வியாழன், 25 டிசம்பர், 2008

பிரமித்தல்

பிரமிப்பு
-------

தமிழ் இயன்மொழி.

அப்படியென்றால், இயற்கையாய் மக்கள் நாவில் தவழ்ந்து, வளர்ந்து, மிகப் பழங்காலத்திலேயே எழுத்துக்கள் அமையப்பெற்று, இலக்கிய வளமும் அடைந்து இன்றும் நின்று நிலவும் மொழி.

தமிழுக்குப் பழங்காலத்தில் பல கிளை மொழிகள் இருந்திருக்கலாம். அவை குமரிக் கண்டத்துடன் அழிந்திருக்கக்கூடும். (இப்போதுள்ள பேச்சு வேறுபாட்டுக் கிளைகளைக் குறிப்பிடவில்லை) . இல்லையென்றால் சில அவுத்திரேலியப் பழங்குடி மக்களின் மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் (அழிவினின்றும் எஞ்சியவை ) காணப்படுதல் ஏன் என்று ஐயமுறுவோர் காரணம் காட்டவேண்டும்.

நிற்க:

இப்போது பிரமிப்பு என்ற சொல்லின் பொருளைக் காண்போம்.

பெரிதென்று மிக வியத்தலே பிரமித்தல்.

பெரு > பெருமித்தல் > பிரமித்தல்.

பிரமித்தல் என்பது பேச்சு வழக்குத் திரிபில் முளைத்த சொல்.

இதைப்பற்றி மேலும் உரையாடுவோம்.

புதன், 24 டிசம்பர், 2008

ஞாயம் மாட்டுக்குக்

ஆசிய சோதியும் ஆனவர் பின்சென்ற
அன்புள்ள மக்கள்் ் இலங்கையிலே-- அவர்
பேசிய பேச்சுக்கில் லைமதிப் பேகுண்டு
வீசினர் கொன்றனர்  மாடுகளை!!

மாந்தரும் மண்ணொடு மண்ணாய் அழிந்ததை
எண்ணி உகுத்திடக் கண்ணீரிலை! -- அங்கு
போந்தயெண் பத்தைந்து மாட்டுக்கும் கண்ணீரை
வாங்கிட வேணுமே போய்இரவல்.

ஆட்டுக்குக் காட்டிய ஈவிரக் கம்பெரு
மாட்டுக்கும் மாதவன் காட்டவில்லை -- எனப்
பாட்டுக்குக் கொண்டுபோய் மாட்டின் முதுகினில்
பாய்ச்சினர் வான்குண்டு பாருங்களே!

தமிழும் கடமையும்



(கலித்தாழிசை)





ஒவ்வொரு காலையும்
ஒருமணி நேரம்
ஆகிலும் தமிழ்நூல் ஓதிடுவீர்;
எவ்வழி செல்வ
தாயினும் ஒருபுத்
தகமே கொண்டு
செல்லுதல் அதுகடமை! 1

படிப்ப தனைத்தும்
பைந்தமிழ் ஆக
பார்த்துப் படிக்க முனைந்திடுவீர்!
துடிப்பது நெஞ்சம்
அனைத்தும் தமிழ்தமிழ்
என்றே துடித்திடப்
பார்ப்பீர் அதுகடமை! 2

பிறமொழி கற்றுப்
பெரும்பயன் கொள்வீர்
பேதைமை யாமே அவைவெறுத்தல்.
திருமொழி தமிழே.
திசைபல செல்லினும்
இருத்துவிர் மார்பினுள்
தமிழை அதுகடமை! 3

ஆக்கிய நாள்



post Jan 22 2008,