திங்கள், 31 டிசம்பர், 2018

நாம் ஒன்றானோம்.




இது ஹோங்கோங் நகரின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது
எடுக்கப்பட்ட படம்.



எந்நாட்டில் வாழ்ந்தாலும் எல்லோ  ரும்தாம்
இணைநின்று பாசமிடும் ஏற்ற   நண்பர்.
உன்னாட்டில் நீயிங்கு என்னாட்   டில் நான்
ஒதுங்கிவிடு வோமென்றும் எண்ண லாமோ?
பன்னாடும்  பன்மொழியும் பண்ணே போல
பாய்ந்தினிக்கும் நெஞ்சினிலே எண்ணுங்காலே.
இந்நாளில் சுருங்காதீர் விரிந்து செல்வீர்
இகந்தன்னில் அகத்தெண்ணி ஒன்றானோமே.

சுரங்கம்: அங்கு ஆங்கு இடைநிலைகள்.

இன்று புத்தாண்டில் சுரங்கம் என்ற சொல்லின் அமைப்பைத் தெரிந்துகொள்வோம்.

நிலத்தில் பள்ளம் தோண்டினால் பல இடங்களில் நீர் சுரந்து மேல் வருகிறது. இரண்டாம் உலகப்போரின்போது  பலவிடங்களில் சுரங்கங்கள் தோண்டி அங்கு மக்கள் வான்படைத் தாக்குதலிலிருந்து தப்பிக்க ஒளிந்திருந்தனர் என்று அறிகிறோம்.  கீழே நீர் சுரந்து நிற்குமாதலின் பலகை அடித்து ஒரு போலித்தரையை ஏற்படுத்தி அதன்மீது மக்கள் ஒளிந்திருந்தனர். நிலத்தடி நீர் அருகில் இல்லாதவிடங்களில் நீர்மட்டம் தொல்லைதராது. பலகை இல்லாமல் அமர்ந்திருக்கலாம் என்பர்.

நிலத்தைத் தோண்டினால் நீர்சுரக்கும்.  ஆதலால் இத்தகைய நிலக்குடைவுகளைச் சுரங்கம் என்று குறிப்பிட்டனர்.

சுரத்தல் :  வினைச்சொல்.

சுர +  அங்கு  + அம் =  சுரங்கம்.

இச்சொல்லில் அங்கு என்பது சொல்லாக்க இடைநிலை.

இப்படிச் சொற்களை நன்றாக அமைத்தவர்கள் யாரோ  அவர்களைப் பாராட்ட வேண்டும்.

அங்கு என்பதை   அ=  சுட்டடிச் சொல் என்றும்  கு  என்பது சேர்விடம் குறிக்கும் சொல் ( அதாவது இப்போது பெரிதும் வேற்றுமை உருபாகப் பயன்படுகிறது )
என்று அறிக.  இவை இரண்டும் இணைந்தே இடைநிலையாக நிற்கின்ற தென்பதை உணர்க. எளிதினுணர்தல் பொருட்டு அங்கு என்பது இடைநிலை என்றோம்.

கூடாங்கு.  மூடாங்கி ( மூடி )., நாதாங்கி என்ற சொற்களும் உள்ளன. இவற்றிலும் இவ்விடைநிலை உள்ளதென்றறிக.

கூடாங்கு:  கூடுபோல் கட்டிப் பொருள்களை இட்டுவைக்குமிடம்.

கூடு + அங்கு. இந்தச் சொல் அம் விகுதி பெறவில்லை. அங்கு என்பது ஆங்கு என்றும் நிலவுமென்று அறிக.

மூடாங்கி :  இது மூடி என்பதற்கு மாற்றாகப் பேச்சு வழக்கில் உள்ளது.  பானை மூடி போன்றவை.  சில சட்டி பானைகளில் மூடி பானையுடன் பட்டையில் திருகாணி கொண்டு இணைக்கப்பட்டிருக்கும்.  ஒருபுறம் தூக்கித் திறக்கலாம்.  இப்போது அரிசிவேவிப்புப் பானைகள் இவ்வாறு வருகின்றன. இவை மூடாங்கிகள்.  மூடி அங்கே இருக்கும்; அகற்ற முடியாது.

மூடு + ஆங்கு + இ =  மூடாங்கி.   இதில் இகரம் விகுதியாகிறது.

நாதாங்கி :  கதவில் இருபுறமும் தள்ளுதற்குரிய வசதியுடன்  ஒரு நாக்கைப் போல் இருப்பது நாதாங்கி. கதவின் சட்டத்தில் பக்கம் தள்ளினால் இது ஒரு வளையத்தில் போய் மாட்டிக்கொண்டு கதவைத் திறக்க முடியாதபடி அடைத்துக்கொள்ளும். இந்த நாவைத் தாங்கி இருக்கும் இரும்புக் கூடு நாதாங்கி எனப்படும்.  நாதாங்கி கூடு, வளையம்,  அதிலாடும் தள்ளுகோல் முதலிய முழுப்பொறியையும் குறிக்கும்.

