வியாழன், 5 டிசம்பர், 2013

அதிகாரக் கோதை மயக்கு

கோடி பொதுமக்கள் கொன்றவன்--  அதிகாரக்
கோதை மயக்குநீர் உண்டவன்!
தேடிப் பதைப்பவை செய்தவன் -- ‍‍‍ இனக்கொலை
தேர்ந்தவன் பாவத்தில் உய்தவன்.

அரியணை நீங்கிடா ஆணவன்-- புவி
அனைத்தும்  சொலக்கே ளாதவன்!
புரிந்துள போர்க்குற்றம் நீதிமுன்-- வைத்துப்
புகலவும் நெஞ்சொப்பி டாதவன்..

குற்ற மனைத்துக்கும் கொள்கலம்--  ‍‍‍‍இது
குழைவின்றிக் கண்டதுஇந்  நன்னிலம்!
இற்றைக் கியான்மட்டும் கண்டதோ!-- ஆக‌
இவன்யார் என்பது விண்டிலேன்.

செவ்வாய், 3 டிசம்பர், 2013

அயல். > அசல்.

இனி, அயல் என்ற சொல்லுடன் சற்று  விளையாடலாம்.


ஐயம், என்பது ஐயப்பாடு. இதன் பகுதி யாகக் கருதத்தக்கது ஐ ஆகும். ஐ+அம் = ஐயம்.

ஐ = அய்.

அல் என்பது  அல்லாததைக்  குறிக்கும்  அடிச்சொல்.


அய்    + அல்  =  அய்யல்    >  அயல். > அசல்.


அய்யல் என்றுதான்  யகரம் இரட்டிக்க வேண்டுமென்பதில்லை.

பை  >    பையல்   > பயல்  >  பசல் >   பசன் > பசங்க....  





வாசித்தல் & அசல்

வாசித்தல் என்பது வாயினால் ஒலித்துப் படித்தல் என்று பொருள்படும்: இஃது சொல்லின் அமைப்பிலிருந்து வெளீப்படும் பொருளாகும்.

வாய் > வாயித்தல். > வாசித்தல்.
 
யகரம் சகரமாக மாறுவது தமிழியல்பு.

வாசித்து என்பது மலையாள மொழியில் வாயிச்சு என்றே  சொல்லப்படும்.

வாயித்து என்பதெ முந்து வடிவம். இதை முன்பு நான் எழுதியுள்ளேன். எங்கு என்று நினைவில் இல்லை.

அசல் என்பது தமிழ்ச்சொல் அன்று என்பர். நம்பிக்கைக்குரிய நல்ல பொருள்கள் பெரும்பாலும் வெளி நாட்டிலிருந்தே வந்தபடியால், அயல்  என்ற சொல் திரிந்து அசல் ஆகி போலியன்மையைக்
குறித்தது. உள் நாட்டுப் பொருள்கள் கலப்படமுள்ளவை என்று நினைத்ததையே இது காட்டுகிறது.

இதில்  யகரம் சகரமானது நோக்குக. அயல் > அசல்.