திங்கள், 25 மே, 2015

விலங்கு என்ற சொல் handcuffs

.பொதுவாகக் காவல் துறையினர் குற்றாவாளியின் முன் கைக்குழைச்சில் அல்லது கணுக்கையில் இடும் வளையக்கைப்பூட்டுக்கு "விலங்கு" மாட்டுதல் என்று சொல்வர்.

இந்த "விலங்கு" என்பது  மிருகம் என்றும்  பொருள் படும். அதைப்பற்றி இங்கு பேசவில்லை.

விலங்கு என்ற சொல் வில் என்பதிலிருந்து வருகிறது.  வில் என்பது வளைவு உள்ளதென்பது நீங்கள் அறிந்ததே. விலங்கு என்பதும் வளைவு என்ற கருத்தினடிப்படையில்  ஏற்பட்டு வளையம்போல் கைகளில் பூட்டப்படுவதனால் ஏற்பட்ட சொல்தான்.
 வில்+கு = விலங்கு ஆனது.   இச்சொல் இடையில் ஓர்  அம்  என்ற சொல்லைப் பெற்றுள்ளது, இது சொல்லாக்கத்திற்குப் பயன்படும் ஓர் இணைப்புச்சொல் ஆகும்.  இதை இப்படியும் காட்டலாம்:

வில் > ( விலம் )>  விலங்கு..   விலம் என்பது இங்கு சொல்லாக்கத்தில் ஓர்  இடைத்தோற்ற வடிவம் ஆகும்.  கருப்பைக் குழந்தை போலும் தோற்றம்,

நேராகச் சென்றால்  தடை அல்லது முட்டு நிலை ஏற்படும்போது நாம் சற்றே  விலகிச் செல்வோ,ம்.  விலகிச் செல்வதை மாறிச் செல்வது என்று மலையாள மொழியில்  சொல்வர்.  நேர் கோட்டில் செல்வோன் ஒருவன் முட்டு நேராதபடி சற்று வ:ளைந்துதான் போகவேண்டும். இந்த விலகு என்ற சொல்லில் வளைவுக் கருத்து அடங்கி இருப்பதை இப்போது நன்கு அறிந்து கொள்ளலாம்.

வில் + கு:>  விலகு .  இங்கு சொல்லாக்க இடைச்சொல்லாக ஓர் அகரம் தோன்றியுள்ளமை அறியலாம்.   கு என்பது  வினைச்சொல் ஆக்கத்துக்குரிய விகுதி ஆகும். மூழ் >  மூழ்கு  என்பதனுடன் ஒப்பிடுக 

அடுத்து வில்லேஜ் என்ற சொல்லைப் பார்ப்போம்.

ஞாயிறு, 24 மே, 2015

chuuriya aaRRal

உலகின் பாதியைச் சுட்டெரிப்  பதுபோல்
பலநா    டுகளிலும் தாங்கொணா வெப்பம்

வெப்பம் இத்துணையும் மனிதன் ஏற்படுத்த
எப்படி எரிபொருள்  இவனுக்குக் கிட்டும்;

ஆயிரம் ஆயிரம் விளக்குகள் போட்டாலும்
ஆதவன் அவனுக்குத் தாமவை ஈடாமோ

ஆகும் தவமெலாம் செய்தோன் ஆ தவன்;
வேகும் தீப்பந்து அவன்மேனி என்றனர்/

தன் தவ வலியினால் தான் அழியா நின்று
கண்போல் இவ்வுல கவன்காத்தல் வேண்டுமே

புதன், 20 மே, 2015

போர் குறுகிவிட்டதைக் குறிப்பதே குறுவஞ்சி

குறுவஞ்சி என்பது புறப்பொருளில் ஒரு துறை ஆகும். இது வஞ்சித் திணையில் வரும்.

போருக்குச் செல்பவன் வஞ்சி மன்னன். வஞ்சி மாலையைத் தலையில் மலைந்துகொண்டு புறப்படுவான்.  கூடார்தம் மண்ணினைக் கொள்வேன் என்று முழங்கிக்கொண்டு செல்வோன். கூடார் எனில் பகைவர். அப்படிப் புறப்பட்டு வந்த மன்னனுடன் போர் செய்யப் பின்வாங்கியவனாய், அவனுக்குக் கப்பம் கட்டித் தன் மண்ணையும் குடிகளையும் காத்துக்கொள்ளுதலே  குறுவஞ்சி என்ற துறை. இப்படிப் பணிந்துபோய்த் திறைசெலுத்தியதைப் பாடும் பாடலை, வஞ்சித்திணை, குறுவஞ்சித் துறை என்று பகுத்துரைப்பர்.

விலை யுயர்ந்த யானைகள்,  அழகிய குதிரைகள் என்று தன்பால் உள்ள ஏற்கத்தக்க   எப்பொருளையும் முன்வைக்கலாம்.   வணங்கி இறைஞ்சலாம்.

வீரம் பேசிப் பலரைக் கொல்வதினும் இது நல்லதென்றே தெரிகிறது. ஆனால் தமிழ் மன்னர்கள் இதனை விரும்பியதாகத் தெரியவில்லை.

மடுத்தெழுந்த மறவேந்தர்க்குக்
கொடுத்தளித்துக் குடியோம்பின்று

என்பது கொளு.

கனல் கக்கும் போர் குறுகிவிட்டதைக் குறிப்பதே "குறு" என்ற அடைமொழி.

குறுவஞ்சி வேறு;   குறவஞ்சி வேறு.