வியாழன், 21 ஜனவரி, 2021

கதம்பவனக் குயில் அம்மன்.

 அம்மன் -  நாம் வணங்கும் இறைவி -   இல்லாத இடமே இல்லை ---- வானத்திலும் பூமியிலும் எவ்விடத்திலும் இருப்பவள் அவள். சிலர் அம்மன் என்ன சாதி என்று உசாவுகின்றனர்.  எல்லாமும் அவளுள்ளே அடக்கமாதலால் எல்லாச் சாதிகளும் அவளுக்குள் அடக்கம்.  அவள் அறியாத சாதி எதுவும் உலகில் இல்லை. யாவும் ஒன்றாய் அவள் ஆட்சியுள் மாட்சியாய் இலங்குகின்றது.

சுடுகாட்டில் இருக்கிறாளா என்ற கேள்விக்கு,  சுடுகாடு சுடாத காடு என்ற பேதமின்றி எங்கும் இருக்கிறாள்.  ஒரே சமயத்தில் ஓரிடத்து ஒருமையாகவும் பலவிடத்தும் விரிந்து பரந்து சிறந்தும் பன்மையாகவும் நிற்பவள் அவள். அவளால் முடியாதது ஒன்றுமில்லை.

அவள் கதம்பவனக் குயில். வண்ணப்பூக்களின் வாசக்குயில். பூவனம் சென்று பொறுமையாகப் போற்றுங்கள்.

ஜகதம்ப மதம்ப கதம்பவனப் பிரிய  வாசினி.

அவள் மலைமகளும் ஆவாள்.  சிகரத்தில் தங்குவதால்  "சிகரி" என்றும் குறிக்கப்படுபவள்.

சிகரி சிரோமணி துங்க இமாலய 

ஸ்ருங்க நிஜாலய மத்யகம்

மேவி நிற்பவள்.



புதன், 20 ஜனவரி, 2021

உனது அமைதி.

 அதோ அந்தக் கடலைப் பார்!

அது அமைதி இல்லாமல் ஓயாமல்

அலைந்துகொண்டே இருக்கிறது.

அதனுடன் போய் கலந்துவிட நினைக்கிறாயா?

நீயும் அலைந்துகொண்டுதான் இருப்பாய்.

அலுவல் ஒன்றும் உனக்கில்லை அங்கே!

உன்னை அது கண்டுகொள்ளப் போவதில்லை,

அது அலைந்துகொண்டுதான் இருக்கும்.

இதுவே இடமாகும் உனக்கு,

இங்கேயே இருந்துவிடு.

உன் அருகிலே உன் அமைதி இருக்கிறதே.

செவ்வாய், 19 ஜனவரி, 2021

அண் சண் சணல் முதலிய (அடுத்தல் கருத்து மூலச்சொல்)

சணல் என்ற சொல்லின் பிறப்பைச் சுருங்க அறிவோம்.

அண் >  அண்முதல்  :  நெருங்குதல்.  அணுக்கமாதல்.

அண் >  அண்டு >  அண்டுதல்  :  அடுத்துவரல்.

அண் >  அண்மை,  அணிமை  :  காலத்தால் இடத்தால் அடுத்திருத்தல். இன்ன பிற.


அண் என்பது சண் என்று மாறும்.

அண் >  சண் >  சண்டி  (சண்+தி).   அடுத்துச்சென்று அல்லது பக்கத்து இருந்துகொண்டு  ஒவ்வாதன செய்தல். சண்டித்தனம் .

அண்டு >  சண்டு  >  சண்டை :  கைச்சண்டை,  வாய்ச்சண்டை.  இவை அடுத்துச் சென்று செய்வன.

அண்டு என்பது இடைக்குறைந்து அடு ( அடுத்தல் ) ஆயினும் பொருள் மாறாது.

அடு > அடி > அடித்தல்.


இப்போது இதை அறியுங்கள்:

அண் > சண் > சணல்.

அடுத்து அடுத்து இருக்குமாறு திரிக்கப்படும் நார்க்கயிறு. அத்தகு பொருள் விளைச்சல். செடிவகை.   a hemp.

அடு > சடு > சடம்பு.

சணப்பநார்,   சணப்பை நார்,    சணம், சணம்பு என்று பல வடிவம் கொள்ளும் சொல்.

சாணைப் பிடித்தல்:  கத்தி முதலியன கூராக்குதல்.

அண் > சண் > சாண் > சாணை.

ஒரு சாண் என்பது அடுத்திருக்கும் தூரம்.  அண்> சண் > சாண்.

பழமொழி:  சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை!


அறிக மகிழ்க.

முகக்கவசம் அணிக.

மெய்ப்பு பின்.