நா + து  + அங்கு  + இ:    நாவை உடையது  இப்பொறி.
து : உடையது.   அங்கு / ஆங்கு  என்பது விளக்கப்பட்டது.   இகரம் விகுதி.

நாவைத் தாங்குவது எனினும் ஆம்.

இலக்கணம் கூறுவதாயின்  நாத்தாங்கி எனற்பாலதில் தகர ஒற்று இடைக்குறை என்லாகும்.

இத்தமிழ்ச் சொற்கள் இக்காலத்தில் மறக்கப்பட்டு வருகின்றன.

இவற்றைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்கள் பெருவழக்கினவாதலே காரணம்.

அடிக்குறிப்பு:

அங்கம்:  உடல் குறிப்பது.   இது அடங்கம் என்பதன் இடைக்குறை.  டகரம் வீழ்ந்தது.  பல உள்ளுறுப்புகளும் அடங்கியதே அங்கம்.


பிழைத்திருத்தம் பின்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

கள் என்ற அடியிலிருந்து சில சொற்கள்.

கள் என்ற சொல் பல பொருள் உடைய சொல்லாகும்.

ஆனால் இற்றைநாள் அகரவரிசைகள் இச்சொல்லின் எல்லாப் பொருள்களையும் தருதல் அரிது.

கள் என்ற தென்னைத் தேறல் வெள்ளை நிறமானாலும்,  கள்வன் என்பவன் இத்தேறலுக்கு உரியவன் அல்லன்.  யாரேனும் அருந்துவதுபோல் அவனும் அருந்தலாமேயன்றி   அச்சொல்லுக்குக் கள்குடிப்போன் என்ற பொருளில்லை.

கள் என்பதற்கு உள்ள அடிச்சொல் பொருள்களில் கருப்பு என்பது மிக்க முன்மைவாய்ந்தது ஆகும்.

கள் = கருப்பு.
கள்ளர் -  கருப்பு நிறமானவர்கள். இது  அறிஞர்  பண்டித நா. மு. வேங்கடசாமி நாட்டாரின் முடிபு.

கள் > காள்:  இது முதனிலை (முதலெழுத்து ) நீட்சி.

காள் > காளி:   கருப்பம்மை.
காளமேகம் :  கருமேகம்.  சூல் கொண்ட முகில்.

சூல் கொண்ட முகில் கருப்பு நிறமாதலின்  கருப்பம்மைக்குச் சூலி என்பதும்
இவ்வகையில் பொருத்தமான பெயர்.   சூலம் என்னும் ஆயுதமுடையாள் என்பது இன்னொரு பொருள்.

களர் =   கருப்பு.    கள்+ அர் =  களர்.

கள் என்பதனுடன் அர் விகுதி புணர்க்க,  கள்ளர் என்று மனிதரைக் குறிக்க இரட்டிக்கும்;  களர் என்று நிறம் மட்டும் குறிக்கும்.  இரட்டிக்காது.

களரி =  கருப்பு.

கள் என்பது கறு என்று திரியும்.    கறு > கறுத்தல்.

கறுப்பு   -  கருப்பு,  இது இருவகையாகவும் எழுதப்பெறும்.

கறு >  கறை  :  கரும்புள்ளி  அல்லது கருமை பிடித்தல்.


கள் என்ற அடியிலிருந்து சில:

கள் > கட்டு  - கட்டுதல்.   (கள்+து ).
கள் + சி :  கட்சி.  ( கட்டுக்கோப்புடன் இயங்கும் ஒரு மனிதக் கூட்டம்).
கள் > கட்டு > கட்டி:   திரட்சி ஏற்படுதல்.  ( மூளையில் கட்டி போல).
இன்னொரு உ-ம்:   கட்டித்தயிர்.  திரண்ட தயிர்.

கள் + து என்பது கண்டு என்றும் வரும். இது மெலித்தல். கட்டி என்பது வலித்தல்.

கண்டு:   நூல் கண்டு.  இது நூல் திரட்சி.

கண்டி:  திரட்சிகளை உடையது;  உருத்திராட்சம்.

உருத்திராட்சம் :  உருத் திரட்சி அம்.  இதில் அம் விகுதி.

கண்டி என்பது கட்டுருவான ஒன்று.

மரகத கண்டி :  மரகதத்தால் ஆன உருத்திராட்ச மாலை.

கண்டி > கண்டிகை.

அறிவீர் மகிழ்வீர்.