திங்கள், 30 நவம்பர், 2015

வலியோன் என்ற சொல்

இச்சொல்  பல் வேறு வகைகளில் முடிவதை இப்போது கண்டுகொள்வோம்.

வல்+ இ+  ஒன்  =  வலியோன்

 இதிலிருக்கும்  லகர ஒற்று  (ல்)  இரட்டித்தும்  வரும்.

வல்  +  ல் + இ + ஒன்   =  வல்லியோன் .

இடையில் இகரம் தோன்றாமல்  வருதலும்  அமையும்,

வல் + ல் +  ஓன் =  வல்லோன்.

மேற்சொன்னபடி  லகர ஒற்றுப் பெறாமலும் வரும்:

வலோன் :     (  மதிவலோன்,  கலைவலோன் )/

வலவர் .  வலார்  என வரும் பிற  பின்னொரு நாள் காண்போம்.

இப்போது  வல்லியோன் என்பது வந்த ஓர்  எடுத்துக்காட்டு:

"இமைப்புவரை அமையா  நம்வயின் 
மறந்து  ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே ."

குறுந்  248.

  

வியாழன், 26 நவம்பர், 2015

"பண்டைப் புலவோர்" ஒரு கண்ணோட்டம்

புலவர் என்ற சொல் புலம் + அர்  என்றமைந்த சொல்லாகும் .

புலம் என்பது காட்சி என்றும் பொருள்படும். கட்புலம்  அதாவது  கண்ணின்  காட்சி  அல்லது காட்சித்திறன்,  அதுபோல்  செவிப்புலம்   என்றும்  அமையும் ,

புலம் என்பது  புலன் என்றும் வரும்.  இது போல வருதலின்  போலி எனப்படும்,
அதாவது புலம் என்ற சொல்லில் மகர ஒற்று வந்ததுபோல்  னகர  ஒற்று வந்து அதே சொல்லாய்ப்  பொருளோடு அமையும்.  புலன்  எ-டு :  ஐம்புலன்,   மெய்ப்புலன் .

புலம் என்ற சொல் புல் என்ற சொல்லிற் பிறந்தது.  புல்லுதல் என்றால் பொருந்துதல்.  காணும் திறன் உள்ள கண்ணோடு  காணப்படும் பொருள் சென்று ஒளியால் பொருந்துகிறது.  ஆகவே புல் > புலம்  ஆயிற்று .

புலம் + அர்  என்பதில்  மகர ஒற்று  மறைந்து   புல+ அர்  என்றாகி  வகர உடம்படு மெய்  தோன்றிப்  புலவர் என்று சொல் அமைந்தது.  அர்  விகுதி சேர்க்காமல்  ஓர் என்பதைப்  போட்டால்  புலவோர் என்று வரும்.  இரண்டும்  ஒன்றுதான் .
புலவர் என்பது  இப்போது பணிவுப் பன்மையில்  (மரியாதை ​​) வருவதால்
இக்காலத்தில் கள் விகுதி சேர்த்துப்   புலவர்கள் என்றாலே  பன்மையாகிறது,
ஆனால்  ஓர் விகுதி "கள்"  இல்லாமல் பன்மை காட்ட வல்லது.  ஆகையால்  மறைமலையடிகள் "  முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் "  என்று தம் நூலொன்றுக்குப் பெயரிட்டார்.

புலவர்  என்பது  புலவு + அர்  என்றும் பிரியும்  ;  அப்போது புலால் உண்பவர்கள்
என்றும்  பொருள் தரும்,   புலவு = புலால் , இறைச்சி .

வடபுலவர்  என்று வரும் கூட்டுச் சொல்லில்  வடதிசையில் உள்ள மக்கள்;
வட திசையில் உள்ள புலவர்கள் ;  வடக்கே புலால் உண்போர்  என்று மூன்று விதமாகப் பொருள் கொள்ளலாம்;  காரணம் புலம் என்பது இடம் என்றும் பொருள் ஏற்கும் சொல்.இடம் நோக்கிப் பொருள் கொள்க.  மயக்கம் இன்றிப் பொருள் வரவேண்டுமானால் வடபுலத்தார்  தென்புலத்தார்  என்று இடம் சுட்டுவது நன்று     புலம் பெயர்ந்த மக்கள் என்ற தொடரையும் நோக்கவும் ,  புலவு என்பது இறைச்சி  அல்லது புலால் என்றும் பொருள் கூட்டுவது


ஔவைப்பாட்டி
"புலவு    நாறும்   என்  தலை தைவரு மன்னே"  என்று புற நானூற்றில் கையறு  நிலையில் ாடுதல் காண்க.

browser collapsed  will edit later




ஒரு புதிய கூட்டுச்சொல்

சக்கிலியன்  என்ற தொடரில்  கடைசி  இடுகையை எழுதிக்கொண்டிருந்த  போது,   இறைச்சி முதலியன  உண்ணுதல்  அல்லது  பேச்சு வழக்கில் :"கவிச்சி உணவு"  என்று சொல்லப்படுவதற்கு ஒரு புதிய சொல் தென்பட்டது,

மாமிசம் என்னும் சொல் தமிழன்று  எனப்பட்டாலும்  அதற்கு   மா மிசைதல் என்ற தனித்தமிழ்ச் சொற்றொடரே மூலம்   எனற்பாலது  யாம் காட்டினோம்.

ஆகவே  கவிச்சி உணவுக்கு "மாமிசைவம்"   என்று  ஒரு புதிய கூட்டுச்சொல்லை  நாம் படைத்துப் பயன்படுத்தலாம்,

ஆனால் இதில் ஒரு இரட்டுறல் உள்ளது,

எப்படி:

பிரித்தால்  மாமி + சைவம் என்று வரவில்லையா?