தமிழ்நாட்டின் பல இடங்களில் குரங்குகள் மிகுதியாக உள்ளன. இவை பல்விதமாயின வேடிக்கைகளையும் குறும்புகளையும் செய்து வருகை புரிவோருக்கு எரிச்சலையும் மகிழ்ச்சியையும் விளைவிப்பன. இங்கு( மலேசியா), எங்கள் வீட்டுக்கு வெளிப்புறத்தில் வாழை மரம், மாமரம், முருங்கை எனப் பல மரங்கள் இருந்தன. அவற்றில் வந்து அமர்ந்துவிட்டுச் சலிப்பினாலோ என்னவோ உடனே கூரைக்குத் தாவிச் சென்று அங்குள்ள ஓடுகளைப் பிய்த்துக் கீழே எரியும் குறும்பு வேலையையும் செய்துள்ளன. இந்தத் தொல்லை கொஞ்ச காலம் நீடித்திருந்து, அவைகள் வாழ்ந்த ஆற்றோரத்தில் வீடுகள் கட்டப்பட்டு, அங்கு வேலைசெய்த குத்தகைத் தொழிலாளிகளாலும் இயந்திரங்களாலும் அவை கொல்லப்பட்டும் விரட்டப்பட்டும் போய் இப்போது அவை இல்லையாயின. இந்தக் கோவிட்டுக்கு முன்புவரை அங்கு அமைதி நிலவிற்று என்றுதான் சொல்லவேண்டும் . இன்னும் அங்கு போய்ப் பார்க்கப் போக்குவரத்துகள் திறக்கப்படாதுள்ளன.
சில ஆண்டுகட்குமுன் நாங்கள் மருதமலை சென்றிருந்த போது, எங்கள் பாட்டியின் வெற்றிலை பாக்கு முடிச்சைக் குரங்கு எடுத்துக்கொண்டு போய் மற்ற குரங்குகளுடன் சேர்ந்து பிய்த்து எறிந்துவிட்டன. அப்புறம் கடைத்தெருவில் போய் மீண்டும் தேடி வாங்க வேண்டி நேர்ந்தது.
இவ்வளவு நெருக்கமாக அறியப்பட்ட குரங்குகளைப் பற்றி எழுதுவதில் மகிழ்ச்சிதான். இராமாயணத்தில் ஒரு பாத்திரமாக இது வருகிறது என்று எண்ணிடினும், உண்மையில் அங்கு அனுமன் என்ற பெயருடன் வருபவர் ஓர் பத்தி~ ( பற்று > பற்றி > பத்தி > பக்தி ) ~மான் மற்றும் அரசர் ஆவார்.' வையத்து வாழ்வாங்கு வாழ்ந்தோன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுமென நாயனார் நயந்த குறளுக்கொப்ப, இற்றை நாளில் வணங்கப் படுபவரும் ஆவார். நன்மையே புரிந்த இவர்தம் நாமம் போற்றி.
குரங்குக்குக் "கபி" என்ற பெயரும் உளது. "மந்தி சிந்து கனிகளுக்கு வான்கபிகள் கெஞ்சும்." என்ற பாடல்வரி நினைவுக்கு வருகிறது. மரக்கிளையைக் குறிப்பதும் காட்டைக்குறிப்பதும் உடைய பல்பொருட் சொல் கவை என்பது. இச்சொல்லுக்குப் பிற பொருளும் உள. கவை + இ > கவி > கபி . ஐகாரம் கெட்டது. அடுத்து வகர பகரத் திரிபு. இது மரக்கவைகளைப் பற்றித் தாவித் திரிவன என்பது பொருள். ஆனால் குரங்கு என்ற பெயர் , குரல், குரை என்ற ஒலிசெய்தலுடன் தொடர்புடையது. குர்+ அம் + கு என்ற எழுத்துகள் புணர்ந்த சொல்லுக்குப் பொருள் "குர்ர்" ஒலியுடன் அமைந்த விலங்கு என்பதுதான். குரவை ( சிலப். ஆய்ச்சியர் குரவை ), குரு , குரவர் முதலிய சொற்களும் ஒலி பற்றிய கருத்துகளை உள்ளடக்கியவையே ஆகும்.
ஒலிபற்றிச் சொல் அமைந்தது சரிதான். அது கொம்பேறித் தாவும் குரங்கு ஆயிற்றே. அக்கருத்தை அடக்கிய இன்ன்னொரு சொல் உண்டா எனின், தமிழில் உண்டு. மரத்துக்கு மரம் கடந்து வாழ்வதால், அது " மரக் கடம்". (வேங்கடம் - கடக்கும் வெம்மைமிகு மலை). ஆயின் இச்சொல் திரிந்து மர்க்கடம் என்று வழங்குகிறது. இது வருத்தகம்1 என்பது வர்த்தகம் என்று மாறியது போல்வது. கொம்புகளை த் தழுவி (மருவி) இடம்பெயர்தல் செய்வதால், மருக் கடம் > மர்க்கடம் எனினும் ஒக்கும். இவற்றுக்கு அடிச் சொல் மர் என்பது ஒன்றுதான். உள்ளுறையின் வரையறவு சற்றே வேறுபட்டாலும் இரண்டும் குரங்குடன் ஒன்றிப் பொருந்துவனவே.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
1 வருத்தகம் > வர்த்தகம்: பொருள்களை வருத்துவது: அதாவது வருவிப்பது. அது பின்பு பொருள் ஏற்றுமதியையும் குறிக்க விரிந்தது.