திங்கள், 6 மே, 2024

அட்சரமும் சரசுவதியும்

 இந்நாட்களில் சரம் என்ற சொல் பெரிதும் பேசுவோரால் அருகழைக்கப்படுவதில்லை.  ஒருகாலத்து அது கவர்ச்சிச்சொல்லாய்ப் பேசுவோரிடை இருந்தது,  அட்சரம் என்ற சொல்லில் அது இருக்கிறது. இவற்றைச் சரமாக எழுதி அழகுபார்ப்பதற்குத் துணைப்பொருட்கள் சிலவே இருந்தன.  சரம் ஒரு தேவியினால் சாத்தியமாயிற்று என்று நினைத்தனர்.  அந்தச் சரம் என்ற சொல்லைப் பயன்படுத்தியே அவளையும் அழைத்து அறிந்துகொண்டனர் அவள் சொந்தமாகவே அங்கு வந்துவிட்டவள். சரத்தில் தானே தோன்றியவள் என்ற பொருட்பட அவளுக்குப் பெயரும் இட்டனர். பிறவிப்பயன் என்பதென்ன?  இதை அறியானாயின் அவன் மடையன்.   ஆனால் இவர்கள் மிக்க அறிவாளிகள். மகிழ்வுக்கோ குறைவில்லை.

பல சிறு கட்டிகளை வரிசையாக அடுக்கிக் கோத்து  ஒரு மாலை செய்தனர். வரியடுக்கில் வைத்த மாலை. அடுக்கமுறு மாலை.  ஒரு கடின ஒலியை விலக்கி ஒரு புதுச்சொல்லைப் படைத்துக்கொண்டனர்.  அந்தச் சொல் அக்கமாலை. அக்கமாலை உண்டான மகிழ்வில் எழுத்து ஒன்றை இணைத்துக்கொண்டு, அதைப் புகலுறு புனைகுமாலை என்றனர்.  அழகே அழகு. தண்டியாசிரியன் சொன்ன சித்திரகவிகள் போலப் புனைந்துகொண்டனர்.

அறுக்க அருகில் வருவதுதான்  அறுக்கரம்.   அறுக்க அறுக்க அருகி வந்து வேறு பொருள் பயக்கும்.  அறுக்க அருகில் ----   அக்கரம். அழகுறு சொல்லமைப்பு.  வர வர வர அது வருவது.  அண் அன் அனமாகும்.

புரிய நேரமாகக் கூடும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

சனி, 4 மே, 2024

பிருட்டபாகம் என்னும் உடலின் பாகம் - சொல்.

 பிறகிட்ட  -  இதை புரக்கட்டு, பெரக்கட்டு என்று நாவு பலவாறு பலுக்கும்.

பிருட்ட பாகம்.  இது மரூஉச் சொல்.  கி என்ற எழுத்து மறைந்து விட்டது  இட்ட ( இடு > இட்ட ) பாகம் என்பது உட்ட பாகம் ஆயிற்று.பிர்+ உட்ட > பிருட்ட!  பின் இது பூசை மொழியில் இடம்பெற்று,  பிரிஷ்ட, பிருஷ்ட என்று மகிழ்வாய் மெருகு இட்டுக்கொண்டு வழங்கிவருகிறது.  ற + இ சேர்ந்து ரு ஆனது இதன் ஈர்ப்பு ஆகிவிட்டது.

மொழி எவ்வாறு அழகுள்ளதாக இலங்குகிறது என்றால், இன்னொரு திரிபு பாருங்கள்:

அவையின் இடு(க்)கை >சவையின் இடுக்கை >  சவனி(டு)க்கை > சவனிக்கை.   இது மேடைக்கு இடப்படும் திரைச்சீலையைக் குறிக்கிறது. திரை விலகியபின் ஒருவன் வந்துபாடுவான். மக்கள் மகிழ்ச்சி அடைவர்.  அகரம் சகரமாகும். கடின ஒலிகள் ( டு போல)  தானே நீங்கிவிடும். கேட்பவன் கவனக்குறைவால் சொல்லில் மாற்றம்.

(ஞானயோகம்) மேவும் அவர் என்பது, பாகவதர் பாடுகையில் மே-பூங்கவ என்பதுபோல் ஒலிக்கிறது. படுதா போடும் வேலைக்காரனுக்கு நேரமில்லை. அதனால் அவனுக்கு சவனிக்கை என்று காதில் விழுந்து அவ்வாறே எடுத்துக்கொள்கிறான். இதில் மொழிக்கு ஒரு புதுச்சொல் கிடைத்துவிட்டதே.

பாவினால் மக்களைக் கவர்ந்தார்.  பா கவ(ர்ந்)தார் > பாக வதார்>  பாகவதர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

மற்றொரு வகையிலும் இச்சொல் விளக்கமுறும். இங்குக் காண்க: https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_21.html.  இருபிறப்பி ஆகும்.


தொழிலில் ஒற்றுமை

 உங்களின் வேலையை  நீங்களே செய்வதில்

உங்களுக் கோர்பெயர் நல்லது வந்திடில்

உங்கள் மனமே  நிறைவினில் நிற்கும்  

உங்களுக் காகும் உடல்நலம் ஓங்கும்,


விரைந்து முடிக்கவே  வேண்டுவ தாயின்

வேண்டிய  நற்றுணை கொள்வதும் கூடும்.

சிறந்தது  கைத்திறம் உள்ளார்  உதவிடச்

சிறப்புடன் வேலை முடித்திட வேண்டும்


புன்னகை பூத்து முரண்பா டகற்றி,

புகழுற யாவரும் ஒற்றுமை போற்றி,


மன்னர்கள் நாமென நன்மகிழ் வெய்த,

முன்னரே ஆக்கமே நண்ணுதல் காக்கவே..


(இப்பாடல் வெண்தளை பயின்று வருமாறு செப்போலோசையில் எழுதப்படுகிறது,  அடுத்த வரியில் வெள்ளோசை தழுவப்படவில்லை.)


நல்லது - நல்ல பெயரைக் குறிக்கும். மற்ற நன்மையும் அடங்கும்,

ஓர் பெயர் - ஒரு பெயர். கவிதையில் ஒரு என்று எழுதவேண்டியதில்லை

இலக்கணம் விலக்கு அளிக்கிறது,

சிறந்தது கைத்திறம் =  கைத்திறம் என்பது சிறந்தது,  அது கொண்டு

நற்றுணை - நல்ல துணை.

எய்த -  அடைய.

நன்ணுதல் -  அடைதல்

முன்னரே - இது முன்னரே காக்க என்று இணைக்க.

காக்கவே -  காத்துக்கொள்க.