திங்கள், 9 ஜூன், 2025

வினோதம் என்ற சொல்.

 வினோதம் என்ற சொல்லின் அமைப்பைக் கண்டு அதன் வினோதம் உணர்வோம்.


வியன் என்ற சொல் நீங்கள் அறிந்ததொன்றாகவே இருக்கும், குறளில் விரி நீர் வியன் உலகத்து உள் நின்று உடற்றும் பசி  என்ற வள்ளுவனின் தொடர் சிறந்த நயம்பொருந்தியது.

வியன் எனின் பெரிது.விரிவானது

முன் பூனையையே கண்டு வளர்ந்தவனுக்கு யானை வினோதமானது. தினமும் காண்பவனுக்கு அது வினோதமாகாது.  வினோதமெனும் மனவுணர்ச்சி மறைந்துவிடும்.

ஆதலால் வியன் என்னும் சொல்லினின்று வினோதம் என்பது அமைந்துள்ளது.  எப்படி எனின் கூறுதும்.

வியன் + ஓது +  அம் = வியனோதம்.

இப்போது யகரத்தை விட்டிடுவோம்.

வினோதம் ஆகிவிட்டது.  ஒரே எழுத்தின் விடுபாட்டில் ஒரு புதிய‌
சொல் கிடைத்துவிட்டது.

வினோதமெனின் பெரிதாக மக்களால் பேசப்படுவது.  அவ்வளவுதான் .  ஓது என்பது  பேச்சைக் குறிக்கிறது.  மந்திரம் ஓதுவதைப் பிற்காலத்தில் குறித்தது.  தொடக்கத்தில்  ஓஓஓஓஓ என்று ஒலி  எழுப்புதலையே குறித்தது.  ஓலமிடுதல் என்ற சொல்லும்  அதே.  ஓஓஓஓ  என்பதுதான். ஒப்புதல் என்ற சொல்லும்  ஓ ஓ என்று சரி கொள்வதையே குறிக்கிறது.   இப்படி ஒலிக்குறிப்புகளைக் கொண்டு அமைந்த சொற்கள் பல்வேறு மொழிகளிலும்  ஏராளம்.  ஈண்டு விரித்தலாகது.  அம்  விகுதி/

புதிதாக உள்ளதைத்தான் பேசுவார்கள் . பழங்  குப்பைகள் பேச்கிக்குரியனவல்ல .

மகிழ்ந்து கொண்டாடலாம்.

ஆதி மனிதன் குகைகளில் வாழ்ந்து கரடி புலிகளுடன் போராடி உணவு தேடித் துன்புற்றான்.  அவனிடம் அகராதியுமில்லை  முகராதியுமில்லை. நாலைந்து சொற்களுக்கே அவன் சொந்தக்காரனாயிருந்தான். பல சொற்களைப் படைத்து மொழியை உருவாக்க வேண்டின், இதுபோன்ற தந்திரங்களைக் கையாள வேண்டுமல்லவா. இந்தப் பதங்களெல்லாம் ஒன்று தங்கத்தட்டில் வைத்து கடவுள் நீட்டினார் என்று எண்ணுகிறவன், மொழிவரலாறும் மனித வரலாறும் அறியாதவன். மனிதனின் கள்ளம் அவன் மொழியிலும் பளிச்சிடவேண்டுமே.

வி + நோ தம்  என்று பிரித்து  அதிலிருந்து  நூதனம் என்பதைப் பிறப்பித்தால் இன்னும் புலமை. பண்டையரைப் பாராட்டுவோம் .

வினோதம் என்ற சொல் பிறவழிகளிலும் விளக்கத்தக்கது ஆகும்.  இது ஒரு பல்பிறப்பி  ஆகும்.

சிவமாலா   23.2.2016

கருத்துகள் இல்லை: