ஞாயிறு, 8 ஜூலை, 2018

முற்றுப்பெறாத சொல்லாய்வு.

சமஸ்கிருதமொழியில் உள்ள மொத்தச் சொற்களில் மூன்றில் ஒரு பகுதி திராவிடச் சொற்கள் என்பதை, பிரான்ஸ் நாட்டின் முனைவர் பேராசிரியர் (  டாக்டர்)   லகோவரி மற்றும் அவர்தம் குழுவினர் ஆகியோர் ஆய்ந்து தெரிவித்துள்ளனர். இதை  எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஏறத்தாழப் பதினெட்டு ஆண்டுகட்கு மேலாகப் பல சொற்களின் மூலங்களை விளக்கிய போதிலும்,  அந்த மூன்றிலொருபகுதியில் ஒரு சிறு தொகையிலான சொற்களையே யாம் விளக்கியுள்ளோம்.  இதற்குக் காரணம் சில வேளைகளில் சொல்லாய்வு மேற்கொள்ளாமல் கவிதை, செய்தி விளக்கம்,  கதை, சில பழஞ்செய்யுட்களுக்கான உரை முதலியவற்றிலும் ஈடுபட்டு உழைத்திருக்கின்றோம்.  தமிழுடன் தொடர்பில்லாத 
 எடுத்துக்காட்டாக,  ஈரான் மொழியுடனோ பிற மத்திய கிழக்கு மொழிகளுடனோ தொடர்புடைய சமஸ்கிருதச் சொற்களில் யாம் ஆய்வில் ஈடுபடவிலை,  ஒன்றிரண்டைத் தவிர.

ஆகவே எப்பொழுதும் தமிழ் மூலங்களையே சுட்டிக்கொண்டிருப்பது சிலருக்குச் சந்தேகத்தையோ சலிப்பையோ உண்டாக்கி இருக்கலாம்.  அதற்கு
உண்மையான காரணம், இலக்கக் கணக்கில் உள்ளவற்றில் சில ஆயிரங்களைக் கூட நாம் நிறைவு செய்யவில்லை என்பதுதான்.

தமிழினுடன் தொடர்பற்ற சொற்கள் பல உள்ளன.  அவற்றுக்கு நாம் போகவில்லை.

வேறு நண்பர்கள் அவற்றுள் உட்புகுந்து உழைக்கலாம்.

சனி, 7 ஜூலை, 2018

தாழ்வரு பொருள்கள்: தாவரம், தாபரம்.

கேரள மொழியில்  "கீழே" என்பதை "தாழ"  என்றுதான் சொல்வார்கள்.  தாழ்தல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இதுவும் பொருத்தமானதே ஆகும்.  தமிழிலும் கதவின் கீழ்ப்பக்கத்தில் இடப்பட்டு  அது  திறப்பதைக் கட்டுப்படுத்தும் கோலுக்கு " தாழ்க்கோல்" என்று சொல்வதுண்டு.

தாழ்க்கோல் என்பது பேச்சில் தாக்கோல் என்றும் திரிந்து வழங்கும். இதற்கு மற்ற பெயர்கள்: தாப்பாள், தாழ்ப்பாள் என்பன.  சிலர் தாப்பா என்றும் சொல்வதுண்டு.

தாழ்ப்பாள் என்பது:  

தாழ் > தாழ்ப்பு >  தாழ்ப்பு+ ஆள் >  தாழ்ப்பாள்.

முற்காலங்களில் தாழ்ப்பாள் என்பது மரத்தினால் அல்லது கட்டையினால் ஆனதாக இருந்தது.  இன்றும் சில பழங்குடிகள் வாழும் சிற்றூர்களில் மரத்தினால் ஆன தாழ்ப்பாள் இடப்படுவதுண்டு.

