திங்கள், 17 பிப்ரவரி, 2020

அலாதி

அலாதி என்று நாம் பேச்சில் எதிர்கொள்ளும் சொல்லை இன்று அறிந்துகொள்வோம்.

அல்லாதன,  அல்லாதவை என்பன அலாதன  அலாதவை என்று கவிதைகளில் தொகுந்து வருதலை நீங்கள் அறிந்திருக்கலாம்.  இடையில் லகர ஒற்று மறைவு.

அல் :  அன்மை குறிக்கும் அடிச்சொல்.    அல்+ மை =  அன்மை.
ஆதி :  முன் அல்லது ஆக்க நாட்களில் உள்ளது. தொடக்ககாலத்தது.

ஆதல் : உண்டாகுதல்.  ஆதல் என்பது   ஆ >  ஆகு > ஆகுதல் என்றும் வரும்.  வே > வேகு > வேகுதல் போல.  வே > வேக்காளம்.  வே> வேது > வேதுபிடித்தல்.   வே> வெயில் ( முதனிலைக் குறுக்கம்).

அல் ஆதி > அலாதி என்றால் முன்னில்லாதது. முன் காலத்தில் இல்லாதது. முன்னது அல்லாத ஒன்று.

முன் அதுபோல் இல்லாததென்றால்  அது தனித்தது என்று பொருள்.

அலாதி மகிழ்ச்சி என்றால்  முன் அறிந்திராத மகிழ்ச்சி.

அலாதி என்பதில்  லகர ஒற்று இரட்டிக்கவில்லை.  அல்லாதி என்று சொல்லக்கூடாது.   அலாதி  தான்.

அனாதை என்ற சொல்லில்  அல் என்பது அன் என்று திரிந்தது.  ஆதி + ஐ என்பது  ஈற்று இகரமிழந்து     ஆத் + ஐ  என நின்று ஆதை ஆனது.  ஆகவே அனாதை முன்வரலாறு அல்லது முன்னோர் யாரும் அறியப்படாதவன். இது பெண்பாலுக்கும் ஆகும்.

அன் + ஆதி=  அனாதி.   ஆதியற்றோன். கடவுள்.  நாதி என்பது   அகரமிழந்து நாதி என்றொரு சொல் அமைந்தது. இது பிறழ்பிரிப்புச் சொல்.

அறிவோம் மகிழ்வோம்,

பிழைத்திருத்தம் பின்.

சனி, 15 பிப்ரவரி, 2020

மகுடியும் அதை ஊதுதலும்.

இன்று மகுடி என்ற சொல்லை அறிவோம்.

பாம்புக்கு மகுடி ஊதியவுடன் அது இசைக்கேற்ப ஆடத் தொடங்கிவிடுகிறது என்று சொல்வர்.  ஓசையின் எழுச்சியைப் பாம்பு உணர்ந்தாலும் இசையை நுகர அதற்குச் செவி தனியாக அமையவில்லை என்பர்.  கண்ணும் செவியும் ஒன்றாக உள்ளமையின் பாம்புக்குக் " கட்செவி" என்ற பெயரும் உள்ளது.

எனினும் நம் கவிஞர் பெருமக்கள் இசை கேட்டு நாகம் ஆடுவதாகச் சொல்வர். உடுமலை நாராயணக் கவிராயரின் " இசைக்கலையே இனிதாமே" என்ற பாடலில் இசைகேட்டு பொல்லாத நாகமும்  ஆடுமென்பார்.  இசையின் மேன்மையை உணர்விக்க இவ்வாறு கூறுவர்.

மகுடி என்ற சொல் மகுடம் என்ற சொல்லினின்று திரித்து எடுக்கப்பெற்றது ஆகும்.  மகுடியிலும் ஒரு சிறு குடம்போன்ற உறுப்பு குழாயில் உள்ளது காணலாம்.

