ஞாயிறு, 6 ஜனவரி, 2019

குரங்கு விலங்குச் சொற்களும் பிறசொற்களும்( திரிபுகள்.)

குரங்கு என்ற சொல்லைப் பற்றி இன்று உரையாடுவோம். பிறவும் அறிவோம்.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது டார்வின் என்னும் அறிஞரின் ஆய்வு முடிவு. பல்வேறு சமய நூல்களில்  எவையும் இம்முடிபினை ஒத்துக்கொள்ளவில்லை.  எனினும் அஃது அறிவியல்  தெரிவியற் கருத்தாகத் தொடர்கிறது.  தெரிவியல் எனின் இன்னும் மெய்ப்பிக்கப்படாத முடிபு.  மெய்ப்பிக்கப் பட்டுவிடுமாயின் அது புரிவியல் எனப்படும்.

குரங்கு என்பது   ஓர் ஒப்பொலிச் சொல் என்று சொன்னூல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.   குரங்கு குர் என்ற ஒலியை ஏற்படுத்துவது.  இந்த "குர்" என்ற ஒலியை ஒத்தபடி,   சொல்லமைந்துள்ள படியினால் அது ஒப்பொலிச் சொல்.

வேறு ஒப்பொலிச் சொற்கள் சில:

மா    -  மாடு.
காழ்காழ்  -  கழுதை.
கொக்கொக்  -   கோழி
கா  கா  -    காக்கை  காகம்

குரங்கு என்ற சொல்  குர் + அங்கு என்று பிரிக்க  அங்கு என்ற இறுதி பெற்றிருப்பதைக் காணலாம்.    அங்கு என்பதை  அங்கு என்னும் இடச்சுட்டு என்பதினும்   அம்  - இடைநிலை,  கு  - விகுதி என்பதே ஏய்வான கருத்துமுடிபு ஆகும்.  ஏய்தல் - பொருந்துதல்.  (  "ஏய உணர்விக்கும் என்னம்மை"  என்ற பாட்டுச் சொற்றொடரை நினைத்துக்கொள்க.  )

மந்தி என்ற இன்னொரு சொல்- பெரிய குரங்கு வகை.  மனிதன்போலப் பெரிதாக இருப்பதனால்  அதற்கு இடப்பட்ட பெயர் :  மன் என்ற அடிச்சொல்லைக் கொண்டே அமைந்துள்ளது.    மன் + தி :  மந்தி.   மன் என்ற அடிச்சொல்லே  மனிதன் என்பதிலும் உள்ளது.  மன்+ இது + அன்.  இது தகரச் சகரப் போலியினால்  மனுசன் என்று பேச்சில் வரும்.   மனிதன் >  மனுசன்.  இது மனுஷன்,  மனுஷ்ய என்று மெருகு பெறும்.  மலாய் மொழியில் மனுசியா என்று திரியும்.

மந்தி என்பது புணரியல் முறையில் மன்றி என்று வராமல் மன்-தி என்றே ஒலித்து மந்தி என்று எழுதப்பெறும்.   முந்தி  பிந்தி என்ற சொற்களில் போல இச்சொல்லிலும் அமையும்.

அன்று என்பது முடிந்த நாள் என்று பொருள்படும்.   அன்றுதல் என்பது முடிதல் என்னும் இதன் வினைச்சொல்.   அன்று என்பதிலிருந்தே  அந்து என்று துணிகட்கு முடிவு கட்டும் ஒரு சிறு பூச்சியும் குறிக்கப்பெறும்.  அதற்குப் போடும் ஓர் மருந்துருண்டை " அந்துருண்டை"  எனப்படும்.   ஒரு பகலின் முடிவு  அந்தி எனப்படும்.     அன்+து =  அன்று.   சுட்டடிச் சொல்.   அன்+தி = அந்தி.  பகலின் முடிதல்.  முந்தி என்பது முன்றி என்று அமையாததுபோலவே அன் தி என்பதும் அன்றி என்று அமைந்திலது.

அன்றை -  அற்றை.  இன்றை - இற்றை என்ற வடிவங்களும் நீங்கள் அறிந்தவையே.

அந்தி என்பது பகலின் இறுதி ஆகும்.  அப்போது   இருளும் ஒளியும் மயங்கும்.  மயங்குதலாவது கலத்தல்.

அந்தி மயங்குதடி  ஆசை பெருகுதடி
கந்தன் வரக்காணேனே

என்பதைப் பாடுங்கள்.

கந்தன் என்பதும்:

கன் > கனல்.
கன் >  கனலி ( சூரியன்)
கன் + து =  கந்து.
கன் > கனல்தல்  ( கனறல் ).  ல்+த=  ற.
கன்  >  கனற்பு  :  அடுப்பு.
கன்  > கனற்று.  கனற்றுதல்.
கன் >  கன்றல்..   கன்>  கன் து  > கன்று >  கன்றல்  ( கன்று அல்)
கன் >  கன்றுதல் :  கருகுதல்.

கன் > கன் து > கந்து அன் > கந்தன்.

இன்னொரு சொல்:  அன் > அன் து > அந்து  >  அந்தி.

அரியது கேட்கின் எரிதவழ் வேலோய் -   ஒளவையார்.

கந்தன் என்ற  முருகன் பெயரும் கனல் என்பதனுடன் தொடர்புடையது.  அடிச்சொல் கன்.

பல சொற்களை விளக்கவில்லை. பின்னொரு நாள் அதை நிறைவேற்றுவோம்.