தாழ இடப்படும் கோல்போல் இன்னும் பாதுகாப்பாக மேற்பக்கத்திலும் கதவில் ஒரு கோல் இடப்படுவதுண்டு.  இதற்கும்  "தாழ்ப்பாள்"  என்றுதான் பெயர்.  இதற்கு மேற்பாள் என்று பெயர் ஏற்படவில்லை. இதற்கு ஒரு புதுப்பெயர் தேவையற்றது என்று மக்கள் கருதிவிட்டனர்.  தாழ் என்ற சொல்லில் உள்ள இடக்குறிப்பைக் கருத்தில் கொள்ளாமல் தாழ் இருந்தாலும் மேலே இருந்தாலும் தாழ்க்கோல் என்று குறித்தால் போதுமானது என்று முடிவு செய்தனர்,  அச்சொல்லினைப் பயன்படுத்துவோர்.

இப்படி மொழியில் பயன்படுத்துவதை இலக்கணம் தவறு என்று ஒதுக்குவதில்லை. அந்தப் பொருளைக் குறிக்க ஒரு சொல் வேண்டும். அது தாழ்க்கோல் என்று இருந்தால் என்ன?  டுங்டோங்க்  என்று சீனச்சொல்போல் இருந்தால் என்ன? இன்றிலிருந்து நான் டுங்டோங்க் என்று சொல்லும்போதெல்லாம் நீ தாழ்க்கோலைக் குறிக்கிறேன் என்று தெரிந்துகொள். அதற்கு வேறு பொருளில்லை என்று வரையறுத்துவிட்டால் அதுவும் கடைப்பிடிக்கப்படுமானால் அது அதற்குப் பெயர்.  அவ்வளவுதானே. ஒரு மொழியின் நோக்கம் என்பது நன்றாகவே நிறைவேறிவிட்டது அன்றோ? டுங்டோங்கை விடச் சிறந்த சொல் உலகில் வேறில்லை. இப்படி ஒவ்வொரு சொல்லும் எதைக் குறிக்கிறது என்று வரையறுக்கப்பட்டதுதான் மொழி எனப்படுகிறது. பேசுவோரிடையே ஒவ்வொரு மொழியிலும் ஓர் வரைவறவுள்ள ஒப்பந்தம் இருக்கிறது, அது எழுத்திலில்லா ஒப்பந்தம். அதைக் கடைப்பிடிக்கின்றனர். அதனாலும் மொழி வாழ்கிறது.

தாழ் என்ற சொல் தாழ்விடம் குறிக்காமல் மேலிடத்தையும் உளப்படுத்துமாயின் அச்சொல் தன் வரையறையை மீறிப் பொருள் விரிந்தது என்பதை இலக்கணம் ஒப்புக் கொள்கிறது.  ஒரு காரணத்தால் அப்பெயரில் "தாழ்" போய்ப் புகுந்தது.  அப்போது அதற்குக் கீழ் என்று பொருளாய் இருந்தது,  அப்புறம் அது மேலையும் குறிக்குமானால் அந்நிலையில் அது காரண இடுகுறி  ஆகிவிடுகிறது.  அறவே காரணம் அறியமுடியாத பெயர்களும் மொழியில் உள்ளன. அவை வெறும் இடுகுறிகள் எனப்படுகின்றன.

சொல்லாய்வின்  மூலம் முன்னர் காரணம் அறியப்படாத பல சொற்களின் பொருளை நாம் இன்று கண்டு மகிழ்கிறோம். இப்படி அறிவதன்மூலம்  ஒரு பொருள் உண்மையில் எதைக் குறிப்பிடுகிறது என்று நமக்கு ஏற்படும் மாறாட்டத்தை மாற்றிக்கொண்டு சொல்லினைத் தக்கவாறு வாக்கியங்களில் பயன்படுத்தச் செய்கிறோம்.  நம் எழுத்துத்திறன் மேம்படுகிறது. கருத்தறிவிக்கும் நம் மொழியின் நோக்கமும் செவ்வனே நிறைவடைகின்றது.  இனி வரும் புதிய பொருள்களுக்கும் எப்படிப் பெயரிடலாம்,  பெயரிடுவதில் என்னென்ன உத்திகளையும் தந்திரங்களையும் கையாளலாம் , எப்படி இனிய சொற்களைப் படைத்து  இன்புறுத்தலாம் எனப்  பல்திறன் அடைகின்றோம்.

