வியாழன், 6 ஏப்ரல், 2017

வினியோகம்

 வெகு திறமையுடன் அமைக்கப்பட்ட சொற்களில் வினியோகம் என்பதொன்று.  இதில் யோகம் இருக்கிறதே!  ஆம், பொருள் விலையின்றி விநியோகிக்கப்பட்டால், யோகம்தான். அதிக விலையானால் யோகமில்லை. அதுவன்று நாம் நுழைந்துகாண விரும்பியது, இப்போது யாது அது என்பதனை விரைவாக அணுகிவிடுவோம்.

வியன் என்பது விரிவு என்று பொருள்படும் ஒரு தமிழ்ச்சொல்.
"விரிநீர் வியனுலகு" என்ற தொடரை எங்குக் கண்டீர்கள் என்பதை
எண்ணிப்பாருங்கள். வியன் என்ற சொல்லோடு ஓகம் என்ற சொல்லைச் சேர்த்தால் அது வியனோகம் என்று வரும். அதாவது விரிவாக ஓங்குதல் என்பதே இதன் பொருள்.

பொருட்களை விரிவாகக் கொண்டு சேர்த்தல், வியன் ஓகம் ஆகும்.
அது விரிவு மிகு தன்மையைக் குறிக்கும்.  ஓகம் என்பதும் நல்ல‌
தமிழ்ச்சொல். ஓங்கு+ அம் = ஓங்கம்;  இதில்   ஙக‌ர‌ ஒற்று இடைக்குறைந்தால் அதுவே ஓகம்.  அதாவது மிகுதியாகுவது.  ஓகம் என்பது அகரவரிசைகளில் காணப்படும் சொல். அமைந்ததும் கூறியபடியே ஆகும்.

வியனோகம் என்ற கூட்டுச் சொல், பின் எழுத்து முறைமாற்று
செய்யப்பட்டது. விசிறி என்பது சிவிறி என்றும், மருதை (மருத நிலம் நிறைந்த ஊர் அல்லது நகர் ) என்பது மதுரை என்றும் மாறினும்  பொருள் மாறாமை போல், இந்த வியனோகம் என்பது வினயோகம்
என்று மாற்றப்பட்டு, பின்  0னகரம்  நிகரமாக மாற்றப்பட்டுச் சொல்
அமைந்தது.

1. எழுத்து நிரல்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  யனோ > 0னயோ.
2. 0னயோ > 0னியோ என்று மாற்றம்பெற்று, பலுக்குதல் (உச்சரித்தல்) எளிமைசெய்யப்பட்டுள்ளது.

வியனோகம் (பரக்க ஓங்குதல்) வினியோகமாகி, இப்போது
சேவையாற்றிக்கொண்டுள்ளது.

இதிலுள்ள வி என்பது விரிவுணர்த்தும்.

வியனோகம் > வினயோகம் > வினியோகம்.

இதை வெளியிடாமல் வி+ நியோக என்று பகுத்துப் பொருள் கூறிவிடலாம். அப்போது வந்தவழி மறைவுறும்.

புதன், 5 ஏப்ரல், 2017

இராக்கம்மா.

ராக்காயி, ராக்கம்மா.

இர் என்பது இருள் குறிக்கும் ஒரு தமிழ் வேர்ச்சொல்.

இர் > இருள்
இர் > இரா  ( ஆ விகுதி)
இர் > இரவு (  வு  விகுதி. அ இடைநிலை)
இர் > இரா + அத்து + இரி = இராத்திரி.
 (இரு> இரி: திரிபு.)
இர் > இரா > இராக்காட்சி > ராக்காச்சி. (இரவில் வந்து கடிக்கும்
ஒரு வகைக் கொசு )

இனி, இர்> இராமர். இர்> இராவணன். இர்> இராகுலன் (இரவில்
இயங்கிய போராளிக் கோட்டியினன் ) எனப் பல உள்ளன.

இரவையும் பகலையும் ஆக்குபவள் அம்மை. அத்தேவியின்
ஆற்றலைக் குறிக்கும் வண்ணம்,

இர் > இர்+ஆக்கு+ஆயி =  இராக்காயி > ராக்காயி என்ற‌
சொல் பிறந்தது. சிற்றூர் வரவு இச்சொல்லாகும்.

இர் > இர்+ஆக்கு+ அம்மா ‍=  இராக்கம்மா.

