திங்கள், 20 மார்ச், 2023

இரும்பிலும் உண்ண நினைக்கும் எறும்பு

 இந்தக் கவிதை,  இன்று உருப்பெற்றதுதான்.  ஓர் வெள்ளுருக்குக் கரண்டியில் ( stainless steel spoon )   ஓடிக்கொண்டிருந்த எறும்பைக் கண்டு கவிதை எழுந்தது.  அதன் நிலைக்கு இரங்கியதே காரணம்.  கவிதை கடினமற்ற பதங்களில் அமைந்த படியால்,  விளக்கம் விரிக்கவேண்டாம் என்று நினைக்கின்றோம்.


வடையின் மணமிருக்கு ---  ஆனால்

வடையைக் காணவில்லை;

தடயம்  அறிஎறும்பு  ----  கரண்டியில்

தள்ளாடி அலைகிறதே!


வடையின் துணுக்கொன்றையே ---எறும்பும்

அடையக் கொடுத்திடுவாய்.

கடைக்கு வடைவாங்கவே ----  பாவம்

கட்டெறும்  பேறிடுமோ?


எல்லா உயிருடனும் ----  தம்பி 

இயலும்  நண்புகொள்வாய்,

இல்லை  எனா உலகில் ---  எறும்பும்

ஏற்றம் காணட்டுமே.


எவ்வுயிர்  என்றாலுமே  ----  துன்பம்

ஏறி   வருந்துகையில்,

இவ்வுயிர் எனதுமட்டும் ---- மகிழ்ந்தே

இருந்திடல்  பொருந்துவதோ..


------  சிவமாலா. 


கொடுத்த சிறு  துகளை  இழுத்துக்கொண்டு அந்த எறும்பு

நகர்ந்து நகர்ந்து காணாமற்  போய்விட்டது  ஆனந்தமே.


ஆனந்தம் :  ஆக நன்று >   ஆ நன் து அம் >  ஆனந்தம்.

நன்று =  நன் + து.



சனி, 11 மார்ச், 2023

பண்டை அரசர்கள் தமிழை எப்படிப் பயன்படுத்தினர்

 தமிழ்நாட்டுக்கு அப்பால் வாழ்ந்த அரசர்கள்  தங்களுக்கு முக்கியமான நேரங்களில் தமிழை எப்படிப் பயன்படுத்திச் சொற்களை அமைத்துக்கொண்டனர்  என அறிந்துகொள்வது,  ஒரு தனிக்கலை ஆகும். தமிழ் மட்டுமின்றி,  பிறமொழிகளும் அங்ஙனம் பயன்பட்டுள்ளன.  அமைக்கும் சொல் செவிக்கினியதாய் இருக்கவேண்டும்.  அதுவே இதில் முன்மையாக (முதலாவதாக) கவனிக்கப்பட்டுள்ளது. 

எடுத்துக்காட்டாக,  வங்காளத்தில்  அமைந்திருந்த பெரிய வீடுகளுக்கு ஒரு பெயரிட வேண்டி  நேர்ந்தது.   வங்காளம் என்ற சொல்லையே எடுத்துத் திரித்து, வெள்ளையர்கள்  " பங்களோ"  என்ற சொல்லினைப் படைத்தனர்.  இது பின் தமிழ்மொழிக்குள் வந்து " பங்களா" என்று திரிந்தது.  இதேபோல் வங்காளிப் பெண்கள் அணிந்திருந்த கைவளைக்கு  "பாங்கள்ஸ்"  என்ற பெயரிட்டனர். வெள்ளைக்காரப் பெண்கள் கைவளை அணிவதில்லை ஆகையால்,  ஆங்கிலத்தில்  அப்போது அதற்குப் பெயரில்லை.  இப்போது சிலர் அணிந்துகொள்வதுண்டு.  ( இப்போது இரஷ்யப் பெண்களே சிலர் இந்துக்களாய் உள்ளனர் ).

அங்குமிங்கும் சொற்கள் பலவற்றைத் தேடி அலையாமல் "பெங்கால்" என்ற சொல்லையே மேற்கொண்டு இப்பொருட்களுக்குப்  பெயரிட்டது அறிவுடைமையும்  சொற்சிரமத்தை* எளிதில் தீர்த்துக்கொண்டமையும்  ஆகும்.

குப்த அரசர்கள் தங்கள் ஆட்சியை நிறுவிய போது,  அவர்கள் அரசத் தலைமுறைத் தொடருக்கு  ஒரு பெயர் வைக்க நினைத்தனர்.  அந்தத் தொடர் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது தலையாய நோக்கமாகும்.  அதையே சொற்பொருளாகக் கொண்டு பரம்பரைக்குப் பெயராக்கிக்கொண்டனர்.

தன் காப்பு  >  காப்பு தன் ( முறைமாற்று அமைப்பு)  >  காப்த >  குப்த..

இப்படி அகர முதலானவை,  உகர முதலாய்  அமைவதுண்டு.

அம்மா >  உம்மா >  உமா  (  உமாதேவி )

இதழ் >  அதழ். அல்லது  இதழ் > அதழ்.  ( அதரம் என்ற இடுகையை வாசிக்கவும்).

(  உதடு என்றால்   உது + அடு ( முன்னாக அடுத்தடுத்து இருப்பது )

மற்ற இடுகைகளிலும்  காணலாம்.

அங்க்லோ >  இங்கிலாந்து.

அப்ரஹாம் >  இப்ராகிம்.



---------------------------------------------------------------------

வேறு திரிபுகள்.

*சிறு + அம் + அம் >  சிரமம். சொல்லமைப்பில்  றகரம்  ரகரமாய்த் திரியும்.

 அமைந்துள்ள சிறுதொல்லைகள்   என்பது பொருள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

திங்கள், 6 மார்ச், 2023

முதலைக்கு உணவூட்டி முற்றுப்புள்ளி வைக்காதீர்.


முதலை பாடுவதுபோல:-

 

பசிக்குணவும் எனக்கிங்கே இல்லை என்றால் ---  உன்

பரிவினாலே  அடங்கிடுமோ  என்றன்  வேட்கை?

புசிக்கின்றேன் இப்பொழுதே நானும் உன்னை! -- இப்

புவனத்திலே  பொறுப்பேன் நானோ  அல்லேன்.


உணவுக்கே  எனைத்தவிக்கச் செய்தாய்  நீயே----  நீ

உண்டுறங்கி  நெளிவெடுக்க  நானோ நிற்பேன்   

இணைக்கிங்கே  அணைதந்து  சாய்ந்திருப்  பாய் ----  வீணாய்

இடைவெளியில் கடைத்தரமாய் ஓய்வேன் நானோ?.


என்று கத்திக்கொண்டு  அந்த முதலை  அவனைக் கடித்துக்  குதறியது.  ஆற்றுவிலங்காயினும்  காட்டுவிலங்காயினும்  அன்பருளால் உணவூட்டுவீராயின்,  நீங்கள் மேற்கொண்ட கடைப்பிடியில் வழுவுதல் ஒருபோதும் ஆகாது  . நீங்களே அதற்கு உணவு  ஆகிவிடுவீர்கள்.


இதற்குரிய செய்தித் துணுக்கைக் கீழே படித்து இன்புறுக.


சொடுக்கவும்:


Man attacked by alligator right on his doorstep - The Independent News


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்