நல்ல பெயரானால் மக்கள் விரும்பும் மனிதராக வாழலாம் என்பதைத் தலைவர்கள் பலர் கண்டு பயன்படுத்திக்கொண்டுள்ளனர். காந்தி என்ற பெயர் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகிறது.

பாணன் என்பது ஒரு குலத்தொழிலரின் பெயர்.  பெயரில் குலம் பற்றி ஒன்றுமில்லை.  பாண் என்றால் பாட்டு.  பாடுகிறவன் பாணன். அவ்வளவுதான்.  ஆனால் இவர்கள் ஒரு குழுவினராக வாழ்ந்து குமுகத்தில் தொழில் நடத்தினர். அதனால் ஏற்புடைமை பெற்றனர். ஒரு பாணர் வடமொழிக்கு இலக்கணம் எழுதப் புகுந்தார்.  தம் இயற்பெயரால் தமக்குமட்டும் பெருமை தேடிக்கொள்ளாமல் தம் கூட்டத்தினருக்கும் பெருமை தோன்றும்படி விளங்க எண்ணினார்.  ஆகவே தம் குலப்பெருமை மேலோங்குமாறு  பாண்+இன்+இ  =  பாணினி என்று வைத்துக்கொண்டு,  பாணினியின் இலக்கணம் என்று தம்  இலக்கண நூலை
வெளியிட்டார். எழுதியோன் பாணர் குலத்தினன் என்பது இதன் திரண்ட பொருள். இவ்வியல்  இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றது.  இதேபோல் வால்மிகியாரும் தம் இனப்பெயராலே தம்மைக் குறித்துக்கொண்டு இராமயணக் காவியத்தை இயற்றினார்.  மீனவப் புலவனான வேதவியாசனும் தம் மீனவக் குலப்பெயர் விளங்க மகா பாரதம் என்று தம் நூலுக்குப் பெயரிட்டார்.  பரதவர் எனின் மீனவர் என்பது.  பரந்தது விரிந்தது அகன்றது என்றால் அது கடல். பர > பரதவர் என்றால் கடலில் தொழிலுடையோர். அவர்கள் பின் ஆட்சியாளர்கள் ஆயினர்.பாண்டிய மன்னருக்கும் கொடியில் மீன் இடப்பட்டுள்ளதையும் கருதவேண்டும்.  பண்டை இருந்தோர் பாண்டவர் எனப்பட்டனர்.  இப் பண்டை நிகழ்வுகளிலிருந்து நமக்குப் "பாரதம்" என்ற நாட்டின் பெயரும் கிட்டியது. ஆனால் காலக்கழிவினால் பரதவர், பரவை, என்பதில் உள்ள மீன் தொடர்பு இன்று மறைந்துவிட்டது.  மனித நாகரிகம் என்பது பெரிதும் கடலையும் ஆறுகளையும் வனங்களையும் சார்ந்து எழுந்ததாகும்.  இதனைத் தமிழ்ச்சொற்கள் இன்றும் காட்டுகின்றன.   சொற்களை ஆய்ந்து நாம் வரலாற்றையும் சிறிது கண்டுணர லாகும்.

ஆரியர் என்போர் இந்தியாவிற்குள் வந்தனர் என்ற கதையும் சொற்களை ஆய்ந்ததன் பயனாய்க் கூறிய தெரிவியலே ஆகும்.

 

இனித் தாழ்ப்பாளுக்கு வருவோம்.  தாழ இருக்கும் கோல்தான் கதவை ஆள்கின்றது,  அடைத்தல் திறத்தல் தடுத்தல் விடுதல் எல்லாம் அதன் ஆட்சிச் செய்கைகள்.  அச்சொல்லின் ஆள் என்பது நன்றாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது, பழைய பாட்டுப்பெட்டிகளில் இருந்த சுருள்விரி எந்திரம் தகுந்தமுறையில் சுற்றுகின்ற இயக்கத்தை ஏற்படுத்த "கவர்னர்"  என்றோர் கட்டுப்பாட்டுக் கருவையை வைத்திருந்தனர். இன்றும் வேறு இயந்திரங்களிலும் மட்டுறுத்தும் உறுப்புக்ள் உள்ளன.

