எண்பது விழுக்காட்டினர் தடுப்பூசி அதனால்
நோய்பற்றிய புள்ளிவிவரங்கள் மாறின.
நூற்றிலெண் பதின்மர் நுடங்கார் நோயினால்
மாற்றிய மைத்ததே மகுட முகிநோய்
ஏற்றிய நோயுற் றுழந்தவர் தொகையினை;
ஆற்றினர் நற்றொண் டறிந்த மக்களே
நுடங்கார் - நோய்வாய்ப் படமாட்டார்.
மகுடமுகி - கொரானா நோய்
ஏற்றிய தொகை - கூடின புள்ளிகள்
உழந்தவர் - துன்புற்றோர்
தடுப்பூசியும் நோய்க்கிருமியை ஏமாற்றும் தந்திரமே
தடுப்பும ருந்தூ சிதனை ஏற்றவர்
தடுப்பினை மேற்கொள் தந்திறம் போற்றினர்
கெடுப்புதம் வாழ்வில் கிளைத்தெழா நோக்கமே
உடுப்ப துளத்தினில் ஓங்கிய பெற்றியர்.
தந்திறம் - தமது திறமை
ஏற்றவர் - தடுப்பூசியை ஏற்றுக்கொண்டவர்கள்.
கெடுப்பு - கெடுதல்.
உடுப்பது நோக்கம் உள்ளத்தினில் - --
உள்ளத்து நோக்கம் உடையவர்கள். உடுத்தல் - கொள்ளுதல்.
தடுப்பாற்றல் பெருகியது.
இறந்தவர் போக இருந்தவர் பலவரும்
சிறந்தனர் நோய்த்தடை உடலில் திரண்டிட;
பெருந்திறல் நோயடைப் பிதுவெனச் சொல்வதால்
அருந்திறல் இனிமேல் வாழ்வினில் இயல்பே.
இறந்தவர் - மகுடமுகி (கொரனா)வில் இறந்தவர்.
நோய்த்தடை உடலில் திரண்டிட - மந்தைத் தடுப்பாற்றல் உடலில் உண்டாக.
பெருந்திறல் நோயடைப்பு - மிக்கத் திறனுடைய நோய்த்தடுப்பு.
வாழ்வினில் இயல்பே - இனி, வாழ்வு இயல்பாகிவிடும்.
herd immunity - மந்தைத் நோய்த்தடுப்பாற்றல்
ந,ம் நம்பிக்கை
குறள்வெண்பா.
நோயிலா வாழ்வினி நோக்கயாம் மேயவோர்
ஆய்வுரை வேண்டற்பாற் றன்று.
பொருள்: இனி ஆய்வு செய்யவேண்டியதில்லை! இயல்பு
வாழ்க்கை திரும்பிவிடும்.