புதன், 30 டிசம்பர், 2015

புத்தாண்டு வாழ்த்துக்கள்


ஈரா  யிரத்தினைக்  கூர்பதி   னாறணுக
சீரா யனைத்தும் செழித்தின்பம் ----  நேர்ந்திடுக;
வாரி அலைநில வல்நடுக்கம்  வாராவே 
சேருநற் பேரால்  சிற.


குறிப்புகள்:

கூர் =  மிகுக்கும்.  சிறப்பிக்கும் .
n. < கூர்²-. 1. Abundance, excess; improvement; உள்ளது சிறந்து மிகுகை. (தொல். சொல். 314.

 மிகுதல். பெரு வறங் கூர்ந்த கானம் (பெரும்பாண். 23). 2.)

பதினாறு  என்பது  16  செல்வங்களையும்  குறிப்பது.  அது  2000 என்பதைச்  சிறப்பிக்கிறது.

அணுக -  வந்துகொண்டிருக்க .

வாரி -  கடல்.   வாரி அலை  என்றது சுனாமியை.

நற்பேர்  -  நல்ல புகழ்  வந்து சேரட்டும்.  அதனால் சிறக்க  என்றபடி, 


விவேகமும் வெண்டைக்குழம்பும்.

ஒருவர் ஒரு புதுவிதமான வெண்டைக் குழம்பு வைத்தார். அதைச் சாப்பிட்டுப் பார்த்தவர்கள் மிக நன்றாக,  சுவையாக இருப்பதாகப் பாராட்டினார்கள். பாராட்டியது மட்டுமா? ,  நாலைந்து முறை வந்து சாப்பிட்டுவிட்டுப்  போனார்கள். அதற்குப் பணம் கொடுக்காமல் போனவர்களும் அங்கு வந்து சாப்பிட்டோர் பட்டியலில் இருந்தார்கள்.

அவர்களில் ஒரு மனிதர் அந்த வெண்டைக் குழம்பு எப்படி வைப்பது என்பதை நன்கு உசாவி அறிந்துகொண்டார். சில நாட்களின் பின்னர்,ஓரிடத்தில் குழம்பு வைக்கும் வேலை அவருக்குக் கிட்டியது. அங்கு அந்த வெண்டைக் குழம்பை வைத்துப் பெரும்புகழ் எய்தினார்.

அவர் வேலை பார்த்த நிறுவனத்தில்  அவருக்குப் பதவி உயர்வு கிடைத்து, நல்ல சம்பளமும் கிடைத்தது. சமையற்கலைமணி என்ற பட்டமும் அவர்க்கு வந்து சேர்ந்தது.

முதல் முதல் அந்த மாதிரி வெண்டைக் குழம்பு வைத்தவர், பாவம்.
அவர் எந்தச் சிறப்பையும் அடையாமல் ஒதுக்கப்பட்டுக் கிடந்தார்; வெண்டைக் குழம்பு வேண்டியவர்கள்  எல்லாம் அந்த இரண்டாமவரிடமே போய்ச் சாப்பிட்டார்கள்.

நான் தான் முதன்முதலாக இப்படிக் குழம்பு வைத்தேன் என்று ஒருசிலரிடம் சொல்லிப் பார்த்தார். கேட்டவர்கள்  யாரும் நம்பவில்லை. இவன் பார்த்துச் செய்கிறான் என்று திட்டினார்கள்.

வழக்குப் போட்டுப் பார்த்தார்.  அது ஆதாரமற்றதாகக் கருதப்பட்டுத் தள்ளுபடியில் முடிந்ததுடன்,  செலவு தொகை வேறு கட்டும்படியான தீர்ப்பு விளைந்தது. இவர் நொடித்துப் போனார்.

அந்த ஊர்ப் பள்ளியில் ஒரு வகுப்பில் வாத்தியார் பிள்ளைகளிடம் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார். " பிள்ளைகளே, நீங்கள் எதையும்  கண்டுபிடித்தால்  தேசிய விருது பெறலாம். ஆகையால் கடினமாக உழையுங்கள் "  என்றார்.

வெண்டைக் குழம்புக்குக் கிடைத்த வெகுமதி என்னவென்று அவருக்குத் தெரிந்திருந்தால்தானே?  உலகம் திருட்டு உலகமென்று வகுப்பில் சொல்லமுடியாமா என்ன?

வேலைக்கென்றே சிலர் பிறந்திருக்கிறார்கள்.   புகழுக்கென்றே வேறு சிலர்  அமைந்திருக்கிறார்கள். இதை மாற்றிவிட முடிவதில்லை.


செவ்வாய், 29 டிசம்பர், 2015

சி போதம்: 4. பொருளுரை.

இது  முன் இடுகை   http://sivamaalaa.blogspot.sg/2015/12/4-preliminary-notes.html  -யின்  தொடர்ச்சி.


