வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

முன்வாழ்வைப் பின்பற்றும் இனிய புதுவாழ்வு.

 மறத்தலும் கூடுமோ மரஞ்செடி  கொடிகளை

அடுத்துமுன் அன்னவர் அடைந்துயர் வளவாழ்வு

அடுக்குயர் மாடியில் அகஞ்செலும்  நலத்திலும்

கொடுக்குபோல் பைஞ்செடிக் கொளுங்கலப்  பயிர்செய்வர்


அடுத்துமுன் அன்னவர் அடைந்துயர் வளவாழ்வு  ---

முன் இவர்கள் இருந்த இயற்கையை அடுத்த வளமான வாழ்வு;

அகஞ்செலும் -   மனம் ஆழ்ந்திருக்கும்.

நலத்திலும் -  வாழ்க்கை நலத்திலும் அல்லது உயர்விலும்

கொளுங்கலம் -   செடிவளர்க்கும் கலங்கள்

கொளும் -  கொள்ளும்.  தொகுத்தல்விகாரம்.:

கொடுக்குபோல்  -  முன்னைப் போக்கிலே போவதுபோல்


இக்கவி தொடுக்கபட்ட விதம்:  இரண்டாம் அடியின் நான்காம் சீரும்,  நாலாம் அடியின் நான் காம்சீரும், புளிமாங்காய்ச் சீர்களாகத் தொடுக்கபட்டன. மற்ற சீர்கள் ஆசிரியத்துக் கிசைந்த இயற்சீர்கள்,  ஆசிரிய அல்லது வெண்டளை. இக்கவியில் எழும் ஓசை. பிடிக்கிறதா பாருங்கள். பின்னூட்டம் இடவும். 

 


கண்டு மகிழ்க

.  மெய்ப்பு பின்

வியாழன், 17 பிப்ரவரி, 2022

முதியோர் இளைப்பாற வசதிகள்.

 முகமிகத்  திரைந்து  முடிநரை மிகுந்த

அகவையிற் பெரியோர் அமர்ந்திளைப்  பாற

நகுதரு சொற்களில் உரைதர மகிழ,

மிகுவல இரும்பில் இருக்கைகள் காண்க.


அடுக்கு மாடி வீட்டின தொகுதிகள்

அடித்தள வெற்றிடம் அனைத்திலும் உளவாம்

மடக்கியும் கால்களை மடித்திரு கைகளைத்  

துடிப்புறு சிறுபயிற் சிகளும் பெறுவரே.


காரை வடிப்பில் காண்பன பலவாம்

ஓரும் மரப்பல கையிலும்  நிலையல்

சீருடன் திகழும் சிங்கை நகர்தனில்

யாரும்  மகிழ வசதிகள் பலவே.



அருஞ்சொற்பொருள்

மிகுவல(ம்)  - மிகுந்த பலமுடைய

வீட்டின தொகுதிகள் -  வீடுகளையுடைய தொகுதிகள்.

காரை  -  சிமென்ட்.

வடிப்பில் --  வடித்தலில் ( செய்யப்படுவதைக் குறிக்கும்)

நிலையல் -  இருக்கும்

மெய்யெழுத்தெல்லாம் புள்ளியொடு நிலையல் என்ற தொடரில்

நிலையல் என்ற சொற்பயன்பாட்டினை அறிக.


கண்டு மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்


 




புதன், 16 பிப்ரவரி, 2022

மரியாதைராமன்

" எனபடுவது யாதெனின்" என்ற இருசொற்களையும் புணர்த்தினால்,  "எனப்படுவ   தியாதெனின்" என்று,  து> தி என மாறிவிடும்.  இது தமிழினியல்பு.  ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களில் படிக்கும் ஒரு மாணவி  "தியாதெனின்" என்ற சொல்லை அகரவரிசையில் தேடிக் காணாமல்  ஓர்  இணைய வலைத்தளத்திற்கு எழுதினார்.  தமிழ் எளிதான மொழியன்று என்பதுதான் நாம் இங்குக் கூறுவது. கொஞ்சக் காலம் தமிழுடன் நெருக்கம் கொண்டிருந்தாலன்றி இதுபோன்றவை எளிதில் புரிவதில்லை.

மேற்கண்ட புணர்ச்சியில் ஈற்று உகரம் இகரமாகிவிட்டது.  மிகவும் நுட்பமான ஒலிநூல் அறிவுடையோர் தமிழ்-  சமத்கிருத மொழிகளுடையோர்.

இப்போது மரியாதை என்ற சொல்லிலும் இத்தகு மாற்றம் உள்ளடங்கிக் கிடப்பதை அறியவேண்டும்.

மருவு, யாத்து, ஐ என்ற மூன்று துணிப்புகளா  னியன்றதே  மரியாதை என்னும் சொல். 

மருவுதல் என்பது வினைச்சொல்.   அதன் அடிச்சொல் மரு என்பது.

யாத்தல் என்பதாவது, கட்டுதல் என்பது.  யாத்து என்பது வினை எச்சம்.  இது இடைக்குறைந்து "யாது" என்று இச் சொல்லமைபில் வந்துள்ளது.  இது யாது என்ற வினாவன்று.

மரு + யாது + ஐ >  மரியாதை  ஆகிறது.

அதாவது, ஒரு விருந்தாளி வரும்போது,  கைகளால் அவரை மருவி  ( தழுவி ), யாத்து  ( கட்டிப்பிடித்து ), வருக என்பதே மரியாதை.  ஆணுக்கு ஆணும் பெண்ணுக்குப் பெண்ணுமாக இது நடைபெறும்.  

இத்தகைய வழக்கமும் தமிழரிடம் -  இந்தியரிடம் இருந்தது என்பதை இச்சொல் காட்டுகிறது.  இது பிறரிடமும் உள்ளது.

பிற்காலத்தில் இவ்வாறு அணைத்து வரவேற்றல் இன்றி வெறும் சொற்களால் "வாருங்கள்" என்று சொல்லிக் கைகூப்புதலையும் மரியாதை என்றனர்.  வணங்குதல் என்பது உடம்பையும் தலையையும் முன்பக்கலில் சாய்த்துத் தன் அன்பைத் தெரிவித்தல்.  இன்று சொல்லால் மட்டும் தெரிவித்தாலும் வணங்குதல் தான்.

பேச்சுவழக்கில் இதை "மருவாதை" என்போரும் உண்டு. இது திரிபு. இதை நீங்கள் விளக்கலாமே!

மரியாதை என்பதைப் சற்றுப் பேதமுறவும் விளக்கலாம். எல்லாம் சரிதான். சமத்கிருதம் பாலி முதலிய மொழிகளில் எச்சச் சொற்களினின்றும் சொல்லாக்கம் நிகழ்ந்துள்ளது அறிக.

மரியாதைராமன் என்பது, " மரியாதை அறா மன்" என்ற தொடரின் மரூஉ ஆகும். அதாவது மரியாதை அற்றுபோகாத மன்னவன் என்பது.  எப்போதும் மரியாதை வழுவாதவன் என்று கொண்டாடும் தொடர்.  அறாமன் என்பது ராமன் என்று திரிந்தது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.