வியாழன், 27 அக்டோபர், 2016

தேன் வந்து பாயுது காதினிலே - மது


மது  என்பது ஒரு சொல்லின் இடைச்சுருக்கம்,  அதாவது:   ம ‍  து.
மயக்குவது,  மயங்குவது என்ற இரண்டில் எதிலும்  இடைநிற்கும் எழுத்துக்களை எடுத்துவிட்டால்  மது கிடைக்கின்றது;  பூவின் இடை
நிற்கும்  சாற்றை எடுத்து தேனீக்கள் மதுவைத் தருவது போல.

மது என்பது கள்ளையும் குறிக்கும்.  ஏனை மயக்குத் தேறல்களையும்
குறிக்கும்.  தேனையும் குறிக்கும்.

மதுவுண்ட வண்டானேன் எனின் ,  வண்டு  கள் குடித்தது என்று பொருள் ஆகாது.  வண்டு தேனை உண்டது என்பதே பொருள்.

மது  என்பது பொதுப் பொருளினது  ஆதலின் " பூமது "  " மது மலர்"  என்றெல்லாம் வரணனைகள்  ஏற்றப்  படுவதுண்டு.

"தேன்  வந்து பாயுது  காதினிலே" என்று பாடலில் வந்தால்,  தேன்  நாவிற் பட்டால்  ஆங்கு  உணரப்  படும் இனிமை போலும் ஓர் இனிமை,  செவிக்குள் சென்று பாய்கிறது  ,  என்பதே பொருள்.  தேனின் இனிமை `செவி உணராது
என்று குற்றம் காணலாகாது.  ஒரு சிறு கைக்குழந்தையைப் பார்த்து, Sweet   
என்று  நாம் மட்டுமா சொல்கிறோம் ?  சீனர்  மலாய்க்காரர்கள், ஏனை  மக்களாலும் சொல்லப்படுகிறதே;  குழ்ந்தை என்ன சீனியா  வெல்லமா ?  மொழிகளின் இயல்பும் மனிதனின் பொருள் உணர்ந்து உணர்த்தும் தன்மையும் அப்படி .எல்லா மொழிகளிலும் இவ்வகை ஒப்பீடு  உள்ளது  அறிக.

மயங்குவது என்பதை  ம - து  என்று சுருக்குவது  அதனை வெளிப்படையாகச் சுட்டாமையினால் ஏற்பட்டது,   இது  இடக்கர் அடக்கல் போன்ற ஒரு தேவையாகவோ  விரைந்து வணிகம் செய்தற்பொருட்டோ  ஏற்பட்டிருக்கக் கூடும்.  நாளடைவில் இது ஒரு தனிச் சொல்லானது,

இது பற்றி மேலும் அறிய:

https://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_2.html

மது என்பது மலாய் மொழியிலும் வழங்குகிறது.  அது  மா - டு  என்று  ஒலிக்கப்  பெறும் .தமிழ் மூலங்களிலிருந்து பிறந்த சொல்  பல வேறு திரிபுகளால், பிற மொழிகட்கும்  சென்று வழங்குதல் தமிழின் பெருமையே ஆகும்,  

செவ்வாய், 25 அக்டோபர், 2016

பதி பெண் வீட்டில் சென்று பதிந்து வாழ்பவனை............

பதி என்பது பலபொருளொரு சொல்.

இது அழுந்துதல், ஒடுங்குதல், கீழ்ப்படிதல். பணிதல்,பள்ளமாதல், ஊன்றுதல்,  ஆழ்தல், தங்குதல், நிலையாதல், எழுதல். ‍ என்று பல‌
பொருளுடைத்து.

பதி என்பது, உண்மையில் பெண் வீட்டில் சென்று பதிந்து வாழ்பவனைக்
குறிக்கிறது. அவனே கணவன்.( கண்போன்றவன்).  புருடன் ( புருவம் போன்று கண்ணாகிய பெண்ணைக் காப்பவன்.)

கண்  புருவம் என்பவை உடலிற்  பதிந்து பயன் தரும் உறுப்புகள்.

பழங்காலத்தில் பெண்களே தலைமை தாங்கினர். பெண்வழிக் குடும்பங்களே
நடைபெற்றன.  matrilineal.   இன்றும் உலகில் சில மக்கள் கூட்டத்தினர், பெண்மைத் தலைமையே போற்றுகின்றனர்.

பெண் வீட்டிற் சென்று ஆண் பதிந்து (புகுந்து) நின்ற படியால் அவன்
பதியானான். சொத்துரிமை உடையவர்களும் பெண்களே யாவர்.

பதிதல் என்பதன் பொருளைப்  பாருங்கள். அப்போது இது நன்கு தெளிவுறும்.

ஆணின் பெயர் அல்லது ஆணின் குடும்பப் பெயரைப் பிள்ளைகள்
தாங்கியதன் காரணம், பதிந்து நின்றவனை அடையாளம் தெரிவிக்கவே
ஆகும். பெண் நிலையாக வீடு நடாத்தியதால் அவள் பெயர் இடுதல்
வேண்டாமை உணரப்படும்.

கடவுள்  சீனிவாசனும் ஸ்ரீ  என்னும்  பெண்ணில் வசித்தவனே ஆவான் .

மனிதன் ஆரம்பமானது பெண்ணுக்குள்ளே  என்ற பட்டுக்கோட்டையின்  பாட்டும்  பொருள் பொதிந்தது ஆகும்.

பெண் அடிமை  பிற்கால நிகழ்வு.

அனைவர்க்கும் தீப ஒளி நல்வாழ்த்தே!

இனிதான தீபஓளிப் பண்டிகையே
இன்புதரும் பலகாரம் பலவகையே!
கனிவாகப் பெரியோர்முன் பிள்ளைகளும்
களிப்புடனே ஓடியாடி விளையாடும்.

தனியாக இருப்போர்க்கும் பெருமகிழ்வே
தமிழாலே தெய்வத்தை வாழ்த்திடுவீர்
பனியோடும் பகலோனைக் கண்டுவிடில்
பாரினிலே அதுபோலப் பயன்பெறுவீர்.

அனைவர்க்கும் தீப ஒளி நல்வாழ்த்தே
அகிலமெலாம் தீவினையின்  நீங்கிடுக!
மனையாளும் மக்களுடன் மகிழ்நனுடன்
மனம்போலே வாழ்வுபெறும் மங்கலமே