ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

உலைதலும் விரிசலும். திரிபுகள்.

 நம் இடுகைகளில் தகர சகரத் திரிபுகள் பல முறை சுட்டிக் காட்டப்பெற்றுள்ளன. பெரும்பாலும் தனித்துவம் வாய்ந்த கிரகமாகச் சனிக்கிரகம் முன்வைக்கப்படும். அது தனி என்னும் சொல்லின் திரிபாகக் காட்டப்பெறும்.  சனி என்பதை தமிழல்லாத சொல்லாகக் கருதவில்லை யாதலால் இவ்வாறு காட்டுவோம். சனிக்கு மட்டுமே ஈசுவரப் பட்டம்.

மொழியிடைத் திரிபுகளில் வதிதல்  வசித்தல் என்பனவும் உள.  வதி> வசி.  வசி என்பதனுடன் தல் என்னும் தொழிற்பெயர் விகுதி சேருங்கால் தல் முன் இரட்டிக்கும்,  இதுபோல் புசித்தல் என்பதும் இரட்டித்தது.

இத்தகைய திரிபுகள் வழக்கில் பல.  எடுத்துக்காட்டு:  புதிது > புதுசு,  பெரிது > பெரிசு,

சிறுசு என்பது  சிசு என்றும் இடைக்குறைந்து,  சிறுகுழந்தை என்றும் பொருள்படும். சிசு என்பது பூசைமொழியில் சென்று வளமான வாழ்வு பெற்றுத் தனித்துவம் அடைந்தது,

இதையும் மனத்தில் இருத்துக.

உலைதல் >  உலைசல்.  

இன்னொன்று:   விரிதல் >விரிசல்.

குழுவினரிடை ஏற்பட்ட விரிதல்களை விரிசல் என்றே குறிப்பது வழக்கம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர். 

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

அந்தகாசுரர் என்ற சொல்லாக்கம். அறிபொருள்.

 இந்தச் சொல்லின் உள்ளுறை பகவுகளைத் (components  ) தமிழின் மூலமாக அறிந்துகொண்டு, மற்ற செய்திகளையும் கண்டு இன்புறுவோம்.

இவ்வாறு அறியுமுகத்தான்,  அந்தகம் என்பது முன்வந்து நிற்கின்றது. அந்தகம் என்பது பல்பொருள் ஒரு சொல்.  இருள், முடிவு,  அழிவு,  பார்வையிழத்தல், இன்னும் விளக்கெண்ணெய் செய்யும் ஒரு செடிவகையையும் குறிக்கும், இதற்கு ஆமணக்கு என்றும் சொல்வர்.  இந்தப் பெயரில் ஒருவகைக் காய்ச்சலும் இருந்தது என்பர். இன்னுமிருக்கலாம்.  இக்காய்ச்சலில் ஒரு வலிப்பும் ஏற்படும் என்கின்றனர். இதைச் சன்னி / ஜன்னி என்றும் சொல்வர் என்று தெரிகிறது. இதை மருத்துவ நண்பர் ஒருவரிடம் கேட்டறிக.

கோவிட் 19ம் இது போன்றது என்பர். இதை மகுடமுகி  என்று மொழிபெயர்த்துள்ளது நீங்கள் அறிந்தது.

அந்தகம் என்ற சொல்லில்,  அந்து மற்றும் அகம் என்ற பகவுகளும் உள.

அந்து என்பது அன்+ து என்று பிரியும்.  அன்று என்பதும் இவ்வடிச் சொற்களால் ஆனதுதான்.  இவ்விரு பகவுகளில்.  ஒன்று தமிழ்ப் புணரியயலின் படியான சந்தி ஆகும். மற் றொன்று சொல்லமைப்புகளில் காணப்படும் இன்னொரு வகைப் பகவு.  அதாவது:

அன் + து >  அந்து   ( இது முன்+ து > முந்து என்பது போன்றது).

அன்+ று >  அன்று  ( முடிந்துபோன ஒரு நாள்).

அன்றுதல் என்ற வினைச்சொல்:  பகைத்தல், கோபித்தல், மாறுபாடுதல் என்பன பொருள்.   இவை இருந்து நிலை முடிந்ததைக் காட்டுவதால்,  முடிந்துபோனதையே உட்பொருளாய்க் காட்டுகிறது.

அன், அண் என்பன நெருங்கிச் செல்லுதல் குறிக்கும் அடிச்சொற்கள். நெருங்கிச் செல்லுதல் மேலும் நெருங்க இயலாமையில் முடியும். சுவரை நெருங்குவோம். அப்பால் போக இடமில்லையில்லை என்றால் முடிதல் நிகழும்.

அன்: நெருங்கி இருப்பது அன்-பு  (அன்பு). அதே அடிச்சொல்தான்.

ஆகவே, அன்+ து + அ + கு என்னின்,  அந்தகு அம் > நெருங்கிச் சென்று அங்கு முடிதல் என்று கண்டுகொள்க.

அந்தகம் என்பது, மேற்கண்ட காரணத்தால், இறுதி முடிவு என்று பொருள்தரும்.

தமிழ், சமத்கிருதம் ( சமஸ்கிருதம்) பெரிதும்  ஒரே அடிப் பகவுகளையே உடைய மொழிகள் - சில வேறுபாடுகள் ஆங்காங்கு காணப்படலாம், அவ்வளவுதான்.

