பராமரித்தல் என்பதென்ன என்று இன்று அறிந்துகொள்வோம்.
இந்தச் சொல்லில் "மரித்தல்" என்று ஓர் இறுதி உள்ளது.
மரித்தல் என்பது இறத்தல் என்பதைக் குறிக்கிறது என்றாலும், இந்தப் பொருள் அது தனிச்சொல்லாக வரும்போது கொள்ளத்தக்க அர்த்தம் தான். இதன் பொருளாவன: இறத்தல், சுமந்து போதல், வாய் பிளத்தல், இதில் இறுதியிலிருப்பது வாய்மொழியில் மட்டும் வரும் பொருள் எனப்பட்டாலும் இப்போது யாரும் இப்பொருளில் பேசிக் கேட்டதில்லை. இறத்தல் என்னும் பொருள் மட்டுமே இன்றும் வழக்கில் உள்ளதாகும்.
மருவுதல்> மரு + இ > மரி. இங்கு இறத்தல். ஆனால் பராமரித்தல் என்பது மரு+ இ > மரித்தல். ஒரு நிலையினின்று இன்னொரு நிலைக்கு மாறுதல் என்பதே இதன் பொருளாகும். இந்தப் பொருள் பராமரித்தல் என்ற சொல்லில் வருவது ஆகும்.
பரா என்பது பர(த்தல்) + ஆ (தல்). இது விரிந்து ஆக்கம் கொள்ளுதல் என்பதைக் குறிக்கிறது. பரத்தல் - விரிதல். ஆ- ஆக்கம் ஆகும்.
எனவே பரந்து ஆக்கம் கொண்டு மாற்றங்களை உள்ளிருத்துதல் என்பதே பராமரித்தல் என்பதன் சொல்லாக்கப் பொருண்மை ஆகும். ஒரு குழந்தையைப் பராமரித்தல் என்று சொன்னால் அதை ஒரே நாளில் கொஞ்சுவது மட்டுமன்று, நெடுநாட்களுக்குக் கொஞ்சி, அழும்போதெல்லாம் பால் கொடுத்து, குளிப்பாட்டி, ஆடைகள் அணிவித்து வளர்த்தல் என்று பொருளாகிறது. ஓர் உந்து வண்டியைப் பராமரிப்பது என்றால், தினமும் கழுவி, குப்பை ஏதுமிருந்தால் அகற்றி, பளபளப்பாக வைத்துக்கொண்டு, இயந்திரங்களை வேண்டிய காலை பழுதுபார்த்து எப்போதும் சேவைக்கு ஏற்ற நிலையில் வைத்திருப்பது என்பது பொருளாகிறது. பரவற் கருத்து, ஆக்கக் கருத்து, வேண்டிய மாறுதல்களைச் செய்வித்தற் கருத்து -- அத்தனையும் உள்ளடங்கி வருகிறது.
இப்போது பராமரித்தல் என்பது ஆங்கிலத்தில் உள்ள maintain என்பதனுடன் ஒத்துப்போகிறது எனற்பாலது கருதத்தக்கது.
இது ஒரு மிகச்சிறந்த தமிழ்ச்சொல்லாகும். தற்கால நிலைமைக்கு மிக்கத் தேவையான ஒரு சொல். எல்லா மூலங்களும் தமிழாக உள்ளன..
இன்னொரு வகையில்: பர + ஆகும் + அரு+ இ > பரா(கு)ம் அரு இ > பராமரி, பரவலான முறையிலும் ஆகும் வழிகளிலும் ஒன்றை அருகில் இட்டுக்கொள்வது என்று அதே பொருளைத் தருகிறது என்பதறிக. ஆகவே இது இரு பிறப்பிச்சொல்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.