வெள்ளி, 22 ஜூலை, 2022

காவூர்தியணி ( convoy)

 முன்னர் நம் வலைத்தளத்தில் "கன்வோய்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கேற்ற தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிப் பேசப்பட்டது.

கன்வோய் என்பதில் பாதுகாப்பு பற்றிய கருத்து வழக்கினால் அல்லது பயன்பாட்டினால் வருகிறது.  கன் (con )  -  ஒன்றாக.   வோய் என்பது பயணிப்பது என்ற பொருளதாம்.  இந்த  அடிச்சொல், வோயேஜ் என்ற ஆங்கிலச் சொல்லின் தொடர்பை உள்ளடக்கிய சொல்.

கன்வோய் என்ற இற்றைநாள் வரையறவு ( definition),  பாதுகாப்பையும் உட்கருத்தாகக் கொண்டது.

ஆகவே இதன் கருத்துகள் இவையாம்:

பாதுகாப்பு.

ஊர்தல் ( வண்டி அல்லது வாகனம் செல்லுதல்).

அணியாகச் செல்லுதல்.

இப்போது இதை மொழிபெயர்த்தால்:

"காவூர்தியணி"  என்றாகும்.

இதுவே சரியானதாகும்.

ஊர்தியணி என்றுசுருக்கியும் சொல்லலாம்.


கா - காவல், பாதுகாப்பு.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


புதன், 20 ஜூலை, 2022

பண்டைத் தமிழகத்தில் பேரிகை கொட்டிப் பிழைத்தல்.

 பண்டைத் தமிழ்நாட்டில்,  பேரிகை என்றோர் இசைக்கருவி இருந்தது.  இது ஒரு முரசு போன்றே  தட்டி ஒலியெழுப்பி மகிழ்வித்துக்கொள்ளும்-   மகிழ்விக்கும் ,ஒரு கருவியாகும்.  ஆனால் இதைக் கொட்டிப் பிழைத்தவர்கள்,  வயிறு வளர்ப்பதற்கே அதைச் செய்தனர் என்பது தெளிவு.  அதன் மூலம் அவ்விசையைக் கேட்டோரிடமிருந்து அவர்கள் ஒரு வருமானத்தைப் பெற்றனர்.  அது ஒரு நாளைக்கோ இரு நாளைக்கோ போதுமானதாக இருந்திருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.  ஆகையால் பின்னும் அவர்கள் அதைக் கொட்டி இசைக்கவேண்டியே இருந்தது.  அதனால் அவர்கள் பிழைத்தனர்.  பிழைத்தல் என்பது அது (கொட்டுதல்) ஒரு தொடர்வருமானம் தேடுதற்குரிய  நீள்செயலாய் இருந்தது  என்பது திண்ணம். 

இக்கருவியை வாசிப்பதில் இடப்பெயர்வு  வாசித்தோன்பால் இருந்தது.  அவன் ஓரிடத்தில் நின்றுவிடாமல்,  இடம் பெயர்ந்து அடித்துக்கொண்டுசென்றான்.   அதாவது பெயர்ந்து பெயர்ந்து இசைத்தான்.  இங்கு பெயர்(தல்) என்ற வினைச்சொல், பேர் என்று திரிந்தது.  இச்சொல்லே பேரிசை என்பதில் முன் நிற்கும் சொல்லாகும்.  கொட்டுவதில் எழுவது ஒலி.  அதை இசை என்றும் சொல்லலாம்.  எனவே  பேரிசை என்ற பெயர்,  நாளடைவில் பேரிகை என்று பெயர்மாற்று அடைந்தது.  இஃது திரிபு ஆகும்.

பேரிசை என்பது பெரு + இசை என்றும் பிரித்துக் கூறற்கு வசதி யுள்ள சொல்.   இவ்வசதி சொல்லிலே அமைந்து கிடப்பதால் அதையும் மறுத்தற்கில்லை. பெருமை என்ற சொல்லில் அடியுடன் புணர்த்திக் கெடுத்த மை விகுதி, இலக்கணத்திற் சொல்லப்பெறும்.  பெருமை என்ற பண்பினால் எழுந்தது என்பதை அறிந்துகொள்ள இத்தகை விளக்கங்கள் கொள்ளப்பட்டன. ஈண்டு அதன் பயன் சற்றுக்குறைவானதே.  

இப்பொருளை ஏற்றுக்கொள்வதாயின்,  இஃது  அதிக ஒலி எழுப்பிய கருவியைக் குறிக்கிறது என்னலாம்.  பல முரசுகளும் அதிக ஒலி எழுப்பும் தன்மை வாய்ந்தவையேதாம்.   பெரிது சிறிது என்பது ஒரு பொருளை இன்னொன்றுடன் தொடர்புறுத்துவதால் எழும் கருத்து.  இந்த இரண்டாவது பொருளையும் நீங்கள் கவர்ந்து கொள்ளலாம்.  இதில் மறுப்பொன்றும் இல்லை. யாம் இதை இருபிறப்பிச் சொல் என்றே விடுப்போம்.

காரிகை கற்றுக் கவிபாடாதவன், பேரிகை கொட்டிப் பிழைக்கலாம்  என்ற பழமொழி,  இதை வாசித்தவர்களின் திறனின்மையையும் ஏழ்மையையும் விளக்கவல்லதாகும்.  கவிவாணரே உயர்ந்தோர் என்ற பொருளை நீங்கள் மருவிக்கொண்டு நின்றகாலையும்  பலரின் திறனின்மையையும் ஏழ்மையையும் நாட்டின் அற்றை நிலையையும் நாம் உதறித் தள்ளிவிடுதல் இயலாமை காண்க

முரசு கொட்டும் வேலையைப் பலர் செய்தமைக்கும் பொருளியல் நிலையே முதற்காரணமாகும். மக்களின் பொருளியல் நிலை ஒருவருக்கொருவர் வேறுபடுதல் இன்றுபோலவே அன்று மிருந்தது.

எனவே,  பேரிசை >  பேரிகை   ( திரிபு)  கண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

Edit: some minor changes made. 21072022 0622


முரு ஆட்டோடிரேடிங் ( உந்துகள் விற்பனை)

  சிங்கப்பூரில் தமிழர் நடத்தும் உந்துகள் விற்பனை நிலையம் ஒண்ணே ஒண்ணு , கண்ணே கண்ணு என்று ஒன்றுதானே இருக்கிறது?  அதையும் நாம் போற்றுவோமாக.  தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது  இவ் விற்பனை நிலையம் பற்றிய ஒரு தொகுப்புரை சிங்கப்பூர் தொலைக்காட்சியில் வந்தது.  அதை ஒரு நேயர் படம்பிடித்து அனுப்பினார்.  நன்றி. நன்றி.  அதை இப்போது பதிவேற்றுகிறோம்.

கண்டு மனமகிழ்க.




அதன் உரிமையாளர், விளக்கம் கூறிக்கொண்டிருப்பது காண்க.