புதன், 17 ஜனவரி, 2024

வாசுகி பெண் பெயர்

 வாசுகி என்பது பெண்ணின் பெயராய் தமிழில் வழங்கி வருகிறது. இந்தப் பெயர் எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கு விளக்கங்கள் பற்பல உள்ளன. இவற்றில்  ஒன்றாவது நீங்கள் உகப்பதாய் இருக்கலாம். அவ்வாறாயின் இருக்கட்டும். எமது ஆய்வின்படி இங்கு ஒன்றினை யாம் வெளியிடுகின்றோம்..

வாசுகி என்ற பெயரில் வள்ளுவருக்கு மனைவி இருந்தாள்  என்ப. இதை யாம் இங்கு தொடவில்லை. வாசுகி என்ற சொல்லை ஆய்வதன்றி வேறு குறிக்கோள் யாதுமிலது.

இந்தச் சொல்லில் வாய் என்பதும்  உகம் என்பதுமாகிய இரு உள்ளுறை சொற்கள் உள்ளன.

வாய் எனில் பல், நாக்கு முதலியவை அடங்கிய உறுப்பு. இதற்கு இடம் என்ற பொருளும் உள்ளது.   தோற்றுவாய் என்ற சொல்லில் வாய் என்பது இடம் என்ற பொருளைக் கொண்டுள்ளது.

உகம் என வேறு சொற்களும் உள்ளன.  அவை: உகம் = யுகம்;  உகம் - உலகம்; பூமி;  உகம் - பாட்டு;  இவை இங்கு கருதப்படவில்லை.

உகத்தல் வினையில் உக என்பது விரும்பு   எனும்  பொருளது. உகி என்பது விரும்பும் ஒருவரைக் குறிக்க வழங்குதற்குரியது. உக+ அம் > உகம்,  உகம்+ இ > உகி.  அம் கெட்டது.

வாய்+ உகி > வாயுகி> வாசுகி ஆகிறது.

யகர சகர வருக்கத் திரிபு.  யு>சு

ஒப்பு நோக்க,  எ-டு: வாயில் - வாசல். 

பேச விரும்புகிற பெண் என்பது பொருளாய்க் கொள்ளலாம். வாழ்ந்த இடத்தை விரும்பிய பெண் என்பதும்  ஏற்புடைத்தே ஆகும்.

பெண்ணின் பேச்சில் சுவை காண்போரும் உளர். ஆதலின் இப்பொருளும் ஏற்றதுதான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


செவ்வாய், 16 ஜனவரி, 2024

அனுகூலம் சொல்.

 இன்று "அனுகூலம்" என்ற சொல்லை நோக்குவோம்.

கூலம் என்பது உணவுப் பொருள்களில் தானியங்களைக் குறிக்கும்.  தானியம் என்பது, அரசனுக்குத் திறையாகச் செலுத்தினது போகத் தனக்குரியவையாகக் குடியானவன் ஒருவன் சேமித்து வைத்திருக்கும் நெல், கம்பு, சோளம் , வரகு என இன்னபிறவுமாகும். தான்+ இயம்.  தான் முயன்று தனக்கென "இயற்றுவித் திருப்பவை" என்பது பொருள்.  " தனக்கு இயன்றவை" என்றும் வரையறுக்கலாம். கூலம் எனில் சேர்த்து வைத்தவை என்பது சொற்பொருள். நாளடைவில் இதன் பொருள் கூலங்கள் எனப் பொதுப் பொருள் பயந்தது. (அரிசி, கம்பு,  சோளம், என இன்னும் உள்ளவற்றைக் குறிக்க வழங்குதல் )

அனுகூலம் எனின், யாது?  வீட்டில் வேறு உணவுப் பொருட்கள் இல்லாவிடினும் கூலம் இருக்குமாயின் அவற்றை அணுகிப் பசியைத் தீர்த்துக் கொள்ளலாம். பசிக்கு அணுகத் தக்கது கூலம் என்பதே  சொற்  பொருளாகும். இதிலிருந்து "உதவுவது  இது " என்பது பெறுபொருளாயினவாறு கண்டுகொள்க.

பெறுபொருள்-- derived meaning.

அன் என்பதும் அண் என்பதும் சொல்லாக்கத்தில் மாற்றீடுகள். அன்பு என்பதில் அணுக்கம் இருப்பதை அறிக.