தாழ்ப்பாள் என்பது தாப்பாள் ஆனது திரிபு.  ழகர ஒற்று மறைந்தது. இதேபோலத் தாழ்வரம்  ( தரையில் முளைத்து வருபவை)   ழகர ஒற்று இழந்து தாவரம் என்றாகும். இனி, வகரம் பகரமாகுமென்பதால்  தாவரம் என்பது தாபரமும் ஆகும்.

தாபரம் என்பதற்குத் தாழப் பரவும் செடிகொடிகள் என்று பொருள்.  பர என்பது பரமாகும்.  பரத்தல் :  பர+ அம் = பரம்.  தாழ்+ பர + அம் =  தாபரம்.  (ழ்)

தாழ அணியப்படுவது தாழ்வணி:  இது தாவணி ஆனது. ழகர ஒற்று வீழ்ந்தது. தாழ்மதித்தல் தாமத்தல்  ஆனது.  தாழ ( நீருடன்) மருவி நிற்பது  தாமரை என்றனர்.  தா+மரு+ஐ.

அறிந்து மகிழ்வோம்.

பிழைத்திருத்தம் பின் கவனிக்கப்படும்.

வெள்ளி, 6 ஜூலை, 2018

முகமாவு பூசிக் கவின்பட்ட சொற்கள். word cosmetics

வாஸ்தவம்:

வாஸ்தவம் என்பதை பலமுறை பேச்சில் கேட்டிருக்கிறோம்.  வாய்மை என்ற சொல்லும் அதையே குறித்தது.  என்றாலும் அது பெரும்பாலும் இலக்கிய வழக்கில் மட்டுமே உண்டு.  ஓய்வாக நண்பர்கள் வந்து பேசும்போது வாய்மை என்று சொல்வதில்லை. ஒருவேளை இலக்கியத்தைப் பற்றிய உரையாட லானால் வாய்மை என்ற சொல்லைக்  கற்ற நண்பர்கள் பயன்படுத்துவ துண்டு,

வாய் > வாய்மை.

வாய் >  வாய்த்துவம் > வாஸ்துவம் > வாஸ்தவம்.

இதில் இறுதியில் வந்த தவம் என்ற சொல்லை நோக்குங்கால், வாயினால்கூட ஒரு தவம் மேற்கொள்ளலாம்போல் தெரிகிறது!!   உயர்த்தி என்பதை ஒரு தொழிற்பெயராகக் கொண்டு இதுவரை யாரும் போதிக்கவில்லை என்று தெரிகிறது.  எல்லா போதனை இடங்களிலும் யாமில்லை ஆதலால் எமக்குத் தெரிந்தவரை இல்லை.  உயர்> உயர்த்தி என்ற சொல் நாளடைவில் ஒரு முகமாவு பூசி அழகடைந்த பெண்ணைப் போல் ஒஸ்தி என்று சிலரால் உச்சரிக்கப்படுகிறது.   உயர்த்தி இல்லையென்பது அவர்களுக்கு  ஒஸ்தி யாகவே உள்ளது. அது எவ்வாறாயினும் வாய்த்துவம்  (வாய் > வாய்த்து;  இங்கு து = உரியது உணர்த்தும்;   +அம் என்பது விகுதி. ) பின் வாஸ்தவம் ஆனது. துவம்> தவம் . தவமொன்றுமில்லை; து அம் > துவம் தான்.  இரண்டு விகுதிகள்.

வாய்த்துவம் என்பதே முன்வடிவு ஆதலின்  வாஸ்தவம் என்பதை வாய்த்துவம் என்றே எழுதினால்தான் என்ன?  வாய்மை என்ற செந்தமிழ்ச் சொல்லின் "வாய்" என்ற அடிச்சொல் கொண்டுதானே  வாய்த்துவம் எனற்பாலதும் அமைந்துள்ளது காணீரோ?

