ஞாயிறு, 20 மார்ச், 2022

"பத்திரமாகப் போ" என்றால் என்ன?

 பத்திரம் என்றாலே  "  இலை " என்றுதான் பொருள்.  இப்பொருளில் பழைய நூல்களில் இச்சொல் வந்துள்ளது.  ஆனால் வழக்காற்றில் (  பயன்பாட்டில் ) பத்திரமாக என்றால் கவனமாக என்று பொருள்கொள்ளல் சரி.  எழுதி வாங்கிய ஒரு பத்திரம் காணாமற் போவதென்பது தொல்லை பல விளைக்குமாதலால், கவனம் தேவை என்பது முன்னாளிலே உணரப்பட்ட ஒன்றாம்.  ஆகவே " பத்திரமாகப் பார்த்துக்கொள்" என்றால், ஒரு பத்திரத்தை எவ்வாறு கவனமுடன் கையாள்வாயோ அவ்வாறே கவனம் கொள் என்பது பொருளென்பது சொல்லிவிளக்க வேண்டாதது என்று கூறலாம்.

இலை என்ற பொருள் இச்சொல்லுக்கு எவ்வாறு ஏற்பட்டதென்பதை நாம் விளக்கியுள்ளோம்.

இவற்றை நீங்கள் வாசித்தறிதல்  பொருள்விளக்கம் தரும்:

பத்திரம் :   https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_56.html

பத்திரம் - ஓலை:   https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_21.html

பாதுகாப்பு என்ற பொருள் ( பல சொற்கள் )  https://sivamaalaa.blogspot.com/2021/06/blog-post_23.html

பட்டை  என்பது மரப்பட்டை. இதிலிருந்து நமக்குப் பட்டையம் என்ற சொல் கிடைக்கிறது.

ஓர் இலைக்கொத்து என்பதை இணுக்கு என்போம்.

பத்திரம் என்பது பற்றி இருத்தலினால் ஏற்பட்ட பெயரென்பது விளக்கப்பட்டது.

எனவே பத்திரமாக இரு என்றால் இருந்ததுபோலவே பற்றிக்கொண்டு இரு, பற்றுதலை விட்டுவிடாதே என்றும் விரித்துணரத்தக்க சொல் ஆகும்.

பல்திறம் என்ற சொல்லும் புணர்ச்சியில் பற்றிறம் என்று திரியும்.   "பற்றிறமாக" இரு எனின், பல திறங்களோடும் இரு என்று பொருள்படும்.  இப்பொருளிலும் இவ்வெழுத்துக்களோடும் இச்சொல்லை இன்னும் எதிர்கொள்ளவில்லை.  வந்துழிக் காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்னர்.

இனிப்புநோய்க் காலில்புண் ஏற்படுதல்


 காலுக்கு வந்தரத்தம் மேலேறிச் சென்று

காயாமல் இருதயத்துள் புதிதாகி வந்து 

ஆளுக்கு வேண்டியதோர் அருநன்மை தந்தே

அன்றாடம் உடலுக்கு வலிமைதர வேண்டும்

தோலுக்குக் கீழிருந்து கருநிறமே காலில்

தோன்றுவதும் அரிப்பென்றால் துயர்தன்னை நீக்க

நாளுயர்ந்து  செல்லாமல் நன்மருந்து நாடி

நயமாக மருத்துவரை நண்ணுதலும் கொள்வீர்.


வந்த அரத்தம் >  வந்தரத்தம்.

அரத்தம் -  இரத்தம்

காயாமல்  - "வந்தரத்தம் காயாமல்" என்று இணைக்க.

அருநன்மை -  அரிய நன்மை

நாளுயர்ந்து -  காலம் கடந்து

நண்ணுதல் --  அணுகுதல்



இனிப்புநீர் என்னுமோர் இன்னல்நோய் வந்தால்

தனித்துன்பு பற்பல தம்பீ -----  இனித்தயக்கம்

இல்லாமல் போய்க்காண்க  இத்துன்பம் வந்தக்கால்

ஒல்லும்வாய் தேடேல்  நலம்.


