சனி, 18 அக்டோபர், 2014

எழுதிக்கொண் டிருக்கலாமென் றால்..........



எழுதிக்கொண் டிருக்கலாமென் றால்முளைத்த வேலைகளோ
பழுதிற்கொண் டிருத்தியதே பண்ணுறுமென் நோக்கினையே!
முழுதிற்செம் பகுதியென முன்கிடைத்த நேரமின்றோ
உழுதல்செய் துணவுண்ணான் போல்தொலைந்து போனதுவே.

இன்னும்சின்  னாட்களுக்கே  இதுதொடரும் போலுளதால்
எண்ணும்நன்  னாள்தன்னில் எழுதவிய லாதெனினும்
கண்ணும்பொன் காதுமனம் கணம‌னைத்தும் செந்தமிழை
ஒண்ணும்போ தெல்லாமும்  கருதுவதில் ஓய்ந்திலவே 

புதன், 8 அக்டோபர், 2014

மரப்பாச்சி

பொய்ம்மெய் (பொய்யான உடம்பு) என்பது பொம்மை!  மரப்பாச்சி என்பது என்ன?

இது மரத்தால் ஆன  பொம்மை.

மரப்பாவை என்ற சொல்லோடு பெண்பால் விகுதியான   "சி" சேர்ந்துகொண்டது.
மரப்பாவை ஆணுருவாகவோ பெண்ணுருவாகவோ இருக்கலாம்.  பெண்போல் செய்யப்பட்ட பாவைக்கு "சி" போட்டது பொருத்தம்தான்.

மரப்பாவைச்சி என்பது மரப்பாச்சி என்று மருவிற்று. 
மரப்பாவையில் மர‍  என்ற அடை இன்றி வெறும் "பாவை" என்று மட்டும் சொன்னால், அது பெண்ணைக் குறிக்கும்.

"பெண்பாவாய்"  என்று விளித்தலும் உளது. பெண் என்பதை அழுத்திச் சொல்வதாய்க் கொள்ளலாம்.

அற்று அமிழ் சூரியன் - அஸ்தமிக்கிறது

சூரியன் இரவில் ஓளியற்றுக் கடலில் அமிழ்ந்துவிடுகிறது. அல்லது ஒரு மலைக்குப் பின் போய் ஒளிந்துகொள்கிறது.  நில நூலறிவு நிரம்பப் பெறாத மக்கள் முன்காலத்தில் இப்படி நம்பினர். கலங்கிப் போன ஒரு அழுக்குக் குட்டைக்குள் போய் மறைந்துவிடுகிறது என்றுகூட மக்கள் நம்பினர். பூமி தட்டையானது என்ற நம்பிக்கை அவர்களின் மூளைகளில் ஆட்சி செலுத்திய அக்காலத்தில் இந்த விளக்கங்களெல்லாம் சரிதாம்.


ஆனால் மொழியில் சொற்கள் உருவாகிய பழங்காலத்தில், இக்கருத்துக்களை வைத்து அவர்கள் சூரிய மறைவுக்கு ஒரு சொல் படைத்திருந்தால் அதுவும் சரிதான்.



அற்று அமிழ்கிறது சூரியன்; இரவு வந்துவிடுகிறது.



அற்று+ அமிழ் = அற்றமிழ் >  அத்தமி > அஸ்தமி.



சூரியன் அற்று அமிழ்கிறது > அத்தமிக்கிறது > அஸ்தமிக்கிறது.அறிந்து மகிழ்க! 


இது  மிக்க எளிதான  திரிபுதான்.  "ற்று"  என்பது  "த்து" ஆவதோ  வழக்கமானது. இதைப் பல சொற்களில்  கண்ட றிந்ததனால்,  இதை எழுத வேண்டுமென்று  கூடத் தோன்றவில்லை  இந்த இடுகையைத் தொடங்கும்போது. 

ழ்  வருமிடங்களில் கண்டிப்பாக ஒரு திரிபு இருக்குமே!  தமிழ் என்பது பேச்சில் "தமிளு " ஆகிறது. ழ் > ளு .   எச்சி(ல்)  உமிழ்"    என்பது   "எச்சி உமி"  என்றாகிறது.     வாழகை  என்பது வாடகை என்று மாறிவிட்டது.  ழ > ட .  இன்னொன்று:  பீழை > பீடை!  இன்னும் பல.

திரிபு உறப் பேசுதல் மக்களியல்பன்றோ ?