வெள்ளி, 12 டிசம்பர், 2008

நிலநூல் அறிவு

களப்போர் நிகழ்வுகளைக் காதாற் பெறினும்
எழுத்தாற் படித்திடினும் என்ன --- உளத்தாலே
எந்தவிடம் என்ன இனிநடக்கும் என்றுணரச்
சொந்த நிலஅறிவின் றேல்.

இன்பகாலம் இனி வருமோ?

வாழ்வதற் கேற்ற சூழல்கள் அமைந்த
கூடும் ஒவ்வொரு குருவிக்கு முண்டாம்;
வாடிய காலம் இருப்பினும் இன்பம்
கூடிய காலமும் வந்திடும் அன்றோ?
ஏற்ற இறக்கம் இயல்பே வாழ்வினில்!
ஆற்ற இனிதாய்த் தொடருதல் அரிதே.
குமுறிய கடலால் குமரி மூழ்கித்
தமிழ்நிலம் சுருங்கிய கால முதலாய்
இழந்தவை பற்பல; இனித்தவை பற்பல.
இன்ப காலம் இனிவரும்; துன்பமும்
தொலைந்திடும் அந்நாள் எந்நாள்?
அலைதுயர் இலாது தமிழர் வாழவே!

வியாழன், 11 டிசம்பர், 2008

படிக்கும்போதே மறைந்த இணையக் கட்டுரை.

காகிதத்தால் ஆனதொரு நூலென் றாலோ
கைதவழும் கண்படிக்கும் போதில் ஓடிப்
போகுமென அஞ்சிடவே வேண்டா நாமும்
பொழுதெல்லாம் வாசிப்போம் நெஞ்சம் துள்ளும்;
ஆகுமொரு நல்லிணையம் தன்னில் ஒன்றை
ஆர்வமுடன் நாம்படித்துக் கொண்டி ருக்க,
நோகவது போய்மறைந்தே மாய மாகி
நுகர்வழியும் போக்கதனை நோக்கு வீரே!