செவ்வாய், 29 மார்ச், 2022

சில காய்கறிகட்குக் காத்திருக்கவேண்டும்.

 

கொள்ளுப்பாட் டன்காலம் வீட்டுத் தோட்டம்

கொடுக்கின்ற காய்கறிகள் தம்மைக் உண்டு

வள்ளல்போல் அரிக்குவியல் வைத்து வீட்டில்

வாழ்ந்திட்ட காலம்போய் விற்க வாங்கி

எள்ளுக்கும் எண்ணெய்க்கும் ஏக்கம் காக்கும்

எழில்நாக ரிகந்தன்னை  ஈண்ட டைந்தோம்.

கிள்ளுக்குக் கீரையுமே கிட்ட வில்லை.

கீரைவரும் நேரமன்று, கிடப்போம் காத்தே.


தெருமூலை கறிகாய்கள் அடுக்கி வைப்பார்

தேடிச்சென் றாங்கவைதாம் வாங்க வென்றால்

வருநேரம் வரவில்லை வாரும் பின்னே

வாய்திறந்து இதுசொன்னார் விற்கும் அன்னார்;

ஒருபடமே எடுத்துவீட்டுக் காங்க னுப்பி

உரைபரப்பி விட்டாங்க கன்று விட்டேம்.

தருபடமே கீழுளதே பார்த்துக் கொள்வீர்

தற்காலம் முற்காலம் பாலம் அற்றோம்.


அரிக்குவியல் - நெற்குவியல் எனினும் ஆம்.

ஏக்கம் காக்கும் -  விற்குமுன் சென்று வாங்கிவிடுதல்

ஈண்டு - இங்கு

கிள்ளுக்குக் கீரை - நல்ல கீரைதானா என்று எடுத்துப் பார்த்தல்

கீரைவரும் நேரம் -  வழங்கல் வண்டி வரும் நேரும்

நேரம் ஆகுமாதலால் படம் எடுத்து அனுப்பிவைத்தோம்.

இது தற்காலம் வேறு என்பதைக் காட்டுகிறது.

வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளில் முற்காலத்தோர் போல் நாம் இல்லை..

வேறு உலகில் உள்ளோம்.  படம்:



கீரைகள் அடுக்கு காலியாய் உள்ளது. ( வழங்குவோர் இன்னும் வரவில்லை).


This line has been changed:  எழில்நாக ரிககாலம் ஈண்ட டைந்தோம்  >  எழில்நாக ரிகந்தன்னை  ஈண்ட டைந்தோம்..  இசை நல்லபடி ஒழுகுதல் பொருட்டு.


ஞாயிறு, 27 மார்ச், 2022

பசலைக்கீரைச் சாம்பாரும் பகலுறக்கமும்

 

பொடிஉரு ளைக்கிழங்கு பொரித்துவை சாப்பாட்டில் 15

கடிதரச் சுவைத்திடக் காய்முருங்கைச் சாம்பாரில் 16

இடுவத னில்பசலைக் கீரையைச் சமைத்துண்பாய் 15

படுபகல் ஒருபாயில்   பகவறியாத்     தோய்வுறக்கம்  16


குறிப்புகள்:

பொடிஉருளைக் கிழங்கு -  ஒருவகைச் சிறு உருளைக் கிழங்கு

கடிதர - கடித்துக்கொள்ள

தோய்வுறக்கம் -   ஆழ்ந்த உறக்கம்

பகவறியா -  பகுதிபடாத

இடைநீங்கா  -  என்றாலும் எழுத்துக் கட்டளை அதுவே ஆகும்.  ஆனால்

மோனை இராது.


இந்த கவியில் முதலடி மூன்றாம் அடிகள் மெய்யெழுத்து நீக்கி   15 

எழுத்துக்கள்.  இரண்டாம் நாலாம் அடிகள் அவ்வாறே  16  எழுத்துக்கள்

உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.


பசலைக் கீரை குளிர்ச்சி என்பார்கள்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



சனி, 26 மார்ச், 2022

வாழ்த்துக் கவி

 ஏறத்தாழ  ஒருவார காலத்தில் அன்பர் ஒருவருக்கு யாம் அனுப்பிய தொலைபேசி வாழ்த்துக்களைத் தொகுத்துப்  புனைந்த ஒரு "கவிதை".

நன்றாயிருக்கிறதா படித்துப் பாருங்கள்.


காலைவணக்கம் சொல்லும் தித்திக்கும் திங்கள்

காசினியில் உளவெல்லாம் முருகென்னும் அழகே

சீலமருள் குடும்பநலம் உலகமைதி பெருகி.

செந்தமிழால் அனைவருமே பணிவோம்நம் சிவனை!

மாலைமதி தோன்றுகின்ற வரையொளிரும் பகலோன்

மருவியநா ராயணனை மனம்நெகிழ்ந்து புகழ்வீர்

சோலையழ கதிலாழ்ந்து சூழுலவு தென்றல்

சொந்தம்நம தென்றினியே நன்றனைத்தும் கொள்வோம்.


இதைப் படிக்கையில் இது வாழ்த்துச் செய்தியைக் கவிதையாக்கியது  என்று ஓரளவு புரிந்துகொள்ளமுடியும்.  சூர்யநாராயணனைப் பணிவோம் என்ற வாழ்த்தை "பகலோன் மருவிய நாராயணனைப் புகழ்வீர்" என்று விரித்ததிலிருந்து உணர்ந்துகொள்ளலாம்.

முன்பு எழுதியவற்றை அழித்துவிட்டோம்.. ஏன் அழிக்கவேண்டும்? என்ற எண்ணம் தோன்றியது. நம் நேயர்களுக்கும் பகிர்ந்தளிப்போமே என்று எண்ணினோம். இங்குக் கவிதை பிறந்தது.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.