திங்கள், 5 பிப்ரவரி, 2018

நீரிழிவு நோயாளிகள் சபரிமலை செல்லுதல்.


சபரிமலை செல்லுதல்.

சபரிமலை சென்று ஐயப்பனைத் தெரிசனம் காணச் செல்வோருள் நீரிழிவு நோயாளிகளும் சிலர் உள்ளனர்.

இவர்களும் பயணச் சீட்டு எடுத்து சபரிநாதனைக் காணச் செல்கிறார்கள். சிங்கப்பூரிலிருந்து செல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.  கால்களில் மிதியடி (செருப்பு) இல்லாமல் இங்கிருந்து கிளம்பவேண்டும். செலவுக்குரிய அங்கிகளை அணிந்துகொண்டு (கருப்பு உடை)  மாலையுடன் சபரி சென்று அடையவேண்டும்.

இடையில் செருப்பின்மையால் தொல்லை:  பல தூய்மையற்ற இடங்களிலும் இவர்கள் நடக்கிறார்கள். எடுத்துக்காட்டாகக் கழிவறை: சிங்கப்பூரில் பெரிதும் தொல்லை விளைவதில்லை. பின்பு வானூர்தி நிலையத்திலிருந்து சபரிவரை சற்று அதிகமான அழுக்கிடங்களில் நடமாடவேண்டியும் ஏற்படலாம். பல முறை கழிவறைக்குச் செல்லுகை தேவையாகலாம். அதுவும் நோயாளிகளுக்குச் சிறுநீர் கழிப்பது முக்கியமாகும்.

சபரி மலையேறவேண்டிய அடிவாரத்திலிருந்து கோவில் வரை:   கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற ஒரு திடநிலையில்தான் போகவேண்டியுள்ளது. இங்கு காலொடிந்தவர்களும் காயப்பட்டுப் படாதபாடு படுகிறவர்களும் பலராவார்.

இந்தக் கட்ட நெட்டூறுகளெல்லாம் இவர்கள் இட்டப்பட்டு மேற்கொள்வனவே ஆகும்.  இறைவனை எப்படிச் சென்று தரிசிப்பதென்பது அவர்கள் சொந்த விருப்பத்தில்பால் மேற்கொள்வது ஆகும்.

எமக்குத் தெரிந்த ஒரு வயதான அம்மையாருக்குக் காலில் சிறுவிரலுகருகில் ஒரு கல் குத்தித் தோலைப் பெயர்த்துவிட்டது.  நோய்நுண்ணியிர்கள் உள்ளே புகுந்து புண்ணாகி, விரலை வெட்டுவதா வேண்டாமா என்று மருத்துவர்கள் முடிவு மேற்கொள்ளவேண்டும் என்ற நிலை. நோயணுக்களைக் கொல்ல அணுக்கொல்லித் திரவங்களை உள்ளேற்றி வைத்தியம் பார்த்துக்கொண்டுள்ளனர். பெரும்பாலும்  விரல் போகும் என்ற அச்சம் கப்பிக்கொண்டிருந்தாலும் ஐயப்பனருளால் போகாது என்று நினைக்கிறோம்; காலிலும் வலி மிக்குள்ளது.

அடுத்தபயணத்துக்கு மாலை போட்டுக்கொண்டு சிங்கப்பூரிலே உள்ள ஐயப்பன் திருமுன்பாகத் தம் கடனைச் செலுத்திவிடலாம் என்று இவ்வம்மையாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மற்ற சாமிகள் ஏற்பரோ என்பதன்று கேள்வி. ஐயப்பன் என்பவர் கடவுள்.  அவர் தூணிலும் உள்ளார். துரும்பிலும் உள்ளார்.  சிங்கையிலும் அருள்தருகிறார்.  இங்குமிருப்பார்.  இதிலென்ன ஐயம்? 

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

பந்து விளையாடப் போய் கையொடிந்து....




பந்துவிளை யாடப்போய் பையனோ பாவம்
படுக்கையில் விழுந்தான் கையொடிந்தே!
வெந்துகÚத் திட்டதோல் வேண்டாத வேர்வை
வினையிடைப் படுதல் மெய்வருத்தம்;
நொந்துபுவி  மேலும்நீ  கைவரப் பெற்றாய்
நோவன்றிப் பிறிதிங்  கில்லையன்றோ
இந்தநலம் யாமுரைத்  தேமலோ காணா(து)
இன்றுதுன் புறுதல் நடைபெற்றதே. 

