ஞாயிறு, 30 மே, 2021

தயாளம்

 தயாளம் என்ற சொல்லைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.

இதில் இரண்டு துண்டுகள் உள்ளன.  தயை  என்பதொன்று.  ஆளம் என்பது இன்னொன்று.  ஆளம் என்பது ஆளின்  தன்மை என்று பொருள்படும்.  

தயை என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அதனை இங்குக் காண்க:

https://sivamaalaa.blogspot.com/2019/06/blog-post_7.html

தயை என்பதை ஆளம் என்ற ஈற்றுடன் புணர்க்குங்காலை,  தயை என்பதன் இறுதி ஐ விகுதி கெடும் ( அதாவது அவ்விகுதி களைந்துவிடுதல் வேண்டும்). ஆகவே  தய + ஆளம் என்பவை சேரும்.

வன்மை பொருந்திய செயல்களைத் தவிர்த்து இரக்கம் காட்டுவதே தயாளம்.

தயாளம் என்று புணர்ந்து விளைதலின்,  இதுபோன்ற சந்திகள் தமிழில் உளவா என்று அறிதல் வேண்டும்.  உள்ளது, அதற்கு எடுத்துக்காட்டு:

மர + அடி =  மராடி என்பது காண்க. இஃது வகர உடம்படுமெய் இல்லாத புணர்ச்சி ஆகும். உடம்படு மெய் வரின்,  மர+ அடி > மரவடி என்று வரும். அல்லது அத்துச் சாரியை பெற்று,  மரம் + அத்து + அடி =  மரத்தடி எனவாகும்.

அத்து என்னும் சாரியை உண்மையில் அது என்னும் சுட்டுப்பெயரில் தோன்றிய இரட்டிப்புச் சொல் தான்.  அது >  அத்து. ( தகர இரட்டிப்பு).   த் + த் + உ >  த்து  ஆகும்.  "அது"   இதற்கு மூலம் என்பதைக் கூறுவதில்லை. 

மெய்ப்பு பின்னர்.



வெள்ளி, 28 மே, 2021

மளிகைப் பொருள்கள் மற்றும் கடை.

 மளிகைப் பொருள்பற்றிய இச்சிறு எழுத்துப்படைப்பை, மள்ளர் என்னும் சொல்லிலிருந்து தொடங்குதல்,  விடயத்தை விளக்குவதற்கு எளிமைதரும் என்பது எம் நினைப்பாதலின்  அவ்வாறே இவண் செய்வோம். 

மள்ளர் -  சொற்பொருள்

மள்ளர் என்னும் சொல் பலவிதத் தொழிலரையும் அல்லது மக்களையும் குறிக்குமென்று நம் நூல்களின்வழி அறிகின்றோம்.   இவர்களாவர்:  உழவர், குறவர், படைவீரர்,  மறவர்,  இளைஞர்,  குறிஞ்சி நிலத்து வாழ்நராகிய பொதுமக்கள் ஆகியோர் எனலாம். இவர்கள் அனைவரையும் அல்லது இவர்களில் எவரையும் இச்சொல் குறித்தற்குக் காரணம்,  இவர்கள் எல்லோரும் உடலால் வலிமை பொருந்தியவர்களாக இருத்தல்தான். (அதாவது உடலுழைப்பால்-- உடல்வலிமையால் பிழைப்போர்).  பண்டைத் தமிழர் உடல்வலிய மக்களை இச்சொல்லால் சுட்டினர் என்று தெரிகிறது.  பள்ளர் என்ற சொல்லும் மள்ளர் என்று திரிதலால் ஆய்வில் சில குழப்படிகள் தோன்றுதல் இயல்பு.  எனினும் இவ்வாய்வுக்குப் பள்ளர் என்னும் சொல்லை நாம் தவிர்த்துவிடுதல் நலம். *

மள்ளல் என்ற சொல் வலிமை குறித்தலால் அதனின்று தோன்றிய மள்ளர் என்ற பலர்பால் சொல்லும் உடல்வலியோர் என்ற பொதுப்பொருள் பெறுமென்பது எளிதின் உணரப்படுவதாகும்.

அடிச்சொல் நோக்கு

இச்சொல்லின் அடிச்சொல் மள் என்பதே.  இகுதல் என்பது இறங்கி வருதல் என்ற பொருளுடைய  சொல்.   மள் + இகு + ஐ  = மளிகை.   மள்ளர் என்ற முன் சொன்ன மக்களிடமிருந்து இறங்கும் அல்லது உண்டாகி விற்பனைக்கு வரும் பொருள் என்று அர்த்தம்  வருகிறது.  இகுதல் என்ற சொல்,  அணியியல் முறையில் இச்சொல்லில் கையாளப்பட்டுள்ளது  என்று முடிக்கவேண்டும்.  நீர் இறங்குதல் போலும் கீழ்வருதல் என்ற ஒப்புமை.