 நெய்த்தோலி:

நீங்கள் நெய்த்தோலி சாப்பிடுவதுண்டோ?  அப்படியானால் நெய்த்தோலியில் யகர* ஒற்றுத் தொலைந்து,  நெத்தோலி > நெத்திலி ஆனதை  வாய்த்தி > வாத்தி   (teacher ) யுடன் ஒப்பிட்டு மகிழ்ந்துகொண்டே சாப்பிடுங்கள்.

ஓகாரம் இகரமாகுமோ?  ஆகாது என்றால்  நெய்த்தோலியின் தோ(ஓ) பின் தி (இ) ஆனதைப் பார்த்து ஆகுமென்று உணர்வது கடனே.

உடல்,  தேகம். :

நம் உடலின் உள்ளுறுப்புகள் மேலாடைபோல் தோலைப் போர்த்திக்கொண்டு  , அதாவது உண்மையில் தோலை உடுத்துக்கொண்டிருப்பதால்,  அது உடலாகிவிட்டது.  உடு> உடல்.  அல் என்பது ஈற்று விகுதி,  என்புதோல் போர்த்த இவ்வுடல் தேய்வு கண்டு தேவு காணும்.  தேய்ந்து அழிவதாகலின், அது தேய்+கு+அம் =  தேய்கம் ஆனது.  வழக்கம்போல் இதுபோலும் சொற்களில் யகர ஒற்று வீழ்தலின்,  தேகம் என்று இருக்கை கொண்டது.   யாக்கை நிலையாமையைத் தமிழ் நூல்கள் பல்லாற்றானும் கொணர்ந்து நிலைநாட்டுகின்றன.  இதன் பின்னணியில் அமைந்த சொல்லே தேகம். ஏனை மொழியிலும் சமயங்களிலும் வலியுறுத்தப்படுவதும் இதுவாகும்.  சொல்லமைந்த தொடக்கத்தில் இது இறுதியழிவு வலியுறுத்தும் சொல்லாதலின் பெரிதும் வழங்கப்படவில்லை.  ஒரு மணமகன் புதுப்பெண்ணைத் தொடும் காதல் காட்சிக்கு இச்சொல் பொருந்தாத சொல்லே.  காரணம் ஆயிரம் காலத்துப் பயிரான மணத்தைக் குறிக்க எழும் காட்சியில் மங்கலமற்ற எண்ணத்தை அது முன்னிறுத்துகிறது.  காலம் செல்லச் செல்ல அதன் தேய்வு அல்லது அழிவுக் கருத்து  மறைந்தபின்னரே இது வழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதே பொருத்தமாகும்.  இச்சொல் ஏனை மொழிகளில் ஏறிய காலை இம் மனத்தடை இருக்கவில்லையாதலால் அவ்விடங்களில் இச்சொல் நன்`கு  ஏற்றுக்கொள்ளப்பட்டதென்று கருதுதலே உண்மையோடு ஒட்டியதாகும்.

இராமலிங்க அடிகள் இச்சொல்லை நன்`கறிந்து பயன்படுத்தியுள்ளார். அவர்:

"உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உன்னை மறவேன்..."

என்று இறையிடம் இறைஞ்சுகின்றார்.  அழிவு பற்றிக் கூறுமிடத்து இச்சொல் பெய்யப்பட்டிருப்பதால் மிகுந்த பொருத்தமுடைத்தென்று ஒப்புதலே அறிவாம்.

இந்த உள்ளுறுப்புகள் யாவும் தோலை மேலாகப் போர்த்திக்கொண்டதனால் உடலாகியும்   தேய்ந்தழிதலால் தேகமும் ஆனது.   இன்னும் சொல்லப்போனால் ய ர  ல வ ழ ள ஆகியவற்றில் ஒற்றுக்களும்  பிற ஒற்றுக்களும் கெட்டுத் திரிசொற்களும் அமையும்.   எவனாவது வந்து சொல்வான் தெரிந்துகொள்ளலாம் என்றிருக்காமல் சொந்தமாகவே கண்டுபிடியுங்கள். அதுவே நன்று.

