025

குபேரன் என்ற சொல்.

 பலவாறு பிரித்துப் பொருள்சொல்லும் வசதி படைத்த சொல்தான் குபேரன் என்பது.  இதுபோல பல்பிரிப்பு வசதியுள்ள சொற்கள் பல உள்ளன நம் தமிழில்.

குபேரன் என்ற சொல்லில் முதலிற் பகவாய் இருப்பது  குவிதல் என்னும் வினையின் திரிபாகிய குபி என்னும் பகுதி.  குவி> குபி.  இப்பகவு   குபி என்பதன் பொருள் குவித்து வைத்தல்தான்.  குபேரன் என்ற சொல்லின் பழைய வடிவம் குவேரன் என்பது  குவி+ ஏர் + அன் என்று பிரிந்துவரக் கூடியது என்பது ஆய்வில் தெளிவாகிறது.  ஏர்த்தொழிலில் மிகுதியாய் விளைவித்து  செல்வர்களானவர்களைக் குறித்த சொல்லே இது. நாளடைவில் பிறதொழில்களால் பொருள் விளைத்துச் செல்வர்களாய் ஆனோரையும் அது குறித்தது.  இப்படிப் பொருள் விளைந்தமையினால் ஏர் என்ற சொல் பொருள் தெளிவினை இழந்துவிட்டது  என்ற கருத்து,  வலிவினை உடையதென்று கருதக்கூடும்  ஆனால் பின்வருவனவும் கவனிக்கவும்.

ஏர் என்ற சொல்லுக்குப் பல பொருள் உள்ளன.  ஏர் என்பது ஓர் உவம உருபாகவும் உள்ளது. எர்ப்பு என்பது ஈர்ப்பு என்ற சொல்லுடன் தொடர்பு உடையதாய் உள்ளது.

ஏர்பு என்ற சொல் எழுச்சி என்றும் பொருள்படும். வலனேர்பு திரிதரு என்ற தொடரைச் சிந்திக்கலாம்.  ஏர்தல் என்பதில் ஏர் என்பதே பகுதி.   வேளாண்மையால் வருஞ்செல்வம்  ஏர்ச்சீர் எனப்படும்.

ஏர்தல் என்பது எழுச்சி என்று பொருள்தருவதால்,  ஏர் என்று வரும் ஏரன் என்ற சொல்லுக்கு பொருளெழுச்சி உடையவன் என்ற பொருளே கூறவேண்டும்.

குவித்தல் என்பது பெருக்கம் உணர்த்துவதால் குபேரன் என்ற சொல் தமிழ்ச்சொல்தான். வகர பகரப் போலி தமிழிலும் உள்ளதே.

மேற்கொண்டு  ஆய்வு செய்யாமல் இதைத் தமிழென்று முடித்துவிடலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

பராக்கிரமம் என்றது

 இந்தச் சொல்லை இன்று அறிந்துகொள்வோம். 

இது வீரத்தையும் வலிமையையும் குறிக்கும் சொல். வேறு எந்தச் சொற்களால் இதனை விளக்கினாலும் இதன் இறுதியில் நாம்  இந்தப் பொருண்மையைத்தான்  அடைகிறோம். 

மக்கள் பராக்கிரமம் என்பதை மிகப் பெரியது அல்லது பரியது என்று நினைத்தனர்.  பருமைக்கும் பெருமைக்கும் இடையிலுள்ள நுண்பொருளை அவர்கள் கருத்தில் கொண்டனர் என்று சொல்வதற்கில்லை. நடைமுறையில் பெருத்தலும் பருத்தலும் ஒன்றாகவே பலரால் எண்ணப்பட்டது. 