மள் + இ + கு + ஐ  :  மள்ளரிடமிருந்து இங்கு (வந்து) சேர்ந்த பொருள் எனினும் ஆம்.  இ - சுட்டுச்சொல், இங்கு.  கு - சேர்விடம் குறிக்கும் சொல்.   ஐ -   விகுதி.  

மள்ளர் எனற்பால சொல்,  மள் என்று குறுகி நின்றமை,  "பள்ளருடைய சேரி" என்ற சொல்தொடர் பச்சேரி என்று வந்ததுபோலுமே  ஆகும். இவ்வாறு இடையில் நின்ற சொற்கள் மற்றும் எழுத்துகள் மறைந்த சொற்கள் பலவாதலின், இக்குறைவுகள் பற்றி ஒன்று விரித்தற்கில்லை.

தோற்றப்பொருண்மை மறைவு

மள்ளர் விளைத்த பொருட்களை விற்கும் கடை மளிகைக்கடை. ஆனால் இன்று இப்பொருள் தொல்காப்பியர் கூறியதுபோல் விழிப்பத் தோன்றாததாகிவிட்டது எனலாம். இன்று யார் விளைத்த பொருளாயினும் விற்கும் கடை,  ஆயின் பெரிதும் சமைக்காத உண்பொருள்கள்,  தானியங்கள் மசாலா இன்னும் பல விற்பனை செய்வோரைக் குறிக்கும். 1

"மள்" சொற்பொருண்மை அறிதல். 

மளிகை என்ற சொல்லில் வரும் "மள்" அடிச்சொல், இத்தரத்து மக்கள் அனைவருக்கும் பொதுப்பண்பாகிய வலிமை என்ற பொருண்மையை உடையது. இவ்வலிமைப் பொருளை  வல் > மல் > மள் என்ற திரிபுகளிற் கண்டுகொள்ளுக. இவற்றில் விளைந்த முழுச்சொற்களுக்கு எடுத்துக்காட்டு,  முறையே  1 வலிமை,  2 மல்லன்,  மல்லு வேட்டி (துணி),  மள்ளல் என்றவை. திரிபு செல்வழி:  மள் > மளி> மளிகை. மள்ளர் என்பது மக்களைக் குறித்தபடியாலும் மள் என்ற அடியில் அப்பொருள் இன்மையாலும் மள்ளர் என்ற சொல்லமைந்த பின்னரே அவர்கள் விளைபொருள் என்பதைக் குறிக்க மள்ளர் + இ + கை > மள் + இ + கை > மளிகை என்று மீண்டும் குறுகியது.  இது சொல்லாக்கத்துக் குறுக்கம்.  இப்படி அமைந்த இன்னொரு சொல் பச்சேரி  --மேலே காட்டப்பட்டது. மளிகை என்ற சொல்லமைப்பின்  பின்பு,  மள் என்ற அடிக்கு மள்ளர் என்ற கூடுதற்பொருளும் வந்துற்றது அறிக. இதைச் சுருக்கமாக விளக்க,  மள்ளர் > மள்ளரிகை > மளிகை எனின்,  ள் என்ற மெய் இடைக்குறைதலும், ரகர மெய் வீழ்தலும்,  இகரம் ளகர ஒற்றின்மேல் ஏறுதலும் ஆகிய எழுத்துமாற்றங்களை விளக்கவேண்டும். மளிகை, பச்சேரி முதலியவை பேச்சில் விளைந்த குறுக்கங்கள்.   மள்ளர் > மளி > மளிகை என்று காட்டுதல் எளிது.  மள்ளரிகை என்பது உணர்விக்க எழுந்த கற்பனைச் சொல்  அல்லது ஓர்ந்தமைவு.

திரிபுகள் 

மள்ளரிடமிருந்து விளைபொருள்களை வாங்கிக் காயவைத்து விற்றுவந்த செட்டியை மள்ளர்காய்ச் செட்டி > மள்ளிகாய்ச் செட்டி > மளிகைச் செட்டி என்று திரிபால் குறித்து, பின் அதிலிருந்து செட்டியை விட்டு,  மளிகை , மளிகைச் சாமான் என்று வரினும் மிகப்பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.  மள்ளர் என்ற சொல்லில் மாற்றமில்லை. சொல்லிறுதி ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளைத் தெரிவிப்பது தவிர அடிப்படைச் சொல்லின் அமைப்பில் உள்ளுறைவுகள் சிறுமாற்றங்கள் அடைவதால் அடிப்படைப் பேதங்கள் இல.