உடலின் மேற்புறத்தையே நாம் கண்டு அதனை உடல் என்று அறிகிறோம்.  அதற்கு அழகுப் பூச்சுக்களும் வாசனைகளும் தடவுகின்றோம்.  அதனால் மேனி என்ற சொல் இத்தகு சூழ்நிலைகளில் பொருத்தமுடைய சொல்லாகும்.  சந்தனத்தைத் தேகத்தில் பூசிக்கொண்டாள், யாக்கையில் பூசிக்கொண்டாள் என்பதை விட  மேனியிற் பூசிக்கொண்டாள் என்பது பொருத்தமான சொல்லாட்சியாகும்.   மேல்> மேலி> மேனி என்றமைந்தது இது.  "மேல"  என்ற முற்றுச்சொல் மேன என்றே தொல்காப்பியனாரால் ஆளப்படுகிறது.  லகரம் னகரமாவது சொன்னூல்படி அமைந்தது ஆகும்.  பிற மொழிகளிலும் இத்திரிபு உள்ளது. மேலோன் என்ற சொல்லும் மலையாளத்தில் மேனோன் எனவும்,  மேலன் என்பது மேனன் எனவும் வருமென்பதறிக.

மேனகை என்ற பெயருக்கு வேறு சொல்லமைப்பைப் பிறர் தந்திருப்பினும்,  மேல்+நகை = மேனகை எனவரும்;  அது ஆகுபெயராய் மேலான நகை அல்லது சிரிப்புடையாள் என்று பொருந்தும் பொருள் தரும்.  ஆனால் இதில் வரும் "ன" என்பது புணர்ச்சியினால் தோன்றியதாகும். மேனகை என்பது கிட்டாதவருக்கு மேல் வருத்தம் தருபவள் என்றும் தமிழ்வழிப் பொருள் கூற ஒக்குமெனினும் அது ஈண்டு சொல்லப்படாது.

யாக்கை என்பது யாத்தல் அல்லது கட்டுதல் என்ற பொருளி லமைவுற்றதாகும். யா+கை என்று கூடிய இச்சொல்லின் கை என்பது தொழிற்பெயர் விகுதி.

சோகம்,  மேகம், வாத்தியம்,

சோர்தல் என்பது உடல் சோர்தல், மனம் சோர்தல் என்றிரு வகை.இதைக் குறிக்க எழுந்த சொல்லே சோகம்.  சோர்+கு+அம் =  சோர்கம் ஆகி, பின் ரகர ஒற்று வீழ்ந்து சோகம் ஆயிற்று. (  ரகர ஒற்று ).   மேலிருப்பது மேகம். மேல்+கு+அம் =  மேகம்  ஆயிற்று.  (  லகர ஒற்று ).   பழங்காலத்தில் இசைக்கருவிகளை எல்லாம் ஒன்றாக வைத்து இயக்கி  மணவிழா போன்றவற்றில் வாசித்தார்கள்.  இயம் என்றாலே இசைக்குழு.   வாழ்த்திப் பாடி இசைத்தால் அது வாழ்த்தியம்.   அது பின் திரிந்து வாத்தியமானது.  (  இங்கு ழகர ஒற்று வீழ்ச்சி ).  பின்னாளில் செத்தவீட்டில் வாசித்தாலும் வாத்தியம் ஆகிவிட்டது.  இது ஒரு சிக்கன நடவடிக்கை.  வாழ்த்தி இசைக்கும் கருவிகள் வாழ்த்தியமானால் அழுது இசைக்கும் கருவிகள்  அழு+ இயம் =  ஆழியம் என்றோ சோர்+கு+ இயம் = சோர்கியம் > சோகியம் என்றோ ஒரு சொல்லை நம் மக்கள் படைத்துக்கொள்ளவில்லை. உள்ள சொற்களையே பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர்.   பிழைத்த வீட்டில் தேநீர் அருந்தினால் அது தேநீர்; இறந்த வீட்டில் தேநீர் அருந்தினால்  அதுவும் தேநீர்தான். இன்னொரு சொல் தேவை இல்லை.  வாழ் என்பதில் ழகரத்தை எடுத்துவிட்டால் போதும் என்று விட்டது ஒரு கெட்டிக்காரத் தனம் என்றே நாம் சொல்லிக்கொண்டிருப்போம்.

ஆனால் எல்லா இசைக்கருவிகளும் பங்குகொள்ளும்படியாக முழுமையான குழுவாய் வாசிப்பது ஆரியம் என்று சொல்லப்படும்.  அப்போது ஆடும் கூத்து ஆரியக் கூத்து.   ஆர் = நிறைவான; இயம் = வாத்தியங்கள் அமைந்த;  கூத்து = நடனம்.  ஆரிய என்பது   ஆர் இய(ம்).  மனிதர் எவரையும் குறிக்கவில்லை.

ஆரிய என்பது உயர்ந்தோன்; அறிவாளி என்ற பொருளில்தான் இந்திய நூல்களில் காணப்படுகிறது.  அதுவே சரியான பொருள்.  ஆர்   -  வந்தார் போனார் என்பதும் தமிழில் பலர்பால் விகுதியாய், இன்றளவில் பணிவுப் பன்மையாய் அன்றோ பயன்படுகிறது.   ஆர்தல் என்பது நிறைவை அன்றோ குறிக்கிறது.  வளமார் தமிழகம் என்றால் வளம் நிறை தமிழகம்.   வளம் ஆர்ந்த தமிழகம்;  வளம் ஆர்கின்ற தமிழகம்;  வளம் ஆரும் தமிழகம் என்று முக்காலத்திலும் வரும்.  அறிவார்ந்த விளக்கம் இதுவே.

ஆரிய என்பது இனப்பெயர் அன்று.  வெளிநாட்டான் எப்போதும் வந்துகொண்டிருப்பான்;  முன்னும் வந்தான். இப்போதும் வருகிறான்; இனிமேலும் வருவான்." வந்தவன் "  எல்லாம் அறிவாளி என்று ஒப்புவீரோ?  அவர்களில் எத்தனை அறிவாளிகள்?  எத்தனை மடையர்கள்?

ஆரியமும் ஆசிரியமும்.

ஆரியன் என்ற சொல்லும் பலவழிகளில் உருப்பெறும்.   எடுத்துக்காட்டாக ஆசிரியன் என்பதன் இடைக்குறையாக  ஆரியன் என்றாலும் அச்சொல் வந்துவிடுகிறது.  வாத்தியார் அறிவாளி என்பதை  ஆசிரியன் அறிவாளி என்று மாற்றிச்சொல்லி,  ஆசிரியறிவாளி என்றாக்கி,  அறிவாளி என்பதற்குப் பதிலாக ஆசிரியாரியன் என்று சொல்லி,  ஆசிரிய+ஆரியன் = ஆச்சிரியார்யன் என்றும் பின்னும் திருத்தி ஆச்சாரியன் என்று குறுக்கினால் நல்ல களிப்பாக்குமன்றோ?
ஆசிரிய மேதகை என்பதினும் வேறன்று  அது.

எழுத்துக்களைத் திருப்பிப்போடும் தந்திரம்

 பல சொற்கள் வெறும் ஏமாற்றுவேலைகளாகியுள்ளன என்று எண்ணத்தக்கவை யாகலாம், இவற்றில் எப்படி விளையாடியிருக்கின்றனர் என்று உணர்ந்தால் உலக முற்றுகாறும் ஆனந்தமாய் இருக்கலாம்.  எ-டு:  காவல் (கா)   ஆகும்  (ஆ)     இல்லம் (  இல் ) >   (திருப்பிப் போட்டு)  இல்+ஆ+கா =  இலாகா.  நடவடிக்கைகள் தொடருமாறு அத்தொடர்வினைக் காக்கும் இல்லம் : இலாகா. .   இது எந்த மொழிச்சொல் என்று கேட்டவன் மடையனானான்.  அவனை ஏமாற்றியவன் அறிவாளி,


*பிழைத்திருத்தம்.

பிழைகள் பின் திருத்தம் பெறும்.