செவ்வாய், 10 மே, 2022

அன்னைக்குப் பாடியது

 உலகமெல்லாம்  மகிழும் நம்  அன்னைகட்கே,

உலர்விலாத நன்றியிலே ஊறுமகிழ்வே!  

பலகற்றார் கல்லாதார்  வேறுபடார்,

அன்னையன்பு முன்னெவரும் ஒருமைகொள்வார்

குலவுகுழந்  தைகளெனில் ஒன்றுதன்மை

அன்னைபாசம் என்பதிலே உலகம் ஒன்று,

நிலவுமிது  படைத்திட்ட ஆண்டவரின்

நேர்நிற்கும் பொருளொன்றோ ஞாலத்தில்லை.


உரை:


உலகமெல்லாம்  மகிழும் நம்  அன்னைகட்கே   -----   நம் அன்னையரைப் பற்றி யாரும் எழுதினாலும் பேசினாலும் நினைத்தாலும் இவ்வுலகம் மகிழ்வு கொள்ளும்; 

உலர்விலாத நன்றியிலே ஊறுமகிழ்வே!  ----  இந்த மகிழ்ச்சியானது காய்ந்துவிட முடியாத ஒரு இயல்பினதான நன்றியில்  ஊறிவருகின்ற மகிழ்வு ஆகும்.  ( அதாவது நன்றி கலந்த மகிழ்ச்சி ).  

பலகற்றார் கல்லாதார்  வேறுபடார்,----  இதில் கற்றவர், கல்லாதவர் - தெரிந்தவர் தெரியாதவர் என்று வேற்றுமை இல்லை

அன்னையன்பு முன்னெவரும் ஒருமைகொள்வார்----- தாயன்பு என்பதில் நடவடிக்கை எதுவும் பன்மைநிலை கொள்வதைக் காணமுடிவதில்லை,  ( ஒன்றான நிலையே எடுப்பர் ),

குலவுகுழந்  தைகளெனில் ஒன்றுதன்மை  ---- தாயிடம் பிள்ளை குலவுதலிலும் ஒரு வேறுபாடு இல்லை,  எந்தக் குழந்தை ஆயினும் அன்னையின் அணைப்பிலே ஆனந்தம் காண்கிறது.

அன்னைபாசம் என்பதிலே உலகம் ஒன்று,-----  அன்னை பிள்ளையின்மேல் கொள்ளும் அன்பிலும்   வேறுபாடு இல்லை;

நிலவுமிது  படைத்திட்ட ஆண்டவரின்----இதுவே உலகில் நிலவுவதாகும்;  படைப்பில் 

நேர்நிற்கும் பொருளொன்றோ ஞாலத்தில்லை.---  இதற்கு நிகராக எதையும் கூறமுடியாது, இவ்வுலகில் என்றபடி

இவற்றை எல்லாம் கூட்டிச் சொன்னால்:

அன்னையர்க்கு என்றும்இணை கண்டதில்லை.

எல்லா அன்னையர்க்கும் எம் அன்புவணக்கம்.




திங்கள், 9 மே, 2022

திருடுபவரைக் பிடிக்க




 தாமாய்  மனந்திருந்தி  தாரணி போற்றிடவே

தீமை யகல்  வாழ்வு  மேற்கொண்டு  ----- தாமுயர்ந்த

மேதக்க நல்லோரும் பல்லோர்  உளர்காண்பாய்

நாதக்க வாறுயர்த்து வாய்.


வீட்டில் நயம்பேசி நண்பாகி க்   காணாமல்

கூட்டில் புகுநாகம் போல்முட்டை -----ஓட்டுடைப்பில்

உள்ளவை  உண்பாரைக்  காண்பிடி  ஓர்படம்

உள்ளதைக் காட்டி விடும்.

உரை:

தாமாய் -  யாரும் சொல்லாமலே;  தாரணி -  உலகம்,  தாரணி என்றால் வாழ்வுக்கு அனைத்தும் தரும் அழகினை உடையதாகிய உலகம்.   தீமை அகல் வாழ்வு -  கெடுதல் இல்லாத வாழ்வு;  தாம் உயர்ந்த -   உலகில் தாம் மேன்மை கண்ட ( நல்லவர்கள் ). பல்லோர் உளர் - பலர் உள்ளனர்.  காண்பார் -  அறிந்துகொள்வார்கள்;   நா - நாவினால்;  தக்கவாறு -  பொருந்தும்படி;  உயர்த்துவாய் -  போற்றுவாய்.

நயன்  -  நல்லபடி;   நண்பாகி  -  கூட்டாளியாகி;  காணாமல் -  பிறர் அறியாமல்;   கூட்டில் புகுநாகம் -  பறவைக்கூட்டில் உள் புகுந்த நாகம்.    போல -  ஒக்க; 

முட்டை ஓட்டுடைப்பில் உள்ளவை உண்பார் -  உடைத்து முட்டையில் உள்ளதை உண்பார்,   காண் பிடி ஓர் படம் -  கண்டுவிட்டால் ஒரு படம் பிடித்து விடுங்கள். உள்ளதைக் காட்டிவிடும் -  உண்மையைக் காட்டிவிடும்,
  

நம் நந்தகோபனைக் கண்டனையோ? [கிருஷ்ண பகவான்]

 கோப்பன் என்ற சொல் இப்போது பேச்சு மொழியில் வழங்குவதில்லை. அது அயற்சொல் போல் செவிகளை வந்து எட்டினாலும், பழைய தமிழ்நூல்களில் இன்னும் கிட்டுவதே யாகும்.

இந்தச் சொல்லின் பொருள்,   போக்கிரிப்பையன் என்பதுதான்.  கண்ணபிரானும் தம் சிறுவயதில் சேட்டைகள் பல செய்தவரென்பர்.

பலரும் செய்யும் சேட்டைகளில் சில கெடுதலானவை. ஆனால் கண்ணன் செய்தனவாகச் சொல்லப்படும் சேட்டைகள் கோபியரிடைப் பின்னர் ஓர் இன்ப அதிர்வினை விளைத்தவை.  அறியாப் பருவத்தில் கொஞ்சம் வெண்ணெயை வழித்துத் தின்றது.

கோபத்தை உண்டாக்கினாலும் நல்லவனாகப் போற்றப்பட்டவன்.  ஆகவே "நல்ல போக்கிரி".

நன்+ த  கோப்பன்.  (பொருளை மேலே கவனித்துக்கொள்ளுங்கள்).

நந்தகோப்பன் >  நந்த கோபன்   ஆயிற்று.

கோப்பன் > கோபன்  இஃது இடைக்குறை.

நந்த   இது உண்மையில் நன்றான என்பதன் திரிபு.    நன் த > நந்த என்றது பிந்தி

முந்தி  என்பன போலும் ஓர் புணர்ச்சி.

இச்சொற்கள் பலவாறு உரைக்கத் தக்கவை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.