சனி, 14 அக்டோபர், 2023

போர் இல்லாத உலகம் வேண்டாமோ?

 போரிடக்  காண்பதோ  யார்க்குமோர் துன்பமே

நேர்வன அழிவுடன்  பல்லோர்  இறத்தலே

சீர்பெற ஞாலத்  தலைவர் தொண்டர்மேற்

பார்வையில் எங்கோ  சோர்வெனக் கொள்வதோ.


குழந்தைகள் முதியோர் கொல்லப்  பட்டனர்

இழந்தனர் கணவரைப்  பல்லிள  மனைவியர்

வளர்ந்தன  பொருட்கள்தம்  வணிகர் விலைகளும்

உழந்தனர் மக்களும்  ஆயிரம் தொல்லைகள்.


வண்டிகள்  எண்ணெய் வான்விலை தொட்டதும்

கொண்டிகள் போட்டுநம் வீட்டினுள் குந்திட!

எண்டிசை உலகிலும் இணையில் புலம்பலே

கொண்டவர் தம்முடன் பெண்டிரும்  முரண்கொள.


இத்துணைத் துயர்களும் இழைத்திடும் போர்தனை

எற்றி விரட்டிட இனும்மனம் இல்லையோ?

கொத்துக் கொத்தென  குடிகள்  மடிதலில்

மெத்த நலமென மிஞ்சிய தென்னவோ? 



ஓர் துன்பமே - கவிதையில் ஒரு என்பது ஓர் என்று வரலாம்.

நேர்வன - நடப்பவைகள்

மேற்பார்வை -  தலைவர் மற்றும் மேலாளர் வழிகாட்டுதல்

சோர்வு -  பிசகு

வணிகர்விலை - விற்கும்விலைகள்

உழந்தனர் -  அனுபவித்தனர்

வான்விலை -  உயர்ந்தவிலை

கொண்டி - தாழ்ப்பாள்

எண்டிசை -  எட்டுத் திசைகள்

கொண்டவர் -  கணவன்மார்

எற்றி  -  காலால் உதைத்து.

புதன், 11 அக்டோபர், 2023

தொப்புள்

தொப்புள்  என்ற சொல்லின் உள்ள தொப்பு என்பது,  உள்ளாக வயிறு தொய்தலைக் குறிக்கிறது,   தொய்வு என்பது உள்ளாகவும் வெளியாகவும் அமையலாம் ஆகையால்,    இச்சொல் உள் என்ற சொல்லுடன் முடிகிறது.  உள் என்பதை விகுதியாகக் கொண்டாலும்  ஒரு தனிச்சொல்லாகக் கொண்டாலும் இச்சொல்லின் பொருள் ஏதும் பாதிப்பு அடையவில்லை என்பதே  உண்மை  இங்கு விளக்கத்தின் பொருட்டு,  உள் என்பதை உள்ளாக என்று எடுத்துக்கொள்வோம்.

தொய் என்பது  கடைக்குறைந்தால்  தொ என்றாகும், " தொ" என்ற சொல் காணப்படாமையால்,  இதை  தொய்>  தொய்ப்பு >  தொப்பு என்று காட்டுவதே பொருந்தும்  திரிபு  ஆகும்.  உள் என்ற சொல்லை இணைக்க,  ஓர் உகரம் கெட, தொப்புள்  ஆகிறது.  யகர ஒற்று இறுதி சொற்களில் மறைதல் இயல்பு.  எடுத்துக்காட்டு:  தாய் >  தாய் + தி >  தாதி  ( தாதிமார்).   இங்கு யகர ஒற்று மறைந்தது.  இன்னொன்று:  வேய்(தல்) >  வேய்வு >  வேவு.   ( வேவு பார்த்தல்).  பெரும்பாலும் மாறுவேடத்தில் ஒற்றர் சென்று பணியாற்றியமையால்,  இது வேய்தல் அடியாக அமைந்தது.  வேய் -  வேடு >  வேடம்.  கேட்டால் விரிவாக உணர்த்தப்பெறுவீர்.

உள் என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்ற சொற்கள் பல.  நாம் நன்கு  அறிந்த விகுதி பெற்ற சொல்  "கடவுள்" என்பது.  இ( ன்னொன்று ஆயுள் என்பது.  உயிருடன் உடல் கூடிவாழ்தலே  ஆக்கம்  ஆகும். அவ்வாறின்மை என்பது அழிவு என்றறிக.  ஆக்கமுற இவ்வுலகில் உலவுதல் அல்லது இருத்தல் என்பதே ஆயுள் என்ற சொல்லால் குறிக்கப்பெறுகிறது. இச்சொல் பின்னர்  ஆயுசு என்றும் பேச்சு வழக்கில் வரும்.  ஆயுசு என்பது திரிசொல் ஆகும் என்பதறிக.  ஒரு திரிசொல்லைப் பிரித்து அடிச்சொல் கூறினால் சில வேளைகளில் தவறாக முடியும்  ஆதலின் கவனம் தேவை.

தொய்ப்பு + உள்  >  தொப்புள்,  

தொப்புள் என்பதற்கு இன்னொரு பெயர் :  உந்தி என்பது.  இதனை "கரியமால் உந்தியில் வந்தோன்"  என்று ஔவையின் பாட்டில் வருதல்கொண்டு அறிக.  தொப்புள் என்பது கொப்பூழ் என்றும் திரியும்.  இங்கு தொப்புள் என்பது " உள் கொண்ட "   ( பெரும்பாலும் உள் இழுத்துக்கொண்ட அல்லது தொய்ந்த நிலையில் இருப்பதனால்,  கொள் > கொப்பூழ் என்றும் கூறலாம் என்றாலும்,  தொப்புள் >  கொப்பூழ்  திரிபு  என்பதும் பொருத்தமே. 