திருத்தம் பின்

சனி, 5 ஜனவரி, 2019

மனத்தில் கொஞ்சிய முகில்

முன்னர் ஓர் ஏரியைப் பற்றிப் பாடிய போது:

வெள்ளி உருக்கித்  தெளித்த போர்வையோ ----  இங்கு
விரிந்த ஏரி காட்டும் நீரினில்,
துள்ளி எழுந்து விழும்  மீன்`களைக் ----- கண்டு
தூக்கம் கலைந்து வந்த(து)  ஊக்கமே.

என்ற வரிகளில் கருத்து வெளிப்பட்டது.


நேற்றுக் காலையில் சிங்கப்பூரில் கொஞ்சம் மழை. அது கண்டு ஒரு
கவிதை தோன்றியது.  அதுவே இது:

எங்கிருந்தோ எடுத்து நீரை 
இங்கு வந்து தெளித்திவ் வூரை
நுங்குட் கொண்ட  நாவுபோலச்
சிங்கலின்றிக் குளிர வைத்தாய்.

சிங்கலின்றி -  குறைவின்றி.

ஊர்கள் மேலே அலைந்தலைந்தே
ஒவ்வோர் துளியாய் விழுங்கிப்
பாரை வள    மிக்கதாக்கி
யாரைக்   காதல்கொண்ு  செய்தாய்.

உன்மனத்துள் மீட்டும் வீணை 
ஊர்க்குள் ஒருத்தி இருக்கிறாளே
என்மனத்துள் மேகம் நீயே
இணைந்துகொஞ்சி இருப்பதென்ன?

 

சிற்பி என்ற சொல்.

ஒரு பெரிய பொருள் மாதிரியிலே சிறியதாய்ச் செய்யப்படுவதே சின்னம்.

இங்கு இதில் உள்ள அடிச்சொல் சின்-  என்பதுதான்.   சின்னப் பையன், சின்னப்பா,  சின்னராசா, சின்னக்குட்டி எனப் பல கூட்டுக்கிளவிகள் உள்ளன காண்க.

எம் நெருங்கிய உறவினர் வளர்த்த நாய்க்குச் சின்னக்குட்டி என்ற பெயரைக் கொடுத்திருந்தேம்.   பெரியவகைப் பொன்மீட்பி நாய்   (  கோல்டன் ரிற்றீவர்) என்றாலும் ஒரு சின்ன உருவினதாய்த் தன்னைப் பாவித்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடும் -  எம்மைக் கண்டவுடன்.  தாரா என்ற பெயர் இருந்தாலும் சின்னக்குட்டி என்றவுடன் நாலுகால் பாய்ச்சலில் வந்து மோதி நிற்கும்.  அண்மையில்தான் இறந்துபோயிற்று.

சின்ன என்ற சொல் அன்புகலந்த சொல் என்பது எம் நினைப்பு.  அது உண்மை என்பதையே மேலே யாம் தந்துள்ள வழக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

சின் என்பதன் அடிச்சொல் சில்  என்பதாகும்.

சில் > சில   ( பன்மை விகுதி  அ  )
சில் > சின்

புணரியல் அமைப்புகள்:

சில்+ நாள் =  சின்னாள்   (சின்னாட்கள் )    =  சில நாட்கள்.
(  எதிர்ச்சொல்:   பன்னாள்)

சில் + மயம்,  சில் + மையம்:   உலகாகிய பெரிய மயத்தில்  எது  உள் நிற்கிறதோ அதுவே சிறிய மயத்திலும் நிற்கின்றதென்பதால்,  சின்மயம் என்பது .  ஆன்மாவையும் அதன் சுற்றியக்கச் சார்புகளையும் உட்படுத்தும்.

௳யம்   - மையம்:   முன்னது ஐகாரக் குறுக்கம்.

சின்மதி,  சின்முத்திரை என்ற வழக்குகளும் உள.

சில் >  சிறு.
சில் > சின் > சின்னம். ( மாதிரி சிறியது)
சில் > சின் >  சின்ன
சில் < சின் >  சின்னம்  ( சிறுமை என்றும் பொருள்.)
சின் >  சின்னா   (  சிறிய குருவி).   சின்னா என்ற கோழிக்குஞ்சு -   கதை.

சின் > சின்னா பின்னம்.    இங்கு ஆ என்பது ஆகும் என்ற சொல்லின் தொகை.

இங்குள்ள மற்ற தொடர்புள்ள இடுகைகளையும் நோக்குக.

https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_49.html

https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_25.html

https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_25.html

சிற்றம்பலம்.

சிற்பரை   :  சில் + பர + ஐ.    அம்மன்.  { பரன் > பரை ( ஐ) }   ஐ = கடவுள்.  இது
பெண்பால் விகுதியுமாகும்.

சில் என்பது ஏராளமான சொற்களில் கலந்துள்ளது.

முன் காலத்தில் சிலைகள் சிறிதாகவே செய்து வலவர்களான பின் பெரிய சிலைகளை அவர்கள் வடித்தனர்.   இது திறன் பெருக்கம் ஆகும்.

சில் >  சிற்பு > சிற்பம் > சிற்பி .
சிற்பன்,   சிற்பரன் என்பவும் காண்க,

சிற்பி என்ற சொல் பின் பெரிய உருவங்களை வடிப்போனையும் குறிக்க விரிந்தது.

ஒப்பீடு செய்து உணர்க.


திருத்தம் வேண்டின் பின்.

அடிக்குறி:

பொன்மீட்பி :  பொன்போலும் பொருட்களை மீட்கும் நாய்.  இவை பொன் நிறத்தினவாய் உள்ளன. பிற நிறத்தன உளவா என்பது தெரியவில்லை.