பந்து விளையாட்டு ஆசையினால் கை எலும்புமுறிந்த
பையனுக்கு யாம் முன் கூறிய ஆலோசனையும்
இன்று அவன் நிலையும்.

குறிப்புரை:

நொந்துபுவி  மேலும்நீ  கைவரப் பெற்றாய்  நோவன்றிப் 
பிறிதிங்  கில்லையன்றோ  இதை இப்படி உரைநடைப் 
பாணியில் மாற்றிப் படித்துப் பொருள்கொள்க:
 மேலும், நீ   புவி இங்கு  நொந்து
நோவன்றிப் பிறிது கைவரப் பெற்றாய் இல்லை.
நொந்து =  மனம் நொந்து;  நோவு அன்றி - வலி முதலியன
அல்லாமல். பிறிது -  வேறு.

உரைத்தேம் அலோ :  உரைத்தோம் அல்லவோ.

காணாது -  நீ கண்டுகொள்ளாமையினால்.
 

ஆட்சேபம் சொல் வந்தவிதம்



வரலாறு கற்பிப்போர்.

வரலாற்றைச் சொல்லிக்கொடுப்பவர்கள் பெரும்பாலும் ஓர் அறைக்குள் இருந்து தாம் கற்றுக்கொண்டதையே வெளியிடுவதால் சொற்கள் எந்த மொழியிலும் பல நிலைக்களன்களிலிருந்து  தோன்றியிருக்க்க்கூடுமென்பதை உணரும் வாய்ப்பு உடையவர்களாய் இருப்பதில்லை.   பரீட்சை அல்லது தேர்வுக்கு என்னென்ன கேள்விகள் வரும் என்று மாணவர்களுக்குத் தெரிவிக்கு முகத்தான், அவற்றுக்கான பதில்கள் எப்படியிருக்கவேண்டும் என்பவற்றை வரைந்து மாணவர்களுக்குத் தெரிவித்து அவர்கள் தேர்வுபெற வேண்டியவற்றைச் செய்பவர்களாகவே  கற்பிப்போர் இருக்கிறார்கள்.  சொல்லிக்கொடுத்துப் பெரும்பாலானோர் தேர்வில் தோற்றுப்போனால் சொல்லிக்கொடுப்போரின் பதவி உயர்வு முதலியவை பாதிக்கப்படலாம்.  அதனால் முன் பலன் தந்தவற்றை மாற்றிக்கொள்ள விரும்பாதவர்கள் இவர்கள்.  இது தீமையற்ற செயல்பாடு என்றாலும் புதுமையற்றதுமாகும். வகுப்பறைப் படிப்பில் உண்மைகளை வெளிக்கொணர முடிவதில்லை.

ஆட்சேபம் சொல்

இவற்றை மனப்பின்புலத்தில் வைத்துக்கொண்டு, இப்போது ஆட்சேபம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

முன்னாளில் இந்தியாவெங்கும் பல அரசர்களும் குறுநில மன்னர்களும் இருந்தனர். அரசர்போன்றே ஆற்றலை மக்கள்முன் காட்டிய நிலக்கிழார்களும் அவர்களின் சேவகர்களும் இருந்தனர். ஒரு போருக்குப் போகுமுன் போதுமான தக்க வீர்ர்களைத் திரட்டி அவர்களுக்குப் பயிற்சி தரவேண்டியிருந்தது.   

இப்போது படையில் சேர்வோருக்கு இருக்கும் விதிமுறைகளும் பாதுகாப்புகளும் அப்போது இல்லை. ஒரு படைஞன்மேல் ஒரு குற்றம் சுமத்தப்பட்டால் அதற்கான சான்றுகள் ஒரு பொறுப்பதிகாரியினால் கேட்டறியப்பட வேண்டுமென்பதும்  நிறைஆய்வு நிகழ்த்தப்பெறுதல் வேண்டுமென்பதும் மெய்ப்பிப்பதற்கு ஆதாரமான அனைத்துப் பொருள்களும் கொணர்ந்து முன்னிலைப் படுத்தப்படவேண்டுமென்பதும் சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்படுதல் வேண்டுமென்பதுமாகிய நடைமுறைகள் அக்காலத்தில் இல்லை. 