ஆன்மா அந்தக்கரணம்  அவற்றின் ஒன்று அன்று =  ஆன்மா என்பது  மனம், புத்தி, சித்தம்  அகங்காரம் என்ற நான்கு உட்கருவிகளில் ஒன்று ஆகாது; ( ஆகவே  அவற்றின் வேறானது ஆன்மா.)

சகச மலத்து உணராது =  இயல்பான கேடாகிய, ஆணவமென்னும் சகச மலத்தின் காரணமாக,  ‍தன் உண்மை விரிவு நிலையை உணராமையால்;

அரசு அமைச்சு ஏய்ப்ப ‍   =   அரசாள்பவன் தன் அமைச்சர்களுடன் கூடி அவர்கள் தரும் அழுத்தங்களால் உந்தப்படுதல் போல;

அவை சந்தித்தது நின்று  =  அவைகளுடன் கூடி  வாழ்தொறும் நிலையாய்  இயங்கி;

அஞ்சு அவத்தைத்து ‍=  ஐந்து  நிலைகளை உடையதாய் உள்ளது.
ஏ =  உறுதி கருதிய  ஏகாரம் ;  (தேற்ற  ஏகாரம் )

இவற்றுள்  சாக்கிரம் என்பது,  ஆன்மா  புருவங்களின் நடுவில் தங்கி , விடைய  நுகர்ச்சியில் மெத்தென  நிற்கு நிலையாம்,

சொப்பனம் என்பது ஆன்மா  கழுத்தில் நின்று  புலனுணர்ச்சிகள்  sense organs ஒடுங்கி எண்ணங்கள்  mind  ஓடும் நிலை.

சுழுத்தி   என்பது  முழு உறக்கம்;  இதில்  புலன்கள் முற்றிலும் ஒடுங்கி எண்ணங்களும்  ஒடுங்கிய நிலை.

துரியம் என்பது:   ஆன்மா  உந்தியில் நின்று கொண்டு  பிராணனுடன் ஒன்று பட்டு இயைந்து கிடப்பது. ஆகவே  பிராணன் என்னும் உயிர் வேறு; ஆன்மா என்பது வேறாம்.  ஆனால் உந்தியில் அவை இயைந்து நிற்கின்றன.

துரியாதீதம் என்பது:  ஆன்மா  மூலாதாரத்தில் நிற்பது.
துரியம் +  அதீதம் = துரிய + அதீதம் =  துரியாதீதம்.   துரியத்தைக் கடந்தது.
அதீதம்  =  கடந்து நிற்பது.  உந்தியைக் கடந்த இடம் ,    எனவே மூலாதாரம்.
துரிதல்  =  தேடுதல் . ( துருவுதல்  என்ற சொல்லுடன் தொடர்புடைய சொல்லாகும் .  )  ஆன்மா உயிரைத் தேடிக்  கண்டு, ஒன்றுபட்ட இடம்  துரியம் என்றும்  அது கடந்த இடம்  துரியாதீதம் என்றும் சொல்லப்பட்டது.
அதீதம் <   அது +  ஈது  + அம்  =  அதீதம். (முன்னிடம் அது ;  இவ்விடம் - ஈது ; அம்  = விகுதி  ).  அங்கு இருந்தது,  விட்டு  இங்கு வருதல் ,   அதீதம். எனவே கடந்த இடமென அறிக.


திருமந்திரத்தில்:

காயப்பை ஒன்று சரக்குப் பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே    2122

என்று திருமூலர் சொல்கின்றார்.  இங்கு கள்வன் என்றது ஆன்மாவை.  சரக்கு - இதுவரை எடுத்தோதிய  கரணங்கள்  அவத்தைகள் முதலான பலவற்றைக் குறிக்கும். ("பலவுள " என்றார் ஆதலின் ).  மாயப்பை , மாயும் அல்லது இறக்கும் பை.  அங்கிருந்து புறப்பட்ட ஆன்மாவுக்கு,  மற்றுமோர் பை என்றது  மறுபிறவியிற் பெறும் உடலை. ஒழிந்த அல்லது மாய்ந்த பையோ, மண்ணாகிக் கலந்துவிடுகிறது -  இயற்கையுடன் .

மயங்கிய -  கலந்த .

ஆன்மாவைக் கள்வன் என்றது ஏன் ?  சொந்தமில்லாத ஓரிடத்தில் உட்புகுந்துகொண்டு  குடியிருக்கும்  ஒருவனை  அல்லது ஒன்றை -    புகுந்தது மட்டுமின்றி  என் உடல் , என் தலை, என் கால் கை  என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்போனை /  இருப்பதை,  பின் எப்படிக்  குறிப்பிடுவீர் ?
அவன் கள்வனேயாம். என்ன வியப்பு?  இந்தக் கள்வன் வேறோர் உடம்பைத் தேடிப் போய்விட்டால் இவ்வுடம்பு பாழ்.  மண்.



தொடரும்
will edit