அன் து அ கு அ  ஆர் அம் - அந்தகாரம் என்பது இருள். பகலவனின் காய்தல் முடிந்த நிலை, இறுதியைக் காரம் என்றும் காட்டுவதுண்டு. இவ்விறுதி வசதியாக குறிக்குமாறு ஆகும். ஒவ்வொரு சிறு பகவுக்கும் பொருள் கொடுத்து வாக்கியமாக்கி அறிக.

அந்தகாசுரன்  ஓர் அசுரன், கங்கைத் தாயின் பற்றன் ( பக்தன்). கங்கையைக் கடத்தி  அதனால் பயன்பெற நினைத்தான்.  தனது ஆட்சிப் பகுதி அல்லாத நிலங்களுக்குத் தண்ணீர் தர மறுத்து, அதைத் தன் அரசுக்குரிய பகுதிகளில் பயன்படுத்திக் கொண்டான்.அந்தக் காலத்தில் வரலாற்றை எழுதியவர்கள் உண்மையான போர்வீரர்களையும் அவர்கள் வேண்டிச் சென்ற பலன் களையும் வெளிப்படையாகச் சொல்லாமல் மறைவாக வரைந்தனர். பெயர்களை நிகழ்ச்சிகளை விடுகதைபோல் மறைத்து எழுதினால் அதனால் தொல்லை விளையாது..  வாதங்களும் பதில் வாதங்களும் ஏற்படமாட்டா.  கங்கையைக் கடத்துவது என்றால் கங்கைத் தண்ணீரை ஓட்டத்தை மாற்றி எடுத்துக்கொள்ள நினைப்பது. இது ஒரு நீரோட்டத்தைப் பற்றிய தகராறு. இதைப் புரிந்துகொள்ளும் திறன் இல்லாதவர்கள் பலராவர். அசுரன் என்றால் கெட்ட அரசன். கெட்ட அரசன் என்னாமல் தொல்லை விளத்தவனை -   "முடித்துவிட நினைத்த"  என்ற பொருளில் அந்தக என்றும் தீயவன் என்ற அர்த்தத்தில் அசுரன் என்றும் எழுதினர்.

பலவித மறைத்தெழுது முறைகள் உலகில் உள்ளன. மோர்ஸ்கோடென்பதும் ஒரு மறைப்புமுறைதான்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

ஓர் ஐஸ் மூலிகை உணவு


 



நிறச்சீனி  சிவப்பாய்  நெருங்க ஊற்றி
உவப்புடன் உண்ணும் மூலிகை வேர்கள்
குளிர்க்கட்டி அரைத்துக் குழம்பிய வாறே
பளிக்குப் பச்சைமேற் செம்பவ  ழம்போல்



ஊற்றிப் பரப்பித் தாகம்  ஆற்றவும், 
மாற்றம் வேண்டாச் சுவையின தாகி
காற்றினிற் கரையினும் சுவைக்கனி தோற்க
ஊட்டும் கரண்டிகள் பாட்டென ஒலிக்க

செங்குதெங் கென்னும்  சீன உணவு
தங்கா தினியெனத் தானுண் டனமே. 
வேர்கள் இவையோ விளைத்திடும் நலமே
யார்க்கும் நலமென் றார்த்தனர் வைத்தியர்
ஆய்ந்தால் உமக்கும் நலமெனில்
பாய்ந்திவண் நண்ணிப் பருகுவிர் நீரே.


பொருள்:



நிறச்சீனி --- பல நிறங்களில் வரும் (நிறச்) சீனி

சிவப்பாய் -- சிவப்பாய்த் தேர்ந்தெடுத்த
 நெருங்க ஊற்றி -- அணுக்கமாகத் தோய்த்து, 
உவப்புடன் உண்ணும்  -- மகிழ்வுடன் சாப்பிடும்
மூலிகை வேர்கள்,  ( இவை சீன மூலிகை வேர்களின்  அரைப்பு)

குளிர்க்கட்டி அரைத்துக் குழம்பிய வாறே,
-
பளிக்குப் பச்சையின்மேல் ---- பளிங்கு போன்ற பச்சை நிறம்
செம்பவழம்   போல்  --  செம்பவழத்துடன் ஒப்பிடும்படியாக.

ஊற்றிப் பரப்பித் தாகம்  ஆற்றவும், 
மாற்றம் வேண்டாச் சுவையின தாகி - இதுவே போதும் என்ற சுவையுடன்,

காற்றினிற் கரையினும் சுவைக்கனி தோற்க --- குளிர்க்கட்டி கரைந்துவிட்டாலும்  பழத்தின் சுவைபோல,

ஊட்டும் கரண்டிகள் பாட்டென ஒலிக்க

செங்குதெங் கென்னும்  சீன உணவு
தங்கா தினியெனத் தானுண் டனமே. ----
மிச்சம் வைக்காமல் உண்டு முடித்தோம்.''

தான் என்பது அசை,

வேர்கள் இவையோ விளைத்திடும் நலமே
யார்க்கும் நலமென் றார்த்தனர் வைத்தியர்
ஆர்த்தனர் - கூறினர். ஒலித்தனர்
ஆய்ந்தால் உமக்கும் நலமெனில்
பாய்ந்திவண் நண்ணிப் பருகுவிர் நீரே.

இவண் -- இங்கு

நண்ணி - அருகில் வந்து

மெய்ப்பு  பின்னர்