வியாழன், 5 அக்டோபர், 2017

தீபாவளிச் சேலை



தீபாவளி வருமுன்பே தீபஒளி  காண
சேலைக்கடை ஒன்றினுகுச் சென்றிடுக,  பேணும்
ஆபவனி கண்டுமகிழ்ந் தணியழகு கூர்ந்தே
அயர்வென்ப  தடையாமல் அகமகிழ்வீர் ஆர்ந்தே.
கணவர்குறை காசெனவே கசடு பறைந்  தாலும்
கசக்கியெடு கரந்துளதைக் கறந்திடுஇந்  நாளில்
மணவினையும் அணிவிழவும் பிற நாளும் தேடும்
மதிப்புளதோ புடவையலால் தீபஒளி கூடும்.  


சாரணர் எவ்வாறு அமைந்த சொல்.



இனிச் சாரணர் என்ற சொல்லின் அமைப்பையும் பொருளையும் அறிந்து இன்புறுவோம்.

இது  இரண்டு துண்டுச் சொற்களை இணைத்து எழுந்த சொல் ஆகும். எனினும் இது ஒன்றும் புதிது அன்று. சங்க காலம் தொட்டு வழங்கி வருவதாகும்.

சார் :  இது சார்தல், சேர்ந்திருத்தல் என்ற பொருளுடையதாம்.

அணர்: இது  அணவுதல் தொடர்பான சொல்லினின்றும் தோன்றுவது.

அணவல்:   அண+ அல் =  அணவல்;  அணவு+ அல்= அணவல் எனினுமது.

இதன் பொருள் கிட்டுதல், பொருந்துதல்,  நெருங்குதல்.

அணத்தல் -  தலையெடுத்தல்,  மேலெழுதல், ஒன்றுசேர்தல், பொருந்துதல்.

அணர் -  தலையில் பொருந்தியிருப்பதாகிய மனிதன் அல்லது விலங்குகளின் மேல்வாய்.( கீழ்வாய் அசையும், மேல்வாயுடன் சேரும், விரியும் தன்மையுடையது. ) மேல்வாய் அசையாமல் இருப்பது.  ஆகவே  அணர் எனப்பெயர் பெற்றது.

அணவுதல் -  அணத்தல்;  புணர்ச்சி.

அணாவுதல் -  சேர்தல்.

இன்னும் உளவெனினும் இவை போதுமானவை. இங்கு போந்த பொதுவான கருத்து: :  பொருந்தியிருத்தல்.
சில எழுத்தாளர், “பிராமணர்” என்ற சொல்லை விளக்கினர்.  அவர்கள் பெரும் +   அணர் =  பெருமணர்> பிராமணர் என்று  தெரிவித்துப் பொருள்கூறினர். பிரம்மத்தை அணவினோர் என்று பொருள்கூறினவர்களும் உளர்.  இவ்விளக்கத்திலிருந்து “அணர்”  என்பதன் பொருளை அறிந்துமகிழலாம்.

ஆகவே பெருமானாகிய இறைவனை அணவியவர்கள் என்று கோடலும் பொருத்தமாகிறது.

எனவே  சார்+ அணர் எனின்,  சார்ந்து நின்று செயல்புரிவோர் என்பது பொருளெனல் இப்போது புரிந்திருக்கும்.

சாரணர் என்பதன் பொருளுணர இவை போதுமானவை.

நாகர்களை “  நக்க சாரணர்” என்றார் சீத்தலைச் சாத்தனார் ( சங்கப் பெரும்புலவர்).

Scouts எனப்படுவோரையும் "சாரணர்" எனப்படுதல் உண்டு. இந்த ஆங்கிலச் சொல்லை இப்படி மொழிபெயர்ப்புச் செய்தோர் பாராட்டுக்குரியோர் ஆவர்.  சாரணர் பள்ளிகளையும் நிறுவனங்களையும் ஒருவாறு  சார்ந்து இயங்குவோர் ஆவர்.

செவ்வாய், 3 அக்டோபர், 2017

மோடிக்குப் புகழ்



வீடற்றார் தமக்கேயொரு கோடி வீடே

விடியலுக் கெழுந்ததுபா ரதமே நாடே

ஓடற்ற குடிசைகளில் துன்பம் மிஞ்சி

ஓய்ந்தயர்ந்த மக்கட்கு நல்ல காலம்!

நீடுற்ற பலநன்மை நீங்கி டாதார்

நேர்த்தொண்டர் நிமிர்நெஞ்சர் மோடி பாதை

ஈடற்ற நன்முறையில் போற்றும் ஆட்சி

என்றென்றும் எய்திடுக ஏற்றக் காட்சி
.
மறுபார்வை செய்த நாள் : 27.9.2017

ஏழைகட்கு ஒரு கோடி வீடுகளை மோடி அரசு....
உறுதி அளித்துள்ளதாகத்
தகவல்.