கொள் >  கொள்+ பு>  கொட்பு  + உள் >  கொப்பு+ ஊழ் >  கொப்பூழ்.  இங்கு உள் என்பது ஊழ் என்று திரிந்தது.  இதிலிருந்து ஊழ் வினை என்பது மனிதனின் ஆன்மாவின் உள்ளிருக்கும் (முன்) வினை என்பதும் தெளியலாம்.

 தொ என்பது சொ என்றும் பின் சொ என்பது கொ என்றும் திரியும்.  ( தனி> சனி;  தங்கு> சங்கு ). இது பின்னும்  சேரலம் > கேரளம் என்பதாய்த் திரியும்.  ஆகவே தொப்புள் என்பது கொப்பூழ் என்று திரிவது முறைப்படியாக  அமைந்ததே ஆகும்.

தொப்புள் >  கொப்பூழ்.  ளகர ஒற்று ழகர ஒற்றானது,   இது  தமில் >  தமிழ் என்பது போலும்.  தம் இல் மொழி  தமில் > தமிழானதாய் அறிஞர்கள் கூறுவர்.

இன்னும் இவ்வாறு திரிந்தவைகளை முன்னர் வந்த இடுகைகளில் கண்டறிக.  குறிப்பெடுத்துக்கொண்டு மனப்பாடம் செய்துகொள்க.  இதனால் அடிக்கடி தேடிக்காணும் நேரம் குறையும்.

உந்தி >  ( உந்தி வெளிவருவது என்று பொருள்).

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

ஞாயிறு, 8 அக்டோபர், 2023

பிராணி, பிராந்தியம்

அண்முதல்   என்ற  சொல்லின் பொருள் :  நெருங்கிச்செல்லுதல் என்பதாம்.   இஃது அண்ணுதலென்றும் வடிவம் கொள்ளும்.   அணத்தல்,  அண்வருதல். அணவுதல் என்பனவும் இணைப்பொருண்மையன  ஆகுமென்றறிக.

இப்போது தேர்தல் களம் நெருங்கிக்கொண்டுள்ளது.   தேர்தலிற் கூட்டணிகள் ஏற்படுதல் இயல்பு. ஓர் அணியினர் இன்னொரு கூட்டத்தாரை அணுகி,  ஒன்றாக களப்பணிகளில் இறங்க முனைவராயின்,   அவர்கள் ஒரு கூட்டணியினர் என்று சொல்கிறோம்.  இவற்றிலெல்லாம்  அண் என்ற அடிச்சொல்லே சொற்களை நமக்குத் தருகிறது.

அண்முதல், (  வினையாக்கம்:  அண்+ ம் + உ , இவற்றுள்  ம் என்பது  இடைநிலை,  உ என்பதுதான் வினையைப்  பிறப்பிக்கும் விகுதி  ), இதில் தல் என்னும் பெயர்ச்சொல் விகுதியைச் சேர்த்தால்  தொழிற்பெயர் என்று கூறுவோம்.  வினையிலிருந்து உருவான பெயர்.  அதாவது ஒரு செயலுக்குப் பெயராவது.

பிராந்தியம் என்ற சொல்லிலும் இந்த  அண் என்பதைக் கண்டுகொள்ளலாம். ஓர் அரசுக்குட் பட்ட பகுதிக்குள் முறையாகவோ தொடக்கத்திலிருந்தோ உள்ளடங்காமல்,  தனியாக ஆளப்படும் நிலப்பகுதியை இவ்வாறு குறித்தல்கூடும்.  இது:

பிற + அண் + தி + அம்

என்று பகுத்தறியப்படுவது  சிறப்பாம்.  பெரும்பான்மை இத்தகு நிலப்பகுதிகள் அண்மி இருப்பவை.  தி அம் என்பன தேயம் என்பதன் திரிபாக அறியப்பட்டுள்ளதனை இங்குக் காணலாம்.   அன்றி  தி விகுதி என்று எண்ணப்படுதலும் இழுக்காது என்று அறிக.

https://sivamaalaa.blogspot.com/2019/04/blog-post_25.html

பிராணி என்ற சொல்லும் மனிதரல்லாத பிற அணியில் உள்ள உயிர்கள் என்று பொருள்பட்டுத் தமிழாதல் காண்க.  இதை முன்னைய ஆய்வாளர்கள் இவ்வாறு சிந்திக்க மறந்தனர்.  இவ் வாறு  சிந்தித்தல் தமிழுக்கும் பிறவுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைத் தெளிவுபடுத்துவதாகும்,  இத்தகைய பல்வேறு ஒற்றுமைகள் வெறும் உடனிகழ்வாதல் (mere coincidence)  இயலாமை உணர்க.  அதனால்தான் சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பியம் அன்று என்று கூறலானோம். இப்பூசை செய்வார் மொழி உண்மையில் வெளியிலிருந்து வரவில்லை என்பதே உண்மையாகும். வெள்ளைக்காரன் உரையை வெற்றுக்கட்டு (புனைவு) என்பதால் நாம் ஏற்கவில்லை. 

பிற என்ற சொல் சொல்லாக்கத்தில் ஒரு பகுதியாக வருங்கால்,  அது பிர என்று மாறிவிடும்,  றகரம்  ரகரமாகும்.  வல்லொலி இடையின ஒலியாய் மாறி மென்மை பெறும்,  இதை முன் சுட்டிக்காட்டி யுள்ளோம்.  இதை அறிவதும் முதன்மையாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்