செவ்வாய், 28 செப்டம்பர், 2021

ஆலிங்கனம் சொல்லாக்கம்

 ஆலிங்கனம் என்ற சொல்லை இன்று ஆய்வு செய்வோம்.  பார்ப்பதற்கு இது கடிக்கமுடியாத கடலைபோலத் தோன்றினாலும் உண்மையில் மிக்க எளிதாக அறியக்கூடிய தமிழ் மூலங்களை உடைய சொல்லே ஆகும்.  ஆலிங்க்,  ஆலிங்கன, ஆலிங்கித என்ற சொற்கள் சமத்கிருத  அகரவரிசையில் உள்ளன.  இதே மாதிரியான  சொற்கள்  தமிழ் அகரவரிசைகளிலும் உள்ளன.  இன்னும் கூறினால், இந்திய மொழிகளிலும் திரிபுகளுடன் இல்லாமல் போகாது.  செந்தமிழில் அணைத்தல் என்பது இவற்றுக்கு ஈடான சொல் ஆகும். தமிழிலும் இப்பொருளுடைய சொற்கள் பல கிடைக்கும்.  சிற்றூரில் கட்டிப்பிடித்தல் என்பர்.

இதன் உள்ளுறைவுகள் யாவை:

அகல் என்பது ஆல் என்று திரிந்துள்ளது.  அகல இடங்கொண்டு விழுதுகளுடன் நிற்கும் மரத்தின் பெயரும் அகல் > ஆல் என்றே திரிந்துள்ளது.  இதுபோலவே பகு> பகு அல் > பகல் > பால்  ( பிரிவு) என்ற சொல்லும் இதே பாணியில் திரிந்துள்ளது. இன்னும் பல காணலாம்.  எல்லாம் ஈண்டு பட்டியலிட வேண்டியதில்லை. ஒன்றிரண்டு போதும்.

தகல் > தால்  என்பவற்றின் தொடர்பினை இன்னோர் இடுகையில் கூறுவது நலம்..  தகல் ( தகு அல் ) > தால் > தாலாட்டு என்பது தக்கபடி பாடிக்கொண்டு தொட்டிலாட்டுவதையும்  தொங்கும் தொட்டிலை ஆட்டுவதால்  "தால் ஆட்டுதல்" என்று வந்த இருவகை அமைப்பையும் குறிக்கும்.  மறக்காமல் பின்னூட்டம் மூலம் நினைவுபடுத்திடுவது உதவியாய் இருக்கும். அப்போது அவ்விடுகையை விரைவில் எழுதலாம்.

ஆலி~~ என்பதில் வரும்  இகரம் இங்கு என்று பொருள்படும்.  அதில் வரும் கு அகல விரிந்த இருகைகள் அடுத்துள்ள உடலின்மேல் சேர்த்து இடுதலைக் குறிக்கும்.  கு என்பது சேர்விடம் குறிக்கும் பண்டைத்தமிழின் சொல்.  சென்னைக்கு, மதுரைக்கு, கோட்டைக்கு என்று வரும் அந்தக் கு தான் இங்கு வந்துள்ளது.  அன் என்ற இடைநிலையான சொன் அண் என்பதன் திரிபு.  இது அன்பு என்ற சொல்லில் இன்னும் இருக்கிறது.  ஆக்ககாலத் தமிழில் அண் - அன் எல்லாம் ஒன்றுதான்.  அம் என்ற விகுதி,   (மிகுதி - விகுதி:  சொல் இறுதித் துண்டு வந்திணைதலைக் குறிக்கும்)  ஒ.நோ:  விஞ்சு ><மிஞ்சு.   போலி. )  அமைவு குறிக்கும் இறுதிநிலை ஆகும்.

அகல் + இ +  கு +  அன் + அம்.

எல்லா  உள்ளுறைவுகளையும் திரிபோடு புணர்க்க,   ஆலிங்கனம் ஆகிவிட்டது.

கையை அகட்டித் தான் தழுவ முடியுமாதலால் அகல் >  ஆல் முன்மைத் திரிபு.

எந்த நூலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆலிங்கனம் தமிழ்தான்.

முந்தை நாட்களில், பரந்து ஐயர் வேலை பார்த்தவர்கள் பர ஐயர்களாகிய  பரையர்களே.  அவர்களின் மேலான கவி  வால்மிகி.  ( வலிமை மிக்கவர் அல்லது தூய்மை மிக்கவர் என்று பொருள் ).  இராமாயணம் பாடியவர்.  பாணன் - பாணினி இலக்கணம் எழுதினான்.  மீனவன் பாரதம் பாடினான்.  அவன் பரதவன்.  பரவை என்றால் பரந்ததாகிய கடல்.  இந்தப் புலவர்களால் இச்சொல் அமைக்கப்பட்டது என்பது அதன் துண்டுகளைப் பார்த்தால் தெளிவாய் இருக்கிறது.

அறிக மகிழ.

மெய்ப்பு பின்னர்.




திங்கள், 27 செப்டம்பர், 2021

தவ- தப என்ற அடிச்சொற் பொருள்.

 பல சொற்களை அணுகி ஆராய்ந்த பின்புதான் அடிச்சொல்லைக் கண்டுபிடிக்க முடியும்.   முடியுமென்றால் சிலவேளைகளில் முடியாமற் போவதையும் அது உள்ளடக்க வேண்டும்.  இதற்குக் காரணம், நாம் எதிர்பார்ப்பதெல்லாம் உலகில் நடந்துவிடுவதில்லை என்பதுதான்.