அன்பு என்ற இடுகைப் பதிவில் விரிவு அறிக.

https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_95.html

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர் 

திங்கள், 15 ஜனவரி, 2024

பொங்கல் வாழ்த்து

1.

தங்கள் குடும்பத்தில் தாய்பிள்ளை தங்களுடன் 

பொங்கும் வளம்பெறுக இன்று.

2.

உண்கநற் பொங்கல் உளமெலாம்  பூரிக்கப்

பெண்கள்பிள்-   ளைகள் உடன்.

3.

இனிக்கும் அதுவெனினும் உண்கவே பொங்கல்;

கனிக்கோநல்  வாழைப்  பழம்.

4.  

வெல்லா  தினிப்புநீர் பொங்கலின் ஞாலத்துச்

சொல்லார்ந்த ஆசிதன் னால் .

5

தானாக உண்டலும் தீதேஇன்  பொங்கலே 

மேனாளில் இன்பம் பகிர்


6

இன்றின்பம் விட்டால் இனி இருப்பீர் ஓராண்டுக்(கு)

இன்றேயும்  உண்டல் நலம்


7

பொங்கலில்  நல்வாழ்த்துப் பெற்றார் உலகத்தார்

தங்கஉள் ளத்தில்வாழ் வார்


பொங்கல் வாழ்த்து: பொருளுரை.

 1 

தங்கள் குடும்பத்தில்  -  உங்களுடைய குடும்பத்தில்   ,   தாய்பிள்ளை - உள்ளவர் கள்,  தங்களுடன்-  உங்களுடன் , பொங்கும் வளம்பெறுக இன்று - இந்நாளில் நிரம்பி வழியும் வளத்தை அடைவார்களாக. 

2. 

உண்கநற் பொங்கல் உளமெலாம்  பூரிக்கப் 

பெண்கள்பிள்-ளைகள் உடன்

இந்த நல்ல  பொங்கலை பெண்கள் பிள்ளகளோடு உள்ள

மகிழ்வுடன் நீர் உண்பீராக.

3  

இனிக்கும் அதுவெனினும் உண்கவே பொங்கல்;  

_அது இனிக்கும் என்றாலும் உணணுங்கள்,  

கனிக்கோநல்  வாழைப் பழம்-  கனி விழைந்தால், நல்ல வாழைப்பழம் உள்ளது,  உணணுவீராக.

வெல்லா தினிப்புநீர் பொங்கலின் ஞாலத்துச் 

சொல்லார்ந்த ஆசிதன் னால் .

நல்ல வாழ்த்துதலைப்  பெற்று விட்டீராயின்,  இனிப்பு நீர் நோயும் அதற்கு அடங்கிவிடும்.

5.

தானாக உண்டலும் தீதேஇன்  பொங்கலே 

மேனாளில் இன்பம் பகிர்

 "
பொங்கலை ஒருவராக உண்டிடுதல் கூடாது.  

பொங்கலைத் தானாக உண்ணாமல் இருப்போருடன் பகிர்ந்துண்க. காரணம் பின்னாளில் அது இன்பம் தரும் சூழ்நிலைகள் உருவாகும்.

இங்கு "இன்பொங்கலே பகிர், மேனாளில் இன்பம்" என்று இயைத்துக் கொள்க.


இன்றின்பம் விட்டால் இனி இருப்பீர் ஓராண்டுக்(கு)

இன்றேயும்  உண்டல் நலம்

 இன்று விட்டுவிட்டால் இன்னும் ஓராண்டுக்குக் காத்திருக்க வேண்டுமாதலால்
இன்றே பொங்கலை உண்டுவிடுதல் நலம்.




பொங்கலில்  நல்வாழ்த்துப் பெற்றார் உலகத்தார்

தங்கஉள் ளத்தில்வாழ் வார்


பொங்கலன்று வாழ்த்துகளை நல்லபடி பெறுவீரானால். உலகத்தாராகிய நீங்கள் பொன்னான உள்ளத்துடன் வாழ்வீர்கள்.

என்றபடி.

உண்+தல் > உண்டல் : உண்ணுதல்

தங்கம்+ உள்ளம் --- தங்க உள்ளம் : பொன்னால் ஆன உள்ளம்.

அன்பர் தங்குதலுக்குரிய உள்ளம் என்றாலும் ஏற்க.

[இந்த இடுகையில் குழப்பம் விளைந்தது. இப்போது சரிசெய்யப்பட்டுள்ளது.]

வருந்துகிறோம்.


மெய்ப்பு பின்னர்.