"ஆல்" என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் "எல்லாம்" ( எல்லா) என்ற சொல் பொருளொற்றுமை உடையதாய் உள்ளது. அதுமட்டுமின்றி, ஓரளவு ஒலியொற்றுமை உடையதாயும் இருக்கின்றது. தமிழில் பல சொற்களில் இவ்வாறு ஒற்றுமை காணமுடிவதால், இதனை ஏனை ஐரோப்பிய மொழிகளோடும் ஒப்பு நோக்கி. சமத்கிருதம்போல் தமிழும் ஓர் இந்தோ ஐரோப்பிய மொழி என்ற முடிவுக்கு வரலாமெனினும், ஐரோப்பிய ஆய்வாளர்கள் இதனில் நாட்டம் செலுத்தவில்லை. ஓர் இருபது ஆண்டுகட்குமுன் இதைச் சிலர் எழுதிவந்தனர் என்றாலும், இப்போது அவர்கள் சற்று அசதி அடைந்துவிட்டார்கள் என்று சொல்வது உண்மையே ஆகும்.
எல்லாம் என்ற சொல்லின் பொருளில் எது எதுவெல்லாம் உள்ளடங்கும் என்பது இடம் பொருள் என்பனவற்றை வைத்தே தீர்மானிக்க வேண்டும். " எல்லாம் சாப்பிட்டுவிடு" என்று ஒரு தாய் பிள்ளையிடம் சொல்வாளாயின், அது தட்டில் அல்லது இலையில் உள்ள எல்லாம் என்றே பொருள்படும். " உலகில் உள்ள எல்லாம் " என்று பொருள்படமாட்டாது. அதுபோலவே, சர்வம் என்ற சொல் வரும்போதும், எல்லாம் என்று பொருள்தருவதும் ஓர் எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கும்.
சருவுதல் என்ற வினைக்கு என்ன பொருளென்றால்: பழகுதல் என்பதே ஆகும். எனவே சருவம் என்பது முதலில் ஒருவன் தான் பழகியவற்றையே குறித்தது. ஆதலின் சருவமும் பயன் அற்றது என்று சொன்னால், தாம் பழகிய அனைத்தும் பயனின்றி முடிந்தது என்பதுதான் பொருள். தமக்குப் பழக்கமற்றதையோ தான் அறிந்திராதவற்றையோ பெரும்பாலும் பேசுபவர் குறிப்பதில்லை. இன்னும் சொல்வதென்றால் எல்லாம் என்பதும் இடம் பொருள் ஆகியவற்றுக்கு ஒப்பவே பொருள் உணர்த்தும்.
சருவு என்ற வினையினின்று உண்டான சரி என்ற சொல்லும் "எல்லாம்" என்ற பொருளைக் குறிக்கக்கூடும். பலகாரமெல்லாம் சரியாகிப் போய்விட்டாது என்றால் அது முடிந்துவிட்டது, எல்லாம் தீர்ந்துவிட்டது என்று பொருள். எல்லாம் என்ற சொல்லைப் பயன்படுத்தாமலே, சரியாகிவிட்டது, ஆகிவிட்டது என்றெல்லாம் சொற்களைப் பயன்படுத்தி "அனைத்தும்" என்ற பொருளைத் தமிழில் உணர்த்தும் திறனைப் பேச்சுத்தமிழ் வழங்குவது அறிந்து இன்புறத் தக்கது.
ஆகவே, சருவு என்பதன் அடிச்சொல்லாகிய சரு என்பதில் தோன்றிய சரி என்பதை நினைவிலிருத்திக் கொள்ளுங்கள்.
விழாவுக்குச் சமைத்த உணவுக்கும் வந்த கூட்டத்துக்கும் சரியாக முடிந்தது என்றால் எல்லாம் தீர்ந்துவிட்டதென்ற பொருளையே முன்வைக்கின்றனர். சிலவேளைகளில் எல்லாம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது பணிவுக்குறைவாகக் கருதப்படுதலும் கூடும். ஆகவே இடமறிந்து சொற்களைக் கையாளுதல் வேண்டும்.
சருவுதல் என்பதிலிருந்து வந்த "சருவம்" என்பதும் முதலில் அறிந்த அனைத்தும் என்று குறித்து, பிற்காலத்தில் பொருள் விரிவு கொண்டதென்பது தெளிவாகிறது. சருவம் என்பது இப்போது சர்வம் என்ற வடிவில் உலவும்.
தேசம் என்ற சொல்லும் சங்க காலத்தில் தேஎம் என்றிருந்து பின் தேயம் என்றாகி, யகர சகரப் போலியால் தேசம் ஆனது. இப்போது "சர்வதேசம்" என்பது சமத்கிருதம் என்று கருதபடுவதுடன், அருகியே வழங்குகிறது.
சரு என்பதன் மூலம் அரு என்பது. அரு > சரு. அருகில் உள்ள என்று பொருள்தரும் அரு பின் சரு ஆனதில், அருகில் இருத்தலே பழக்கம் உடைத்தாதல் என்பதினால் மேல் சருவுதல் என்ற சொற்பொருளுடன் ஒப்புமை உடையதாதலைக் கண்டுகொள்க.
வருத்தகம் ( பொருள்களைத் தருவித்தல் அல்லது வருவித்தல் ) என்பதனால் வந்த சொல், பின் வர்த்தகம் என்று திரிந்து பொருளும் ஏற்றுமதி இறக்குமதி என இரண்டையும் குறித்தது. அதுபோலவே சருவம் என்பதும் சர்வம் என்று திரிந்து, பொருளும் விரிவுற்றது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்