மள்ளி கையால் கொண்டுவந்து விற்ற உணவுப் பொருள் என்றும் விளக்கலாம்.

மள்ளி கை >  மளிகை ( இடைக்குறைந்தது ள் ).   அடிச்சொல் மள் என்பதே.

மள்ளர் பெண் : மள்ளி,  பள்ளன் > பள்ளி, கள்ளன் - கள்ளி, குள்ளன் > குள்ளி போன்ற அமைப்பு. மக்கள் பேச்சில் உருவாக்கிக் கொள்வன. பேச்சுமொழி மிக்க விரிவானது ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


குறிப்புகள்

*..களம்புகு மள்ளர் (கலித்தொகை. 106). 3  படைத்தலைவன். (சூடாமணி நிகண்டு.) 4.  இளைஞன். பொருவிறல் மள்ள (திருமுருகாற்றுப்படை. 262). 5.  மருதநிலத்தில் வாழ்வோன். (திவாகரம்) மள்ளர் உழுபகடு  உரப்புவார் (கம்பராமாயணம். நாட். 18). 6.  குறிஞ்சிநிலத்தில் வாழ்வோன். (சூடாமணி.)

இதையும் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2019/09/blog-post.html

1. உயிரற்ற பொருள்கள் , காய்ந்த பொருட்கள். 

அப்போதும் மள் > மளி என்பதே அடிச்சொல். ஆனால் விளக்கம் கொஞ்சம் வேறுபடும்.

( பச்சையாக இல்லாமல்)

மள்ளன் - மள்ளி. (பெண்பால்)

சில தவிர்க்கப்பட்ட விளக்கங்கள் சேர்க்கப்பட்டன. 29052021 0645. We could not resolve the error in spacing whilst editing.  There may be a bug. Repeated attempts managed to make the Notes herein appear in the post.


வியாழன், 27 மே, 2021

இறைவனுக்குப் பூவலங்காரம்

 ஒரு வேலை இல்லாத மகனுக்கு  அவன்  தந்தை ஒரு நாளைக்குப் பத்து வெள்ளி செலவுக்குத் தருவதாகச்  சொல்லியிருந்தார்.  அதைப் போய் மகன் ஒருவாரத்துக்கும் சேர்த்து எழுபது வெள்ளி பெற்றுக்கொண்டான்..   அதன்பின் அவனுடைய ஓர் உறவுப் பெண்ணிடம் பூ வாங்கிக்கொண்டு வரும்படி கூறினான்.  அவள் இரண்டு வெள்ளிக்கு ஒரு பைக்கட்டுப் பூக்கள் வாங்கிக்கொணர்ந்து கொடுத்தாள்.  அந்தப் பெண்ணின்மேல் அவன் அளவுகடந்த அன்பு வைத்திருந்தமையால்,  அந்த எழுபது வெள்ளியையும் "நீயே வைத்துக்கொள்" என்று அவளிடம் கொடுத்துவிட்டான்.  

அதன்பின் அந்த மலர்களை இறைவனுக்குச் சாத்தி வணங்கினான்.  அப்போது  தந்தை அங்கே தாளிகை படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான். அக்கணத்தில் எழுபது வெள்ளியும் போய்விட்டதே என்று தன் செயலுக்குத் தானே திடுக்கிட்டவனாய்,  அவன் தான்  " இழந்த" எழுபது வெள்ளிக்கு  ஒரு சிறு ஈடாக, "சாமிக்குப்  பூப்போடப் பத்து வெள்ளி கொடுங்கள்" என்று தந்தையிடம் கேட்டான். தாம்  முன்னரே எழுபது வெள்ளி  ஒரு வாரத்துக்குக் கொடுத்துவிட்ட படியினால், அவர்,  உனக்கு   "எழுபது வெள்ளி கொடுத்துவிட்டேன்.  அது ஒரு வாரத்துக்கு!  வேறு காசு கொடுக்கமுடியாது" என்று சொல்லிவிட்டார்..  "இது சாமிக்கு" என்றான்.  அவர்: " எதற்காக இருந்தாலும் நான் கொடுத்ததை வைத்து நீ உன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்"  என்றார்.