இர் > இர்+ ஆக்கு + இ = இராக்கி.

இரவு என்ற சொல்லின் "வு" விகுதியை எடுத்துவிட்டு அமைக்கப்பட்ட‌
சொற்கள் இவை. சொல்லாக்கத்தில் இத்தகு விகுதிகளை எடுத்துவிடுதல்
ஓர் உத்தியாகும்.

இரவில் பகலவன் இல்லை. பகவோனை அப்புறப் படுத்தி, இரவினைத்
தருபவள் அம்மை. அங்ஙனம் சொல்கையில், அம்மை முழு வல்லமையும் பொருந்தியவள் என்பது இச்சொற்களால் புலப்படுத்தப் படுகின்றது. சிவம் ‍எனற்பாலது செவ்வொளி. முருகனும் செவ்வொளியே. இங்கு நடுநாயகியாக விளங்குபவள், அம்மை அல்லது ஆதிபராசத்தி யாவாள்.

பேச்சாயி ( பேச்சுக்கு ஆயி ) என்ற அழகிய சொல்லமைப்புப் போன்றது
இது.

ரா= ராத்திரி; தா = (ஆத்)தா;  ஆகவே "ராக்தா" என்றோரு சொல்லை
ஆக்கி மக்கள் மன்றத்திலே உலவ விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? அதுவும் "பரவாயில்லை."

இறைமை ஒன்றுதான்; வெளிப்பாடுகள் அல்லது  முகிழ்த்திகள் (மூர்த்திகள் ) பலவும் நாமங்கள் ( நாவினால் விளிப்பவை) பலவும்
ஆயின.

Will edit to review autocorrect and third party interference after 5th inst.


செவ்வாய், 4 ஏப்ரல், 2017

Tamil words for legal pleading ( a brief view)

ஓர் உரிமை வழக்கை (civil pleading    )   பிறப்பிக்கும்  அமைவுரை, ஆங்கிலத்தில் "பிளீடிங்" என்றும் சொல்லப்படும். பீளீட் என்றால் "வேண்டிக்கொள்ளுதல்" "முறையிடுதல்" என்றும் சொல்லலாம்.

பழங்காலத்தில் "தெவ்வுதல்" என்றொரு சொல் வழங்கியது.  இதற்கு
மன்றாடுதல் என்று பொருள்.  மன்று = முறை வழங்கும் மன்றம்; ஆடுதல் = அங்கு முறையிட்டுச் செயல் வேண்டுவது.

ஆகவே தெவ்வுகை என்பதை மறுபயன்பாடு செய்ய முயலுதல்
நன்று ஆகும். இது "பிளீட்" என்பதற்கு நேர்.

பிராது என்ற சொல்லும் உள்ளது. இது "பிறப்பிப்பது" என்ற சொல்லின்
நடுச்சுருக்கு ஆகும்.  பிற~து என்று சுருக்கி, நன்கு ஒலிக்க வசதியாக,
பிறாது என்று ஆக்கியது ஒரு திறமைதான்.  அதைப் புரிந்துகொள்ளத்
திறனற்றோன், அது உருது, அதில் றகரம் போடக்கூடாது, ரகரமே வரும் என்று திருத்திப் பிராது ஆக்கினான். இஃது அறியாத் திருத்தம். அப்புறம்,
சின்ன வகுப்பில் சின்னவாத்தி சொன்னதையே பெரும்பட்டதாரி ஆனபின்னும் பற்றுமையுடன் பற்றிக்கொண்டிருந்த புலவன், உருது உருது என்றதால், உருது அகரவரிசைக்காரனும் அதை அங்கு எழுதி வைத்துக்கொள்வான். நீங்கள் உருது அகராதியைப் புரட்டினால் அது அங்குக்  காட்சிதாராது போமோ?

கண்போன திக்கற்றவன் "கபோதி" ஆனதுபோலவும் விழுமிய வாழ்க்கை ஆகுவது "விவாகம்" (வி +வா+ ஆகு+ அம்  )    ஆனதுபோலவும் பிறாதும் பிராது ஆகி வேற்றுலகச் சான்றிதழைப் பெற்றுவிட்டிருக்கின்றது.

இல்லறமே சிறந்தது. விழுமியது.  இதைச் சொல்லே சொல்கிறது.  இதைப்  பிறமொழி  என்றதில் இவ் விழுமிய பொருண்மை மறைவுண்டது.