மகுடம் என்ற சொல்லின் அமைப்பு ஈண்டு காண்க.

https://sivamaalaa.blogspot.com/2020/02/blog-post_11.html

மகுடி என்றால் மகுடத்தை உடைய ஊதுகுழாய் என்று பொருள்.

மகுடி என்ற சொல் மோடி என்றும் திரியும்.

தேடி வந்தேனே புள்ளி மானே
மோடி செய்யலாமோ என் தேனே தானே

என்பது பழைய நாடகப் பாட்டு.

மகுடாதிபதி என்ற கூட்டுச்சொல்லும் உள்ளது.

அறிந்தின்புறுக.

எழுத்துத் திரிபுகள் ( பிழைகள் ) புகின் திருத்தம் பின்.

 

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

மகுடம் வந்தது சிற்றூர்ப் பேச்சிலிருந்து.


மகுடம் காத்தவர் என் மணாளர் என்றால் கொஞ்சம் ோனைகள் வந்து வாக்கியம் அழகுடன் தொனிக்கிறது. மகுடம் என்ற சொல் எவ்வாறு விளைந்தது என்பதை நாம் அறிவோம்.

ஒரு குடம் போல் இல்லாமல் சற்றே வேலைப்பாடுகளுடன் பொன்னும் மணியும் பதித்துத் தலையில் வைத்துக்கொண்டாலே அரசன் மணிமுடி தரித்திருக்கிறான் என்று மக்கள் உயர்த்திப் போற்றுவர். இப்படிப் போற்றாமல் திமிருடன் : என்ன தலையில் குடத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு வருகிறான் என்று எவனாவது வாயில் காப்பவன் பேசினால் அவன் தலைபோய்விடும். மகுடத்துக்குப் போட்டி போடுகிறவன், “ முடியா சூடிவிட்டான் இவன்? இவன் தலையில் வைத்திருக்கும் குடத்தை இறக்கி அதை உடைத்துக்காட்டுகிறேன்" என்று கொக்கரித்தால் அதைக் கேட்போர் அரச பதவிக்குப் போட்டி உள்ளது என்று பேசிக்கொள்வார்கள். அரச முடிசூட்டுக்களின் போது இவ்வாறெல்லாம் உரையாட்டுகள் பண்டைக் காலங்களில் நடந்திருக்கலாம்; ஆனால் அப்போது நாம் அங்கில்லை ஆதலால் நாம் அதை இப்போது கற்பனைக் கண்கொண்டே பார்க்கவியலும்.

ஆனால் மகுடம் என்பது மண்டைக்குடம் என்பதன் குறுக்கம்தான். இதைப் புனைந்து அல்லது  பொறுக்கி எடுத்துச் சுருக்கித் தந்தவன் அறிவாளி.

மண்டைக்குடம் > (ண்டைக்)குடம் > மகுடம். இடைக்குறை.

இரண்டு மூன்று எழுத்துக்களை மாற்றியவுடன் சொல்லுக்கு மவுசு வந்துவிட்டாது. மா + பூசு > மா +( ப் )> ஊசு> மாவூசு > மவுசு. ( அழகுறுத்தல் ). மா என்பது ம என்று குறுகிற்று. ப் என்ற எழுத்தை எடுத்துவிட்டபின் நெடில்கள் குறுக்கம் பெற்றன.
 

அல்லது 

மாவு பூசு >  மாவுசு  > மவுசு.  
மா என்பது குறுகிற்று.
பூ என்பது வெட்டுண்டது.

மகுடம்:

தலையில் குடத்தைத் தூக்கி வைத்துக்கொண்டான் என்ற சிற்றூர் நையாண்டிப் பேச்சிலிருந்து வந்தது.

மாவுபூசிய சொற்கள் பற்பல.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனமுறும்.

குறிப்பு
மோனைகள் - முழு  வாக்கிய த் தில் எதுகைகள் உள்ளன. அவை விடப்பட்டன.