"இது சாமிக்கு அப்பா!"  என்று அவன் வலியுறுத்த,   "கொடுத்ததில் ஒரு சிறு தொகையைச் சாமிக்குப் பயன்படுத்த நீ கற்றுக்கொள்"  என்று சொல்லி அவர் போய்விட்டார்.  அங்கு அவனுடைய நண்பன் ஒருவன் அப்போது வந்தான்.  "என்ன, முகம் வாடியிருக்கிறது" என்று கேட்டு, நடந்ததை அறிந்துகொண்டான்.

"எழுபது வெள்ளியை என்ன செய்தாய்?  அதில் ஒரு சிறு பகுதியையாவது சாமிக்கு ஒதுக்கி இருக்கலாமே.  இது உன்னுடைய  மடத்தனம் தான். எப்படியும் சாமிக்கும் பூ போய்ச் சேர்ந்துவிட்டது!  இனிச் சாமி பெயரைச் சொல்லி நீ எதுவும் கேட்டிருக்கக் கூடாது. சாமிக்கு வைத்ததற்கு இழப்பீடு வாங்குவது ஓர் அறியாமை  ஆகிவிடும்..  அதை இழப்பு என்று கருதும் உனக்கு எப்படி அருள் கிட்டும்? உன் அப்பன் உன்னிடமோ யாரிடமுமோ  'சாமிக்குப் பூ வாங்கித் தருவேன்' என்று சொல்லவில்லை. அந்த ஒப்பந்தம் இறைவனுடன் உனக்கு உள்ள ஒப்பந்தம்.  அதை உருண்டு புரண்டு அழுது புலம்பியாவது நீ தான் நிறைவேற்றவேண்டும்! உன் அப்பா "இதைத் தருகிறேன்" என்று சாமியிடம் சொல்லி இருந்தால் அதற்கு அவர் பொறுப்பாளி.  அவர் சொல்லவில்லை. இதற்குப் பிறரைப் பொறுப்பாளி ஆக்குவதற்கு உனக்கு இறைவன் எந்த அதிகாரத்தையும் தரவில்லை என்பதை நீ உணரவேண்டும்"  என்று சொல்ல, அம் மகன் ஒன்றும் மறுமொழி சொல்லாமல் இருந்துவிட்டான்.

ஒரு நாள் கழித்து அவனுக்கு அவனுடைய சாமியின் நினைப்பு மீண்டும் வந்தது. பூ வாங்கவோ காசில்லை. தோட்டத்தில் போய்ப் பார்த்தபோது ஒரு செடியில் மூன்று பூக்கள் இருந்தன.  அதில் ஒன்றைச் செடிக்கே விட்டுவிட்டு, இரண்டு பூக்களைக் கொணர்ந்து அவனுடைய சாமிக்கு வைத்து வணங்கினான்.

ஒரு பூ என் காணிக்கையாகவும் இன்னொரு பூ என் தந்தையின் காணிக்கையாகவும் ஏற்றுக்கொள் என்று மனமுருகி இறைஞ்சினான்.

பூ என்பது மனத்தைக் குறிக்கிறது.  பூ மலர்வதுபோல் உள்ளமும் மலரும் தன்மையது  ஆகும்.  பூ வைத்தால் 'என் மனத்தை உனக்குத் தருகிறேன்' என்பதற்கு அறிகுறி. இறைப்பற்று முதிர்ந்த நிலையில் பற்றன் தன் மனமலரை இறைவன்முன் வைத்து வணங்குவதும்   உயர்மலர்  அது ஆகும்  .  அம்மகன் பின்னர் வைத்த இரண்டில் ஒரு பூ அவன் உள்ளத்தையும் இன்னொரு பூ அவன் தந்தையின் உள்ளத்தையும் படியொளிருமாறு மனத்தில் எண்ணிக்கொண்டு,  ஏற்குமாறு கேட்டுக்கொண்டான். தொழுகையில் இது சரியானது: பிறருக்காகவும் இறைஞ்சும் உள்ளம் இவனுக்கு வந்துற்றது. செடியை மொட்டையடித்துவிடாமல் சிறிது விட்டுவைக்கும் இரக்கமும் இவனுக்கு உண்டாகிவிட்டது.  செடிகொடிகள் முதல் எல்லா உயிர்கள் பாலும் இரங்கும் மனம் ஒரு பற்றனுக்கு வேண்டும்;  அதையே இறைவனும் விரும்புகிறார் என்பது பற்றாளனின் உணர்வாய் இருத்தல் முதன்மைப் பண்பாகும்.

நம்  செயலுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். பிறருக்காகவும் இறைஞ்சுதல் வேண்டும்.  ஒரு பற்றாளன் தற்குறியாதல் கூடாது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.