தண்டனைச் சான்றுகள் முறைகள் விதிகள்:

 குற்றம் சுமத்தப்பட்ட படைவீரனை மேலதிகாரி தலைகொய்து  தரையில் வீழ்த்திவிடலாம். அவனைக் கேட்பார் யாருமில்லை.  கேட்க முனைவோனும் தலைதப்ப இயல்வதில்லை.  இதனால் படையில் பணிபுரியப் பலர் முன்வந்ததில்லை.  இக்காரணம் கொணடும்  சாதிகளை   (சார்+தி > சார்தி > சாதி )  (ரகர ஒற்று வீழ்ச்சி ) ஏற்படுத்தி, அந்தச் சாதிக்கார்ர்களையே படைக்கு ஆள்தரும் கூட்டமாக ஏற்படுத்திக்கொண்டனர் அரசர்கள்.    

சில வேளைகளில் இப்படிக் கிடைத்த ஆள்தொகை போதவில்லை என்றால்,  சிற்றூர்களில் சென்று கால்கை நன்றாக உள்ளவர்கள் பிடித்து வரப்பட்டுப் படைச்சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சண்டைக்குப் போனால் அத்துடன் ஒழிந்தோர் பலர். சீனாவில் சிற்றூர்களிலும் படைக்கு ஆளெடுக்கவருகையில் ஓடி ஒளிந்துகொள்வது உண்டென்பதுபோன்ற கதைகளும் உள்ளன.  சேரமாட்டோம் என்று அதிகமாகப் போராடியவர்களின் உடல்கள் ஏரி குளங்கள் கடல்களில் வீசப்பட்டு மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டது உண்டு.  இவற்றையும் சொல்லக் காரணம், படைக்கு ஆள்சேர்ப்பது விவசாயிகளுக்கு வெறுப்பைத் தந்த ஒரு செயலாம்.  விவசாயி என்றாலே விழுமிய (வி) வாழ்வுக்கு (வ) சாலச் சிறந்த (சா) நலத்தினை மேற்கொண்டவர் என்ற கருத்தின் சுருக்கச்சொல் ஆகும்.    வாழ் என்ற சொல் இலத்தின் மொழிக்கும் சென்றது.
inter vivos என்ற ஆங்கில (  இலத்தீனிலிருந்து வந்தது ) சொற்றொடரை நோக்குக.  viva il papa என்பதும் காண்க.

ஆட்சேர்பு> ஆட்சேர்பம்.

 ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளினால் விவசாயம்  கெட்ட நிலையை அடைந்தது. ஆட் சேர்க்கைக்கு வருவோன் குடிகெடுப்போன் என்று நினைத்தனர்.  நிலத்தில் வேலை செய்வோருக்குப் பிறவகை நிகழ்ச்சிகள் இருத்தலாகாது என்று ஆசிரியர் தொல்காப்பியனார் இதற்காகத்தான் கூறினார் என்பதை நம் ஆசிரியர்கள் போதிப்பதில்லை.

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிபபிறவகை நிகழ்ச்சி

என்கிறது தொல்காப்பியம்.
மொழிப   ( மொழிப் என்றிருந்தது திருத்தம்பெற்றது. )  
மொழிப என்றால் மொழிவார்கள் புலவர் என்பது.

பார்ப்பனரும் வேளாண்மாந்தருமல்லாத பிற இடைப்பட்டோரெல்லாம்  நன்றாகவே மாட்டிக்கொண்டார்கள். நாளடைவில் ஆட்சேர்பு என்ற சொல்லுக்கு ஓர் அம் விகுதி கொடுத்து:  “ஆட்சேர்பம் என்றாகி,  ரகர ஒற்று நீங்கி  “ஆட்சேபம்” என்றானது.

ரகர ஒற்று மறைந்த சொற்கள் பல. இவற்றில் சில எம்மால் காட்டப்பெற்றன.
இந்த இடுகையிலே இரண்டு உண்டே:

சார்> சார்தி > சாதி.
ஆட்சேர்பு > ஆட்சேர்பம் > ஆட்சேபம்.

ஆட்சேபம் என்றால் மறுப்பு என்று பொருளாயிற்று.

சாப்பாடு கிடைக்காத போது மனிதனை மனிதன் உண்டு வாழ்ந்ததும் உலக வரலாற்றில் உள்ளது என்பது அறிக.

அறிந்து மகிழ்வீர்.