நந்தவனம் என்று குறிக்கும் ஓர் இடத்தில் காடுபோல பெரிய மரங்கள் இருப்பதில்லை.  செடிகள்,  கொடிகள்,  தாழ்வாக வளரும் சில சிறுவகை மரங்கள் இருக்கலாம்.  காடு எது, நந்தவனம் எது என்பது பெரும்பாலான மக்களுக்கு எடுத்துச்சொல்லாமலே புரியக்கூடியது என்பது எம் துணிபு.

தவனம் என்பதென்ன என்பதும் ஆய்வுக்குரியது.

தாவு + அள் + ஐ  என்ற உள்ளுறைவுகளையே தவளை என்னும் சொல்லுக்குக் காட்டியுள்ளோம்.  தாவு அளை எனினும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.

தாவு என்பதற்கும் தவழ் என்பதற்கும் தொடர்பு உள்ளது.  இவை இரண்டும் முற்செலவு குறிக்கும் சொற்கள். இவைதமக்குள் நுட்பவேறுபாடு வழக்கில் ஏற்படுவது ஆகும்.  தாவுதலில் தாவும் எதுவும் தவழ்தலினும் மேலெழுந்து பின் தரைக்குச் செல்லும் என்பதுதவிர,  முற்செலவில் வேறுபாடு ஒன்றுமில்லை. எனினும் இவற்றுள் இருக்கும் செயல் வேறுபாட்டினும்  தரையில் முற்செலவு என்ற பொதுக்கருத்தினை உன்னவேண்டும். 

தவளை என்ற சொல்போலவே தவணை என்ற சொல்லிலும் ஒரு தாவல் கருத்து உள்ளுறைந்துள்ளது. ஒரு தொகையைக் கொடுத்து, அப்புறம் இடையீடு விட்டு மீண்டும் ஒரு தொகையைக் கொடுத்து இவ்வாறாக,  தாவுதல் போலவே இச் செயலும் அமைந்துவிடுதல் காணலாம்.

தவறு அல்லது தவறுதலும் எப்போதும் ஏற்படுவதில்லை.  ஒருமுறை பிசகியும் அப்புறம் அதனின்று வழுவாமலும் அப்புறம் வழுவியும் மாறிமாறி இதுவும் ஏற்படும்.  கால்தவறுதல் என்ற வழக்கைக் காண்க.  எப்போதாவது ஒருமுறை கால் தவறுகிறது.

தப்புதலும் எப்போதும் நடவாமல் எப்போதாவது நடப்பதுதான்.  இதிலிருந்து தபு என்ற சொல் இடைக்குறைந்து தோன்றுகிறது.  அதில் அம் விகுதி இணைந்து தபம்>  தவம் ஆகிறது.  ப  > வ போலியால் ஏற்படும் மாற்றம் இது.  தவம் என்பதும் ஒரு குறிப்பிட்ட காலம் நடைபெற்று அப்புறம் முடிவதுதான். அதன் முடிவு ஒரு வெற்றி என்றும் கூறப்படும். வேண்டியதைப் பெற்ற மனநிறைவுடன்  அது முடிகிறது.

இந்தச் சொற்களிலெல்லாம் தவ, தப என்ற அடிச்சொற்கள் இடையீட்டுடன் நடைபெறுதலை  அடிச்சொல்லின் உள்ளுறை பொருளாகக் கண்டு உண்மையை உணரவேண்டும்.

இதைப் பின்னர் விரித்துணர்வோம்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர். 

வருந்திய நாய்க்குட்டியை அழைத்துக்கொள்ளுதல்.


 வருத்தமோ கொண்டாய் குட்டி?

வந்துநான் அமர்ந்தேன் ஒட்டி!

அருத்துவேன்  பாலும் சோறும்,

அருகில்நான் அமர்ந்து விட்டேன்.

திருத்தமாய் முடியைச் சீவி

சீரிலே உன் தாய்   ஆக,

ஒருத்தன் நான்  போதும் வாவா

உண்மையில் நானுன் அன்பன்.


உணராத மொட்டை  ஞாலம்

ஓயாத கலகம் நீளம்!

அணர்தரு அன்பே  இல்லார்

அழிபோரை நடத்திக் கொள்வார்!

துணிவற்ற மனிதர் வேண்டாம்.

 தூணாக நிற்பேன்  வாவா!

தனியன்பு தழைக்க வாழ்வாய்

தயங்காமல் அடுத்து வாவா.!


----- என்று நாய்க்குட்டியை அழைக்கிறார் இந்த மூத்த குடிமகன்.


அரும்பொருள்:

அருத்துவேன் -  அருந்தச் செய்வேன்.

அருந்து - தன்வினை.  அருத்து -  பிறவினை.

சீரிலே உன் தாய் - உன்னைச் சீராட்டுவதிலே உன் தாய்போல

ஞாலம் -  உலகம்

மொட்டை - பண்பு இல்லாத

நீளம் - நீளமான,  தொடரும்

அணர்தரு --  உயர்வுதருகின்ற.

அணர்தல் -  மேலெழல்.  அடிச்சொல்:  அண் ( நெருங்கு )

அழிபோர் -  அழிவு ஏற்படுத்தும் போர்கள்.

துணிவு அற்ற - மனத்துத்  திடம் இல்லாத

தூணாக -  பக்க பலமாக

தனியன்பு  -  ஒப்பிலாத அன்பு.


தொடர்புடைய இடுகைகள்:

https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_27.html

https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_50.html