பரவுதல் என்பது பல்பொருளொரு சொல் என்பர். ஒரு திசையிலும் பல்திசைகளிலும் சென்றேறும் ஒன்றைப் பரவுகிறது என்போம். இதற்கு இன்னொரு பொருள்: தொழுதல் என்பதுமாகும். கடவுட் கொள்கையும் அதைப் பின்பற்றிய மனிதச் செயல்களும் தொழுகைக் கருத்தியல்களும் ஒருவனிடமிருந்து இன்னொருவனுக்குப் பரவக் கூடியவை, பரவிய மாத்திரத்தில் அந்த இன்னொருவன் கடைப்பிடிப்புடன் அதன் பல்வேறு அமைப்புச்செயல்களையும் தன் நடவடிக்கைகளில் கொணர்ந்துவிடுவான். ஆகவே காற்று எங்கும் ஊர்ந்து செல்லுதல்போல இது பரவத் தொடங்கிவிடுகிறது. என்வே தொழுதலுக்குப் பரவுதல் என்பது இன்னொரு சொல்லாகிவிட்டது.
'' தொண்டர் பரவும் மிடற்றாய் போற்றி,
தொழினோக்கி ஆளும் சுடரே போற்றி''
பின்பற்றும் போது கும்பிடும் முறைகளை நன் கு அறிந்து கடைப்பிடிப்பது பற்றர்களுக்கு வழக்கம். ஆனால் சிலர் தவறாகக் கடைப்பிடிப்பதும் உண்டு. அப்போது இறைப்பணி பிழைப்பதை ( தவறு படுவதை ) ப் பிறர் திருத்தினர். திருத்துங்கால் சரிவராவிட்டால் சிலர் அடியும் கொடுத்துத் திருத்துவதுண்டு.
''போதுவித்தாய் நின் பணி பிழைக்கிற புளியம் வளாரால்
மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே''
என்று பாடல் வருவதால், புளியம் வளார் கொண்டு அடிக்கப்பட்டும் ஆத்திரத்துடன் அதட்டபட்டும் இறைப்பற்றினை அறிந்துகொண்டவர்களும் உண்டு என்று அறிந்துகொள்க.
வளார் - மரக்கிளை அல்லது தடி.
எழுத்துக் கற்ற மாணவன் முதல் இறைப்பற்று அறிவிக்கப்பட்ட மாணவன் வரை உதைவாங்கிப் பாடம் புகட்டப்பட்டோர் இருந்தனர் என்று அறிந்துகொள்கிறோம்.
கற்பிக்கப்படுவது எல்லோருக்கும் சரிவரப் பதிந்துவிடுவதில்லை.
'' கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங்குரைத்தே''
என்று தொல்காப்பியனார் கூறுவதால் (தொல். மெய்ப்பாட்டியல். உஎ)
சொல்ல்லிக்கொடுப்பதை உடன் உணர்ந்துகொள்வோர் சிலரே ஆவர்.
இவ்வாறு பரவியது பலவகையாகும். அதனால் ''பரவுதல்'' என்பதன் பொருளை அறிந்துகொள்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை வழங்கப்பட்டுள்ளது.