இந்தச் சொல் பரு அல்லது பருத்தல் என்ற சொல்லின் அடிப்படையில் எழுந்தது. உருவில் பரியது இறுதியில் மதிப்பீட்டிலும் தன்மையும் பெரியதாய் எண்ணப்படுவது உலக மக்களிடையே காணப்படும் இயல்பாகும். இந்தச் சொல்லமைப்பில் நாம் இதை முன்மை வாய்ந்த கருத்தாக எடுத்துக்கொள்ளலாகாது.  பருமையானது பெருமைக்கு ஓர் உவமையாகக் கருதப்படுதலிலும் பெரிய தவறு ஒன்றுமில்லை..

இச்சொல்லுக்குரிய வினை பருத்தல் என்பதே.  

பரு+ ஆக்கு + இரு + அம்+ அம் என்ற சொற்கள் உள் நின்று பாராக்கிரமம் என்ற சொல் விளைந்தது.

பரியதாய் ஆக்கப்பட்டு இருந்து அல்லது நிலைபெற்று  அமைவதான தன்மை உடையது என்பது சொல்லமைப்புப் பொருளாகிறது.  அது யாது என்ற கேள்விக்கு வீரமென்ற தன்மை அல்லது வலிமை என்பது பதிலாகிறது.  இவ்வாறு அமைந்ததே இச்சொல்.

வீரமானது பரவலாகப் போற்றப்படுவது என்று பொருள் கொண்டு  பர என்ற வினையிலிருந்து வந்ததாகக் கொண்டாலும் அதனால் பொருளுக்கு அது எதிராக அமைந்துவிடாது. படைவீரரிடம் பரவலாகக் காணப்படும் தன்மை என்றிதற்குப் பொருள் கூறலாமென்றும் உணர்க.

வீரவுணர்ச்சி வீரனிடம் எழுந்து  அல்லது ஆக்கப்பட்டு,  நிலைத்துத் தங்கி ( இரு என்ற சொல்)  அம் என்பதால் நன்ஆகு அமைந்து  ஆவது என்று வரையறவு செய்யலும் ஆகும்.

எளிய சொற்களைக் கொண்டு தமிழில் உண்டான சொல் இது.  உடன் எழுந்த தொழுகை மொழிக்கும் உரியதாகிறது.. இவை எல்லாம் இந்திய மொழிகளே  ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

ஒரு தட்டச்சுப்பிழை திருத்தப்பட்டது. (பொருண்மை)

பகிர்வுரிமை உடையது.


வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

சீடன் என்ற சொல் எங்கிருந்து வந்தது.

 சீடன் என்ற சொல்லைப் பற்றி இன்று சிந்திப்போம்.

சிந்தித்தல் என்றாலே ஒரு குடத்திலுள்ள நீரை சிறிது சிறிதாகச் சிந்துவது போல மூளையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொணருதல் ஆகும். ஆகவே எல்லாவற்றையும் வெளிக்கொணரக் கொஞ்சம் நேரமும் ஆகலாம். ஆர அமர எண்ணிப்பார்த்தல்  என்றும் இதனைக் குறிக்கலாம்.  இப்படிச் செய்வது சீடனுக்கு நல்லது.   அவன் கற்றுக்கொள்ளவும் உணர்ந்து போற்றவும் வாய்ப்புகள் அதிகம் கிட்டும்.

சீடன் சிறிது சிறிதாகக் குருகுல வாசம் செய்யவைத்து ஆசானால் வளர்க்கப் பட்டு முழுமைப் படுத்தப்படுகிறவன்.  ஆனால்  சீடன் குரு சென்றுவிட்ட பிற்காலத்தில் சீடனும் ஒரு குருவாகித் தனக்குச் சீடர்களை வைத்துக்கொண்டு புகழும் பெறக்கூடும். அவன் இன்னாருடைய சீடன் என்று சொல்லப்பட்டாலும், குருவின் மறைவுக்குப் பின் அவருக்கு இணையாகக் கூட எண்ணப்படுபவன். குரு இருந்த இடத்தில் அமர்வதால் அவருக்கு இணையாகிவிடுகிறான் சீடன்.  குரு செய்தவை அனைத்தையும் சீடன் செய்வான்.

ஆகவே சீடன் என்றால் அவன் ஈடன் என்பவனே.  ஈடு> ஈடன் ( ஈடு+ அன்), >  சீடன். அமணர் என்ற சொல் சமணர் என்று வருவது போல் ஈடன் என்ற சொல் சீடன் என்று திரியும். அகர வரிசையில் உள்ள பல சொற்கள் சகர வரிசையினவாகத் திரிந்து வழங்கு இயல்பு.  ஆடி  என்பது சாடி என்று திரிந்து பின் ஜாடி என்றும் வந்தது காண்க. ஆலை> சாலை என்பதும் கருதத் தக்கது.  சோறு ஆகிவிட்டது என்று சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.  அதாவது முடிந்து விட்டது என்ற பொருளில் இது வருகிறது. ஆனால் ஆகு> சாகு என்பது பின்னர் உயிர் உடலில் இல்லை என்பதைக் குறிக்க வருகிறது.   பொருள் சற்றே திரிந்துவிட்டது.  முடிதற் கருத்து இன்னும் அங்கு இருக்கின்றது. 

ஈடன் என்ற சொல்லுக்கு வலியோன், திடமானவன் என்று பொருள். இதுவே  பின் சீடன் என்ற திரிந்து குருவிற்கு ஈடனாவன் என்ற பொருளில் வழங்கி, பின்னர் சீடன் சிஷ்யன் என்று திரிந்து வழங்குகிறது.  இது சீஷன் > சிஷ்யன் என்று குறுகியிருத்தல் இயல்பே  ஆகும்.  நாளை குருவுக்கு ஈடாகுபவன் என்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.

புதன், 6 ஆகஸ்ட், 2025

ஆயிரம் நாமங்கள் எங்கிருந்து வந்தன? சகஸ்ரநாமம்

 ஸகஸ்ர என்ற வடமொழிச் சொல்லே ஆயிரம் என்ற பொருளுடைய சொல்தான்.

இறை வழிபாட்டின் போது ஆயிரத்தெட்டு நாமங்கள் சொல்லி அவரை வழிபடுதல் பண்டை நெறி.  அதனால் கணபதி சகஸ்ரநாமம்,  லலிதா சகஸ்ரநாமம் என்றப்டி ஒவ்வொரு கடவுளுக்கும்  ஆயிரத்தெட்டு கூறப்படும்.

இந்த நாமங்களெல்லாம் பற்றனின் அகத்தில் சுரந்தவை தாம்.  அகத்தில் என்றான் மனத்தில்.  மனத்துள் குடிகொள்பவனே  ஆண்டவன்.

அக சுர >  சக(ஸ்)ர   என்று மாறிற்று. இது அமணர் > சமணர் என்பதுபோலும் அகர சகரத் திரிபாகும். நாமங்களின் பிறப்பிடத்தால் ஏற்பட்ட இனிய பெயர் இது.  எண்களின் பிறப்பிடமும் மனித மனமே ஆகும்.  எண்ணப்படும் பொருள் அகத்தின் வெளியில் இருந்தாலும் எண்ண அறிந்து வெளிப்படுத்தியது மனமே ஆகும்.

சகஸ்ர என்பதற்கு வேறு பிறப்பும் கூறுவதுண்டு,  அவற்றை இங்கு ஆராயவில்லை.

நாவினால் சொல்லி அறியப்படுதலால் நாமங்களுக்கு அப்பெயர் உணடாயிற்று.

நா + அம் > நாமம்,  இந்தில் ம் என்பது இடைநிலை. பழங்காலத்தில் எல்லா நாமங்களும் நாவினால் சொல்லப்பட்டவையே. எழுத்தில் உள்ளவையும் நாவினால் சொல்லப்பட்டுப் பின் பதிவுற்றவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.

சனி, 2 ஆகஸ்ட், 2025

பத்து, நூறு, ஆயிரம் முதல் தசம், சதம் என்பன வரை

 தலைப்பில் கண்ட பத்து, நூறு, தசம், சதம் என்பவை பற்றி அறிந்துகொள்வோம்.

தசைத்தல் என்றால் ''பற்றிப் பிடித்தல்''  என்று சொல்லலாம்.  பிடித்தல் என்பதும் பற்றுதல் என்பதும் ஒரு பொருளன ஆயினும் விளக்கத்தின் பொருட்டு இங்கு இணைத்துக் கூறப்பட்டன.  பல்+ து > பத்து என்பதும் பற்றிக்கொள்ளுதல் என்ற  பொருளுடையதே.  ஒன்றுமுதல் எண்கள் ஒன்றை ஒன்று பற்றிப்  பெரிதாகி,  ( ஒன்றாகி என்பதால் பெரியனவாகி என்று கூறவில்லை.  )  உண்டான எண்ணேதான் தசம் என்பது. பத்து என்பதும் அதுவே.  இவை ஒரே கருத்துடையனவாக உள்ளபடியால்  கருத்தியல் ஒற்றுமை இவ்விரண்டு எண்களுள்ளும் காணப்படுகிறது.  இதுபோலப் பல சொற்களில் கருத்துகள் ஒன்றாய் உள்ளமை எம் இடுகைகளில் சொல்லப்பட்டுள்ளது கண்டுகொள்க.

தசம் என்ற சொல்லை அமைத்தபின், சதம் என்ற சொல்லை அமைப்பதில் அவர்கள் அதிக முயற்சி மேற்கொள்வதைத் தவிர்த்தனர்.  எழுத்துக்களை மாற்றிப்போட்டு,  சதம் என்ற நூறு குறிக்கும் சொல் மேற்கொள்ளப்பட்டது.

தசம் >  சதம் :  இது எழுத்து முறைமாற்றுப் புனைவு என்று பெயர்பெறும்.

சிறிதானது பெரியதாவதுதான்  தசைத்தல் அல்லது கொழுத்தல்.  இவை ஒருவகைப் பெரிதாதல் என்றாலும்  சிலவிடங்களிலே பயன்பாடு உடையது.  கழுதை கொழுத்தது எனலாம்;  ஆனால் மரம் கொழுத்தது என்று பேசுவதைக் கேட்டதில்லை. எங்காவது யாராவது பேசியிருக்கலாம். தசைத்தல் என்பதும் அத்தகையதே  ஆம்.  ஆனால் கொழு என்ற சொல் கொள் என்பதிலிருந்து திரிந்ததுதான்.  முன் இல்லாத சதைப்பிடிப்பு இப்போது ஏற்படுவதை இது குறிக்கும்.  முன் இல்லாத ஒன்றினை இப்போது ''கொள்வதால்''  அல்லது உள்ளடக்குவதால்  கொள் > கொழு என்பது பொருத்தமான சொல்லமைப்பே ஆகும், இதன்மூலம்  சதம்  தசம் என்பன தெளிவாகின்றன.

ஆயிரம் அமைத்த காலத்தில் அதுவே பெரிய எண்ணாய் இருந்தது.  ஆகப் பெரியது என்ற பொருளில்,  ஆய் + இரு   =  ஆகப் பெரியது என்ற பொருளில் அதை அமைத்தனர். இரு என்றால் பெரிது என்றும் பொருள்.

இதையும் வாசித்தறியுங்கள்:

https://sivamaalaa.blogspot.com/2023/01/blog-post_4.html  இங்கு ஏகாதசி என்னும் சொல்லை விளக்குமுகத்தான் யாம் சொல்லமைப்புகள் சிலவற்றை விளக்கியுள்ளோம்.  தொடர்புடைய கருத்துகள் இவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.