துன்பு  -  துன்பம்.  தனித்துன்பம் - இணையில்லாத ஒரு துன்பம்.

வந்தக்கால் - வந்த காலத்தில்.

ஒல்லும்வாய் - இயன்றவழியில்

தேடேல்  - தேடுக


அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.


சனி, 19 மார்ச், 2022

கொடுமை, நேர்மை, அடிச்சொற்கள்.

 தமிழினால் விளக்கவியலாத மொழிகள் உலகில் சிலவே என்பது எம் கருத்து ஆகும். இதை வாதிட்டுக் கொண்டிருப்பதைவிட, உடனே ஒரு அயற்சொல்லைத் தமிழால் விளக்கிவிட்டு அப்பால் சென்றுவிடுதல் நன்மை பயக்கும்.

இதற்கு குறு என்ற அடிச்சொல்லை எடுத்துக்கொண்டால்,  மனம் குறுகிய தன்மை என்று கொண்டு,  அல் என்னும் தமிழ் விகுதியை இணைத்து,  "குறுவல்"  என்னும் சொல்லை உண்டாக்கிவிடலாம். கொடுமையாக நடந்துகொள்வோர் எவ்வாற்றானும் விரிந்த மனப்பான்மை உடையாரல்லர்.  ஆகையால்  குறுவல் என்று நாம் உண்டாக்கிய சொல்,  ஆங்கில மொழியில் உள்ள குருவலென்பதுடன் ஒத்திசைந்தே செல்வது காணலாம்.  டு என்னும் விகுதியைக் கொடுத்து,  "குறுடு" என்றாலும், பெரிதும் வேறுபடுதல் இல்லை. குறடு என்ற சொல்லும் தமிழில் உண்டு.

குருவல் என்ற ஆங்கிலச்சொல்,  crudelis  என்ற இலத்தீனிலிருந்து போந்ததாகவே மேலையரும் கொள்வதால்,  "குறுடு"  "குறடு" என்பவற்றினின்று ம் தொலைவில் இல்லை.

கொடிறு  -  கொறுடு என்பதில் எழுத்துமுறைமாற்று அமைப்பைக் காணலாம். வெளிநாட்டு மொழிகட்குத் தொடர்பொன்றும் இல்லாமலே இத்தகு  முறைமாற்றுச் சொல்லமைவு தமிழில் காணப்படுகிறது.

ஆங்கிலச் சொல்லமைவு, குருவல் என்பதில் கரடுமுரடான தன்மை என்ற கருத்தடிப்படையில் சொல் எழுந்ததாகச் சொல்வர்.

கொடுமை குறிக்கும் பொருண்மை,  வளைவு என்பதே.  தமிழர்  நேர்மை,  கொடுமை என்று எதிர்க்கருத்துக்களை உணர்ந்துகொண்டனர். கொடுங்கோல் என்பது கோல்வளைவு குறிக்கும். தமிழில் கோடு என்பதே வளைவு என்பதுதான். கொடைக்கானலில்  பொருட்கொடை குறிக்கும் தன்மை எதையும் கண்டுபிடிப்பதை விட,  கொடு -  வளைவு என்பதை எளிதில் கண்டுகொள்ளலாம்.  கொடு -  வளைவு, கொடு ஐ .  >  கொடை, வளைவு என்று அறிய, அங்கு சென்று பார்த்தாலும் வளைந்த மலைகள் இருத்தலைக் கண்டுகொள்ளலாம். நாம் வழங்கும் கொடை என்ற சொல்லுடன் ( நன் கொடை)   இது மாறுபடுவதாகும்.  நல்+கொடை > நன்கொடை.

நாட்டின் கொடியும் வளைந்து வளைந்து காற்றிலாடுவதுதான்.  கொடு > கொடி ஆகிறது. பண்டைத் தமிழர் ஒன்றை ஒருவற்குக் கொடுக்கும்போதும் வளைந்தே கொடுத்தனர்.  இவ்வாறு உண்டானதுதான் கொடுத்தல் என்னும் சொல்.

இவற்றைப் பின்னொருகால் தொடர்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

சில திருத்தங்கள்: 20032022 1330