போரிடக் காண்பதோ யார்க்குமோர் துன்பமே
நேர்வன அழிவுடன் பல்லோர் இறத்தலே
சீர்பெற ஞாலத் தலைவர் தொண்டர்மேற்
பார்வையில் எங்கோ சோர்வெனக் கொள்வதோ.
குழந்தைகள் முதியோர் கொல்லப் பட்டனர்
இழந்தனர் கணவரைப் பல்லிள மனைவியர்
வளர்ந்தன பொருட்கள்தம் வணிகர் விலைகளும்
உழந்தனர் மக்களும் ஆயிரம் தொல்லைகள்.
வண்டிகள் எண்ணெய் வான்விலை தொட்டதும்
கொண்டிகள் போட்டுநம் வீட்டினுள் குந்திட!
எண்டிசை உலகிலும் இணையில் புலம்பலே
கொண்டவர் தம்முடன் பெண்டிரும் முரண்கொள.
இத்துணைத் துயர்களும் இழைத்திடும் போர்தனை
எற்றி விரட்டிட இனும்மனம் இல்லையோ?
கொத்துக் கொத்தென குடிகள் மடிதலில்
மெத்த நலமென மிஞ்சிய தென்னவோ?
ஓர் துன்பமே - கவிதையில் ஒரு என்பது ஓர் என்று வரலாம்.
நேர்வன - நடப்பவைகள்
மேற்பார்வை - தலைவர் மற்றும் மேலாளர் வழிகாட்டுதல்
சோர்வு - பிசகு
வணிகர்விலை - விற்கும்விலைகள்
உழந்தனர் - அனுபவித்தனர்
வான்விலை - உயர்ந்தவிலை
கொண்டி - தாழ்ப்பாள்
எண்டிசை - எட்டுத் திசைகள்
கொண்டவர் - கணவன்மார்
எற்றி - காலால் உதைத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக