புதன், 30 அக்டோபர், 2019

மாரன் சுகுமாரன் மாறன் என்பவை

தமிழில் மாரன், மாறன் என்று இரு ஒலியணுக்கமுடைய  சொற்கள் உள்ளன..

இதில் மாறன் என்பது பாண்டியனைக் குறிக்கும் சொல்.  சுருக்கமாகச் சொன்னால் :

மறு +  அன் = மாறன்:   அதாவது எதிரிகளை மோலோங்க விடாமல் போரில் மறுத்து நின்று வெற்றியை ஈட்டிக்கொள்பவன் என்று பொருள்.  முதனிலை  மகரம்  மா என்று நெடிலாக நீண்டது. வீரம் என்று பொருள்படும் மறம் என்பது முதனிலை நீளவில்லை. முதனிலை  நீண்ட சொற்கள் பல. அவற்றைப் பழைய இடுகைகளில் கண்டு மகிழ்க.

மாரன் என்ற சொல்  மரு+ அன் எனற்பாலது முதனிலை நீண்டு அமைந்தது ஆகும்.

மரு > மருவு:   தழுவுதல் குறிக்கும் வினைச்சொல்.

மரு +  அன்  =  மாரன்
பொருள்:  தழுவி நிற்போன். கணவன்,   காதலன்,  என்றெலாம் விரித்துக்கொள்க.

சுகுமாரன் என்பதன் முந்துவடிவம்  உகு மாரன் என்றிருந்தது தெளிவு.  உகுதலாவது  இலைபோல் வீழ்தல்.  காதலினால் வீழ்தல்.  மாரன் என்பது மேற்சொன்னதே  ஆகும்.

உகுமாரன் > சுகுமாரன்.

இது அமண் >  சமண் என்பதுபோலும் திரிபு. இவ்வரிசையில் பல காட்டியுள்ளேம்.
பழைய இடுகைகள் காண்க.

தட்டச்சுப் பிழை - திருத்தம் பின்.




சனி, 26 அக்டோபர், 2019

தீபாவளி வாழ்த்துகள்

 தீபத்  திருநாளின் வாழ்த்தனை வர்க்குமே
சீர்பதி   னாறுமே  சேர்ந்திணைந்தே----- நேர்படுக
ஆபத்  துலகில் அகன்றவனி மேம்படும்நம்.
நாபுத் துணவும் நயந்து

புதன், 23 அக்டோபர், 2019

அயல் அந்நியன் ஒருதாய்ப் பிள்ளைகள்.

"வடசொல் என்று கருதப்பட்ட " அந்நியன்" என்ற சொல்லுக்கும் "அயல்" என்பதற்கும் ஒரே அம்மா என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்.

இது உண்மையா என்று ஆய்வோம்.

அந்நியன் என்பது  " அல் நீ  அன்" என்று திறமையாகத் திரிக்கப்பெற்ற சொல்.

இதன் பொருள்:  நீ அல்லாத பிறன்"  என்பது.  பிறன்  என்ற சொல்லை உள்ளே கொணராமல்,   " நீ அல்லாத ஒருவன்" என்றால் கூறியது கூறலை விலக்கிவிடலாம்.

அல் என்பதோ  அ+இல் என்பதன் சுருக்கம்.

அ இல் :  என்றால்  அங்கு  இல்லாதது.  இதில்  அங்கு என்பதே சுட்டு.

அயல்  எனில்  அ+ அல் என்பதன் புணர்வு.  யகர ஒற்று உடம்படுமெய்.  அவ்விடம் அல்லாத இன்னோர்  இடம்.

இரண்டு சொற்களிலும் அகரச் சுட்டு இருப்பதால் இவை சுட்டடிச் சொற்களே.

அல்லுக்கும் இல்லுக்கும் உண்டான நுண்பொருள் வேறுபாடு பின் விளைந்தது.

மற்றவை பின்னொருநாள் வரும்.

மேலும் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_21.html

https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_29.html

புதன், 16 அக்டோபர், 2019

கௌரவித்தல்

இன்று கௌரவித்தல் என்ற சொ ல்லின் அமைப்பினை ஆய்வு செய்வோம்.

முன்னா  ளாய்வுகளின்படி  இது குரு ( கற்பிப்போன்) என்னும் சொல்லினின்று வருகிறதென்பர்.  இருக்கலாம்!  முன்னோர் கூறியதை மதிப்போம், மாண்பென்று காண்போம். இது நம் கடனே ஆகும்.

ஆயினும் ஆய்வதும் அறிவுடைமையே.  இல்லையேல் இறக்கையற்ற மனிதன் ஒலிமிகைப் பறவூர்தியில் விண்ணிற் செல்வதெப்படி?

குரு  என்னும் சொல்லைப் பார்ப்போம்.

குரு என்ற சொல் அடிப்படையில் ஒலி என்று பொருள்படுவது.

குர்ர் குர்ர் என்று ஒலி எழுப்பும் சிறு பறவை குருவி ஆனது.

குர்+ வி = குருவி.  வி என்பது விகுதி.  உகரம் ஒரு சாரியை.  இடைநிலை எனினுமாம்.  (கல்> கல்வி.   வி: விகுதி).

குர் > குரங்கு.   ( குர் என்ற ஒலியெழுப்பும் விலங்கு).

இது வலித்துக் குரக்கு என்றுமாகும்.

குர்  >  குரம்  (ஒலி).

குர் >  குரல்.  (தொண்டையொலி,  வாயொலி.)

குர் >  குரைத்தல்.  (நாயொலி)

குர்> குரவை:   ஒலி.  (  ஒலியுடன்  மகளிர்  ஆடுவது).

முற்காலத்து  ஆசிரியன்மாரெல்லாம் மிகுந்த ஒலி எழுப்பியே மாணவர்க்குக்
கற்பித்தனர் என்பது அறிக.  ஆகையால் சொற்கள் இவ்வாறு எழுந்தன.

வாய்>  வாய்த்தி > வாய்த்தியார் > வாத்தியார். வாய் என்பது ஒலியுறுப்பு.

குர் >  குரவர்  =  ஆசிரியர்.

குர் என்பது உகர ஈறு பெற்றும் பெயராயிற்று..

உகர ஈறு பெற்ற வேறு சொற்கள்:

பரு,  உரு, மரு  என்பவும் பிறவும்.

குரு என்பது பின் அயலொலி  ஏற்றது.

நல்ல அறிவாளியை ஓர் ஆசிரியனுக்கு நிகராய் மதித்து அதை வெளியிடுவதே
கௌரவித்தல் எனலாம். பிற வகையின பின் வந்தவை என்பது தெளிவு. ஒப்புமைகள் பின்னர் தோன்றுவன.

அரசன் தன் பாதுகாப்பும் துணையாகும் வலிமையும் கருதி யாரையும் கவுரவிக்கலாம்.  இதில் ஒருவர் ஆசிரிய நிலைக்கு மேலெழும்பினார் என்பது
அவ்வளவு பொருத்தமானது என்று கூறுவதற்கில்லை. அவர் உண்மையில்:

கா+ உறவு + இ  = காவுறவி >  கவுரவி :  கவுரவிக்கப்பட்டார் என்பதே சரி.

முதலெழுத்துக் குறுக்கம்.
றகரத்துக்கு ரகரம்.

இத்தகு திரிபுகள்  பற்பல நாம் முன் காட்டியுள்ளோம்.

அரசன் அன்னாரைக் காக்கவும் அன்னார் அரசனைக் காக்கவுமான உறவு ஏற்பட்ட நிலையே கவுரவித்தல்.

சிந்தித்து மகிழ்வீர்.


திங்கள், 14 அக்டோபர், 2019

ஜின்பிங்க் வருகையின் பின் நல்லமைதி.

இந்தியாவில் சீன அதிபர்

கவிதை.



சீன அதிபரும் இந்தியா வந்துளார்
காணச் செவிகொள மாணுறு செய்தியே
எல்லையில் கோடே துளதொரு தொல்லையும்;
ஒல்லுறு வாணிபத் தொருபக வோங்கலும்
கொல்படைத் தீவிர வாதி குறும்பொடு
பல்பொருள் பேச்சுக் கணிசேர் பயனே
அதிபர் அவரெனின் சீன உணவர்
புதியன தென்னாட் டுணவுமுன் வைக்கவும்
ஏற்றார் சமையலைப் போற்றினர் உண்டனர்
ஒன்றும் தயக்கமே கொள்ளுதல் இன்றியே
நன்று திசையூண் நயந்தனர் வெற்றியே
மாமல்லை வந்த மணிபொங்கு  மன்னவர்க்குத்
தஞ்சையின் கோழிக் கறியும் இறைச்சியும்
நண்டும் நனிபல பக்கக் கறிகளொடு
விஞ்சும் சுவைத்தே விழுஅடைக் காய்ச்சி
விருந்திற் கொடுத்தே அருந்த அழைத்தனர்
இந்திய நாட்டின் இனியவர் மோடி
உணவும் உரைகளும் முற்றுப் பெறவே
இணையில் தலைவர்நம் சின்பெங்கும் சென்றுளார்
வானிடை ஏறியே சீனமும் நோக்கியே
மாணமைதி ஞாலம் பெறும்.

அரும்பொருள்:


எல்லையில் கோடே து --- சீன இந்திய எல்லையில் எல்லைக்கோடுகள்
வரையறை செய்யப்படவில்லை இன்னும்.

உளதொரு தொல்லையும்  -   அதனால் புரிந்துணர்வுகள் வேறுபட்டுத் தொல்லைகள் உள்ளன. இது நிலைமை.

ஒல்லுறு  -   நடைபெறுகின்ற

 ஒரு பகவு    ஓங்கலும்  -    ஒரு நாட்டின் பக்கம்  வர்த்தகம் சாதகமாயிருப்பதும்

உணவர் -   பழக்கமான உணவு கொள்பவர். 

விஞ்சும் -  மிகுதியாகும்.

அடைக்காய்ச்சி  -  அடைப்பிரதமம்

மாணமைதி  -   சிறந்த அமைதி.

ஞாலம் - உலகம்.





திருத்தம் பின்



சனி, 12 அக்டோபர், 2019

0னகர ணகரப் பரிமாற்றுகள்.

செந்தமிழ்ச் சொல்வடிவம் உடையன  ஒன்று மூன்று என்ற சொல்வடிவங்கள்.

மூன்+ து =  மூன்று.
ஒன்+ து  =  ஒன்று.

ஒன்  என்ற ஒன்றைக் குறிக்கும் சொல்வடிவம்  மூலவடிவம் அன்று. அதனின் மூத்த வடிவமும் முதல் வடிவமும் " ஒல்"  என்பதே. ஒடு, ஒட்டு, ஒற்று, ஒற்றை. ஓடு என்று ஒல்-ஒன் என்பவற்றில் உறவும் பிறப்பும் உடையன பலவாம்.  அகல உடம்பின் வெளிக்கோடுகள்  உள்நெருங்கி ஒன்றுபடு நெறியிற் சென்றிருக்க நடமாடும் மனிதனே ஒல்லியான மனிதன். இப்படி யாம்
விரி-வரிப்பது  (>> விவரிப்பது)* முயன்று  வாசிக்கப்2     புரிந்துகொள்ளக்கூடியதே.

இன்னும் ( ஒல் >ஒர்>) ஒரு என்பதும் உள்ளது.

எனவே:

ஒல் +து =  ஒன்று
மூல் +  து  =  மூன்று.


மேல் யாம்  உரைத்தன ஒரு முன்னுரையே.

உங்கள் கவனத்துக்கு:

ஒன்று  என்பது   ஒன்னு,  ஒண்ணு என்று  திரியும். 0னகர ஒற்றுக்கு  ணகர ஒற்று வரலாயிற்று.

மூன்று என்பது  மூனு,  மூணு என்று  திரியும்.  இங்கும் 0னகர ஒற்றுக்கு  ணகர ஒற்று வரலாயிற்று.

0னகர ணகரப் பரிமாற்றுகள் பற்றி விவரிக்கையில் இத்தகு திரிபுகளையும் முன்னிருத்திக் கொள்க.


அடிக்குறிப்புகள்

*விவரித்தல் என்பது  விரி-வரித்தல் என்பதன் மரூஉ.
2 வாய்> வாயித்தல் > வாசித்தல்.  ய>ச

புதன், 9 அக்டோபர், 2019

சீனாவை மட்டுமோ?




சீனாவை மட்டுமோ செந்தமிழர்
ஏ நா  டென்றாலும் சுற்றிவருவர்!
மானாக மனத்துளே அன்புவைத்தார்,
 கூனொன்று மில்லாத குதூகலமே.




சீனாவின் கடைத்தெருவில்.

 ஏ  = எந்த.


செவ்வாய், 8 அக்டோபர், 2019

எம் வெண்பாவுக்கு என்ன பொருள்?

மயங்குவது  தான்ம தயங்கும் வதனம்

தயங்கு தயைஎன லாகும்===நயங்காண்

விபுலம்  விழுபுலம்  காணும்  கமலம்

கழுமலர் குன்ற லிடை.

 

இது எம் வெண்பா. அலகிட்டு ஓசையும் கண்டு

இதற்குப் பொருள் கூறுங்கள்.  


திங்கள், 7 அக்டோபர், 2019

துக்கம் சொல்லுக்கு இருமுடிபு.

இறந்துபோன மனிதனைத் தூக்கி, இடுகாட்டுக்குக் கொண்டு செல்வர்,  அல்லது சுடுகாடு கொண்டுபோவர்.  ஆகவே பிறர்கேட்பது:  எத்தனை மணிக்குத் தூக்குகிறார்கள் என்பது.  இறந்தபோது ஏற்பட்ட துன்பம் தூக்கும்போது மேலிடுகிறது,

தூக்கு >  தூக்கு + அம் >  துக்கம்.

நெடிலான முதலெழுத்து விகுதியேற்றுக் குறிலாகும்.

அரசு தூக்கிலிடும்போதும் தூக்கு என்ற சொல்லே வருகிறது. இங்கும்  தூக்கு > துக்கம் என்றே ஆகிறது.

முதலெழுத்துக் குறுக்கம்:

இதற்கு இன்னோர் உதாரணம்:  சா+ அம் =  சவம். (பிணம்).
தோண்டு+ ஐ =  தொண்டை எனினுமது.

இன்னும் வேண்டின் பழைய இடுகைகளில் காண்க.

துறத்தல் அடியாகப் பிறந்த துறக்கம் என்பதும்  உயிர்துறத்தல் கருத்தில் றகரம் இடைக்குறைந்து  துக்கம் என்றாகும்.   ஆதலின் இஃது ஓர் இருபிறப்பி ஆகும்..

தக + அனல் =  >   தக அனம் > தகனம்.

தகுந்தபடி அனல்படுத்துவது, அல்லது தகத்தக என்னும் அனலில் இடுவது.

பிழைபுகின் திருத்தம்பின்.

சனி, 5 அக்டோபர், 2019

மும்முரம் -எழுத்து பொருள் திரிபுகள்.

ஒருவன் ஒருமுறை செய்வதை மூன்று முறை விடாமற் செய்தானென்றால் அவன் அதில் மும்முரமாக ஈடுபடுகிறான் என்று ஊர்மக்கள் எடுத்துக்கொள்வர்.

மும்முரம் என்பது ஈடுபாட்டின் அகலத்தை அல்லது விரிவினைக்  குறித்து வழங்கினாலும்  அந்தச் சொல்லெழுந்ததோ தடவைகள் மூன்று என்ற கருத்திலிருந்து தான். தடவையினின்று செயல் விரிகை காட்டினமையால் பொருள் சற்றே  திரிந்து  அது திரிசொல்லாயிற்று. இது பொருட்டிரிபு ஆகும்.

அத்துடன் சொல்லும் திரிந்தது காணலாம்.

மும்முறை -  மும்முரம்.

முறை என்பது  மு+(ற்+ ஐ)..என்று எழுத்துப்பிரிப்பு அடையும்.

இதில் ஐகாரம் விலக,  முற் என மிஞ்சும்.

ற் என்னும் வல்லொலி நீங்க  ஆங்கு ரகர ஒற்று இடம் கொள்ளும்.

இப்போது   இருப்பது  முர் என்பதே.

இதில்  அம் விகுதி புக,   முரம்   ஆகும்.

இதற்கு ஓர் உதாரணம் காட்டுதும்.

வீறு  என்ற மனத்திட்பம் குறித்த சொல் அம் விகுதி பெற்று  வீரம்  ஆனது காண்க.  அது வீறம்  என்று வரவில்லை.  வீறு என்பதும் வீரு என்று வடிவம்கொள்வதில்லை.  வீரு எனின் அஃது செந்தமிழியற்கை வழுவிற்று.
வாய்ப்பேச்சில் நீண்டொலிக்க விலக்கில்லை.

வீர் என்பதே அடி, அடியினின்று செலின்  வீர்+ அம் = வீரம்  ஆகும். வீர் என்பதும் விரைவுடன் தொடர்புடைச் சொல்.

ஐகாரக் குறுக்கத்துக்கு எ-டு:   தீ + விரை + அம் >  தீ + விர் + அம்  = தீவிரம்.

விரை என்பது தன் ஐகாரமிழந்து விர் என்றே சொல்லாக்கத்துள் நின்றது.

இத்தகு திரிபுகளால்  மும்முரம் பொருட்டிரிபும் எழுத்துத் திரிபும் உடைத்தாயிற்று.

இச்சொல் ஒரு பகுதியே காரணத்துடன் நின்றமையின்  காரண இடுகுறி ஆயிற்று. பொருள் விரிந்து செயல் அகலத்துடன் அதனில் ( செயலின்) ஆழ்ந்த ஈடுபாட்டையும் இப்போது குறிக்கும்.

மும்முறையே அன்றிப் பன்முறைச் செயலும் குறிக்க விரியும். ஈண்டு மும்மைச் சொல் பொருளிழக்க நேர்ந்தது.

மும்முறம் என்றே விட்டிருப்பின் பொருட்கேடுறுதல் காண்க.
அறிவீர் மகிழ்வீர்.




பிழை புகின் திருத்தம் பின்.
கண்ட இரு பிழைகள் திருத்தம் பெற்றன.7.10.19  காலை.