சனி, 2 டிசம்பர், 2017

சட்டை



சட்டை என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

பாம்பின் தோலுக்கு மேல் இருப்பது அதன் சட்டை. புதிய தோல் தயார் ஆனபின் பழைய தோலை அது கழற்றிப்  போட்டுவிடுமென்கிறார்கள்.

உள்தோலை அடுத்திருப்பதே அதன் மேற்றோல் ஆகும்.  அடுத்திருப்பதனால் அடு >  சடு > சட்டை ஆயிற்று,  சட்டை என்பதில் இறுதி ஐ என்பது விகுதி.

சடு+ ஐ = சட்டை,

பிற்காலத்தில் இது மேனிப் போர்த்துறையையும் குறிக்கலாயிற்று,

இதைச் சுருக்கி மேனியுறை எனலாம்.

அகர வருக்கச் சொற்கள் சகர வருக்கமாகும்.  ஆடி >சாடி.  அடு> சடு >  சட்டி.

அடுதல் = சமைத்தல்.

சட்டை பின் பிறமொழிகளிலும் ஏற்றுக்கொள்ளப்படுவதானது நம் சொல்லின் திறமாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  ஒரு சொல்லில் கூடுதலான புள்ளிகள் இருந்தன.  ஆக்குரையைக் ( compose draft  ) காண்கையில் அதில் இதைக் கண்டுபிடிக்க இயல்வில்லை. 15102022  04.38

ஓடை


ஓடை


பணிவான அலைகள் கண்டேன்
பாய்ந்துநீ கடலுக் கேகு!
அணிகுளிர்  ஓடை உன்றன்
அடிகளைத் தொடர்தல் இல்லேன்.

மெல்லநீ  ஒழுகு  வைக்கோல்
மேடுகள் திடல்கள் தாண்டி
நல்லோடை, பிறகோர் ஆறாய்;
நாடிப்பின் வருவேன் அல்லேன்!

கரையோர மரம்க லங்கும்!
காணும்வெண் தளிர லங்கும்!
முரலும்வண் டுன்ம ருங்கில்,
முன்செல்க தொடர்தல் இல்லேன்.

ஆயிரம் ஒளிபாய் எல்லோன்;
ஆயிரம் நிலவும் இலங்கும்!
ஆயின் நான் தொடர்தல் இல்லேன்
அடிகளிங் ககல்வேன் அல்லேன்.

டென்னிசனின் ஆங்கிலக் கவிதையைத் தழுவியது.
( எழுதிய நாள்:  on )

ஆங்கிலக் கவியின் ஆயிரம் நிலவு என்ற வரணனைக்
கருத்து, நம் திரைப்பாடல் ஆசிரியர்களாலும்  போற்றப்பட்டதே ஆகும்.

பொருளுரைக்குச் சொடுக்கவும்:

http://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_3.html 

வெள்ளி, 1 டிசம்பர், 2017

சடுதி ஜல்தி



சடுதி என்ற சொல்லை இப்போது ஆய்வு செய்வோம்.

சொல் திரிபு என்பது ஒரு குறிப்பிட்ட பாணியில் நடைபெறுகிறதென்பதை நம் சொல்லாய்வு இடுகைகளை வாசித்துக்கொண்டு வருவோர்க்கு நன்.கு விளங்கும்.

அகர வருக்க முதலாகத் தொடங்கும் சொற்கள் சகர வருக்கங்களாகத் திரியும் என்பதைப் பல இடுகைகளில் எடுத்தியம்பியுள்ளோம். இதன் தொடர்பில் சடுதி என்னும் சொல்லையும் ஆய்வு செய்வோம்.

அடுத்தடுத்துக் குறைவான நேர இடையீட்டில் ஒரு நிகழ்வு நடைபெறுமானால் அதுவே சடுதி என்று பொருள் அறியலாம். இங்கு அடு என்னும் சொல்லே முன் நிற்கின்றது.

அடு பின்பு சடு என்று மாறுகிறது.

அடு > சடு

அடு > சடு > சட்டு.

சட்டு என்பது விரைவுக்குறிப்பு.
இதுபோலும் திரிந்த இன்னொரு சொல்: பிடு > பிட்டு. பேச்சில் இதைப் புட்டு என்பார்கள். 

பிட்டு என்பது எச்சவினையாகவும் வரும்.  பிட்டு என்பது உணவுப்பொருளைக்  குறிக்குங்கால் பெயர்ச்சொல் ஆகும்.  தமிழ் இலக்கணியர் இதனைத் தொழிற்பெயர் என்பர்.

சட்டென்று அந்தப் பையை அவன் பிடுங்கிக்கொண்டான் என்ற வாக்கியத்தில் விரைவுக் குறிப்பாக இச்சொல் வருகிறது.

சடு என்பது தி என்னும் விகுதி பெற்று, சடுதி ஆகும்.
ஆகும்போது விரைவு குறிக்கும்.

சடுதி என்பது ஜல்தி என்றும் திரியும். ஜல்தி என்பது வட இந்தியத் திரிபு. ( தமிழ் > தெக்காணி > இந்தி)

அடுத்தடுத்து வரும் ஒலியை சடசட என்பர்.  மழை சடசட என்று பெய்து சட்டையை நனைத்துவிட்டது என்ற வாக்கியம் காண்க.  இது ஒலிக்குறிப்புடன் விரைவுக் குறிப்பையும் உள்ளடக்கிய இரட்டைக் கிளவி.

இனி 'சடு' என்பது சாடுதல் என்று முதனிலை நீண்டு வினையாகவும் வரும். ஒருவனுக்கு அடுத்துச் சென்று உதைத்தல் சாடுதல்.  அடு > சடு > சாடு.
அடுத்துச் சென்று தொடும் விளையாட்டு :  சடுகுடு.

குடு என்பது அழுத்தித் தொடுதல். இதிலிருந்து குட்டுதல் என்ற சொல் பிறந்தது

இதுகாறும் உரைத்தவற்றால்  சடுதி என்ற சொல்லின் பொருள் 
புரிந்திருக்கும் .